Thursday, September 19, 2013

கொப்பரையும் கொம்மாவையும் விட்டு கோதை நீ ஓடி வாடி!

கனகரின் கோப்பிறேசன்
கால் போத்தல் சாராயம்
மப்பேறியதும் மனதில்
அளவற்ற மகிழ்ச்சியூட்ட
மச்சான்ர குறைச் சுருட்டு!
மாலையில் கனிவூட்டும்
வடிசாலை பனங் கள்ளு
இவை யாவும் இருந்தாலும்
இணையில்லா இன்பம் தரும்
இளஞ் சிரிப்பு குமுதினியை போல்
என் இளமைக்கு ஈடாகுமா?
அணைக்கின்ற போது
கால் நகத்தால் கோடு கீறி
கண்களினை மையலுறச் செய்யும்
கன்னியவள் இனிக்கும் அரியதரம் - செல்லமாய்
அடித்தாலும் அவளுடன் வாழ வேண்டும் என
மனமோ எண்ணிக் கொள்ளும் பல தரம்!

உதடு கடிக்கையில் உவர்ப்பும் கசப்பும் சேர்த்து தரும்
உயிர் மூச்சவளின் இதழ்களோ டிப்பிளிசன் மாம்பழம்!
அணைக்கையில் இணை பிரியா உயிராக என்னுடன்
ஒட்டிக் கொள்ளும் அவளோ நிறத்தில் பாலப் பழம்!

தாழ் போடா வீடு - மெதுவாக
காலாட்டி நீயோ எப்போது
உள்ளே வருவாய் என
என் மனமும் நாடும்!
ஆளில்லா நேரம் அச்சம் விட்டு விலகிட
அக்கராயன் குளக் கட்டும் பார்த்து சிரிக்கும்!
அடியே குமுதினி நீயும் சைக்கிளில்
குறுக்காலே போகையில் மனமோ உன்
குறு குறு கனிகளின் துள்ளல் பார்த்து ரசிக்கும்!

கலியாணம் கட்டிட கச்சேரிக்கு போவோம் என்றேன்
பலியாடு நானாகிட உனக்கும் ஆசையோ என்றாள்!
அறியாத வயது! ஆனாலும் நீயோ எனை அடிக்கடி
தவிக்க வைக்கும் அந்த மாதிரி அழகி என்றேன்!
வளையாத மூங்கில் போல நீ நிமிர்ந்து நிற்கின்றாய்
வரிசையிலே உனக்காக பெண்கள் பலர் காத்திருக்கின்றார்!
இது கூட தெரியாது ஏன் நீயும் எனை பார்த்து
ஏகாந்த இராகம் இசைக்கின்றாய் என்று கேட்டாள்-
எனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்!
கொப்பரையும் விட்டு! கொம்மாவையும் விட்டு
கோதை நீ ஓடி வாடி என்று இரைஞ்சி கேட்டேன்!
மப்பினில் கவிதை பாடும் என் மன்னவா - உன் மனதில்
மங்கை என் மீதான ஆசை இன்னமும் தீரலையா?
தப்பது செய்த பின்னரும் என்னை தாளையடி மீன் போல
தள்ளி வைக்க மாட்டியா கிறுக்கா?
இப்பவே வருகிறேன்! ஆனாலும் ஒரு கண்டிசன்!
இரணைமடுக் குளக்கட்டில் நாமிருவரும்
இரவிரவாய் நீந்தி மகிழனும் என்றாள் - அடியே
அது என்ன இடுப்பளவு தண்ணீர் உள்ள குளமா?
ஆழம் அதிகமுள்ள குளமடி என்றேன் - அத்தான் உங்களுக்கு
அந்த மாதிரிக் கருத்தும் புரியலையே!
நீங்கள் ஓர் மொக்கு என்று கடிந்தாள் - என்
இதழை இறுக்கி கடித