Monday, September 2, 2013

The Pursuit Of Happyness: விமர்சனம் - கண்ணீர் காவியம்!

கண்டிப்பாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்: இளமையில் கொடுமை வறுமை என்று ஔவையார் சொல்லிய வரிகளுக்கான அர்த்தத்தினை எம் வாழ் நாளில் நாம் ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் கடந்து வந்திருப்போம். ஒரு இளைஞனின் வாழ்வில் வறுமை வந்தால் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து தள்ளாடும் தன் வாழ்வினைத் தூக்கி நிறுத்திட அவன் முயற்சி செய்வான். ஆனால் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வில் வறுமை ஏற்பட்டால் அவனது நிலமை என்னாகும்? உலகில் இடம் பெற்ற யுத்தங்களில் பெரும்பாலான யுத்தங்கள் பசிக் கொடுமையினாலும், ஆற்றாத வறுமைப் பிணியினாலும் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் இன்றும் ஆபிரிக்க கண்டத்தில் கொடிய வறுமையின் காரணத்தினால் பல துயரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
எம் போன்ற பிற நாட்டவர்களின் பார்வையில் அமெரிக்கா எனப்படுவது முதலாளித்துவ நாடு! பிற நாடுகளைச் சுறண்டித் தம் விடா முயற்சியினால் செல்வச் செழிப்போடு விளங்கும் நாடு.ஆனால் அந்த அமெரிக்கப் பொருளாதாரத்தினை ஒவ்வோர் தடவையும் ஆட்டம் காணச் செய்து பொருளாதார ரீதியில் அமெரிக்காவின் ஸ்திரத் தன்மையினை வீழ்ச்சியடையச் செய்கின்ற சம்பவம் தான் வேலையில்லாப் பிரச்சினையாகும்(Recession). ஒரு திருமணமான ஆண், தன் மனைவியுடனும் ஐந்து வயது மகனுடனும் வாழ்ந்து வரும் போது, தன் வேலையினைப் பொருளதார வீழ்ச்சி காரணமாக இழந்த பின்னர், அவனது வாழ்வில் நிகழும் துயரங்கள் நிறைந்த சம்பவங்களை எம் கண் முன்னே காட்டி நிற்கும் ஒரு கண்ணீர் காவியம் தான் The Pursuit Of Happyness எனும் பெயரில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் எனும் வாக்கிற்கமைவாக இத் திரைப்படத்தின் கதா நாயகன் கிரிஸ் (Chris) அவர்களுடன் மனைவியாக வாழ்ந்து வரும் லின்டா வறுமையின் பிடியில் கணவன் சிக்கி, வேலையேதுமின்றி வீட்டில் உட்கார்ந்திருக்கும் போது; அவருடன் வாழ விருப்பமின்றி தன் குழந்தையினையும் கை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறிச் நியூயோர்க் சென்று வாழ ஆரம்பிப்பதும், தன் மகனுடன், வறுமையின் பிடியில் சிக்கி தன் வாழ்க்கையினை நகர்த்த முடியாது திண்டாடும் கிரிஸ் அவர்கள் தான் குடியிருந்த வீட்டினை விட்டு விலகி, இறுதியில் வாடகை ஓட்டலில் குடியிருந்து அங்கும் பணங் கொடுக்க மனமின்றி தவிப்போடு தனக்கான இருப்பிடத்தினைத் தேடிச் செல்லுவதும் எம் மனதில் கவலையினை வர வைக்கும் யதார்த்தம் நிறைந்த காட்சிகளாகும். 
கொஞ்சம் உணர்வு பூர்வமாக இப் படத்தினை நீங்கள் ஒன்றித்துப் பார்க்கும் போது; ஒரு கட்டத்தில் இருப்பிடம் ஏதுமின்றி தன் கையில் இருக்கும் நோயாளிகளின் குருதி அமுக்கத்தினைப் பரிசோதிக்கும் இயந்திரத்தினை டைம் மெசின் (காலக் கடிகாரம்) எனத் தன் மகன் கிறிஸ்தோபருக்குப் பொய் சொல்லி, அவனைத் தூங்க வைப்பதற்காக புகையிரத நிலைய மலசல கூடத்தினைத் தெரிவு செய்யும் காட்சிகளும் என்ன வாழ்க்கை இது என்கின்ற வெறுப்பு நிறைந்த உணர்வினை எம் மனதில் கண்டிப்பாக வரவைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது Oh! Shit! What the hell! IS that Life? என எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்.
தொழிலேதுமின்றித் திண்டாடும் நாயகனின் கையில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சிறியளவிலான மூலதனம் தான் மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தும் விற்பனை இயந்திரமாகும். மருத்துவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தினை ஒவ்வோர் வைத்தியசாலைக்கும் சென்று மருத்துவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மருத்துவருக்கு அவ் இயந்திரம் பிடித்திருந்து அவர் வாங்கினால் பணம் கிடைக்கும். இல்லையேல் அடுத்த மருத்துவமனையினை நாட வேண்டும். இந்த மெசினை கொண்டு செல்லும் ஒவ்வோர் வேளையும் ஒவ்வோர் இடங்களில் தவற விட்டு விட்டு பின்னர் கவலை தோய்ந்த முகத்தோடு ஓடிச் சென்று அம் மிசினைத் தேடுவதனூடாக இப் படத்தின் கதா நாயகன் வில் சிமித் அவர்களின் உணர்வு பூர்வமான நடிப்பு மனதில் பதிந்து விடுகின்றது. 
மனைவியின்றி வறுமையின் பிடியில், தன் சிறு குழந்தையின் ஆசைகளை - ஆவலினை - விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவராகவும், தன் வாழ்க்கையினை மேம்படுத்த முடியாதவராகவும் திண்டாடும் கிரிஸ் அவர்களது வாழ்வினை முன்னேற்றுவதற்கு இருக்கின்ற இறுதி அஸ்திரம் தான் தன்னம்பிக்கை! அந்தத் தன்னம்பிக்கையினைக் கொண்டு நாயகன் கிரிஸ் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறினார்? அவரைச் சூழ்ந்துள்ள கடன் தொல்லைகள் யாவும் தீரும் வண்ணம் எவ்வாறு செயற்பட்டார்? ஆகிய வினாக்களுக்கான விடைகளை நீங்கள் இத் திரைப்படத்தினைப் பார்ப்பதனூடாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உதவுவோர் யாருமின்றி, இருப்பதற்கு வீடும் இன்றி அநாதைகள் - வீடற்றோர் தங்கும் காப்பகத்தினை நாடிச் சென்று வரிசையில் நின்று அங்கும் இருப்பிடம் கிடைக்காது தேவாலயம் நோக்கி நாயகன் தன் மகனைத் தூக்கி கொண்டு செல்லும் காட்சிகளும் உங்கள் மனங்களை கலங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை! இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதுவும், தன் பிள்ளையினைத் தூக்கிக் கொண்டு போய், ஆண்டவன் சன்னிதானத்தில் மண்டியிட்டு வேண்டுகின்ற காட்சியிருக்கிறதே! அப்பாடா! எவ்வளவு உணர்வு பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள். காமெடி கலந்த ஆக்சன் படங்களில் எம்மையெல்லாம் சிரிப்பூட்டித் தன் திறமையால் கட்டிப் போட்ட வில் சிமித் (Will Smith) அவர்கள் இத் திரைப்படத்தின் கதா நாயகனாக கிரிஸ் என்ற பாத்திரமேற்று நடித்திருக்கிறார். வில் சிமித் அவர்களின் மகன் Jaden Christopher Syre Smith அவர்கள் இப் படத்தில் வில்சிமித்தின் மகனாக நடித்திருக்கிறார். வில் சிமித்தின் மகன் Jaden Smith அவர்கள் நடித்த முதலாவது திரைப்படமும் இதுவாகும். வில் சிமித்தின் மனைவியாக நடிகை Thandie Newton அவர்கள் இப் படத்தில் லின்டா எனும் கதா பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.

நடிகை Thandie அவர்களுக்கு இத் திரைப் படத்தில் காட்சிகள் குறைவு என்பதால் வில் சிமித் அவர்களும், அவரது மகனும் உணர்வு பூர்வமான காட்சிகளினூடாக எம் கண்களைக் கலங்கச் செய்கிறார்கள். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தினை Columbia Pictures நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். 2006ம் ஆண்டு திரைக்கு வந்து பாக்ஸ் ஆப்பிசில் அண்ணளவாக $308,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது இப் படம். Andrea Guerra அவர்களின் மென்மையான இசை இப் படத்திற்கு எம் உணர்வுகளை உருக்கும் வண்ணம் மெரு கூட்டியிருக்கிறது. எம் மன உணர்வுகளை உருக்கும் இப் படத்தினை Gabriele Muccino அவர்கள் இயக்கியிருக்கின்றார். 
Steven Conrad அவர்கள் இப் படத்திற்கான வசன எழுத்துருவாக்கத்தில் பங்களிப்புச் செய்திருக்கிறார். வில் சிமித் அவர்களின் மேற்பார்வையில் உருவான இப் படத்திற்கான ஒளிப் பதிவினை Phedon Papamicheal அவர்கள் சிறப்புறச் செய்திருக்கிறார். படத்தில் குறைகள் என்று சொல்லுமளவிற்கு எவற்றையுமே அவதானிக்க முடியவில்லை. உணர்வுகளைத் உசுப்புகின்ற மென்மையான மெலடி ரகப் பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் வந்து எம் காதில் சோக இராகம் இசைத்துச் செல்கின்றது. $55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் வருமானமாக ஆறு மடங்கினை ஈட்டியிருக்கின்றார்கள். குடும்பத்துடன் நீங்கள் அனைவரும் இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். 

 பிற் சேர்க்கை: இப் படத்தின் தலைப்பே உங்களுக்கு நிறைய அர்த்தங்களைச் சொல்லி நிற்கும் என்று நினைக்கிறேன்.
The Pursuit Of Happyness: நம்பிக்கை எனும் ஆயுதத்தை மாத்திரம் மனதில் வைத்து வாழ்வில் எதிர் நீச்சல் போடும் ஒரு குடும்பஸ்தனின் அவல நிலையினை விளக்கும் காவியம்!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails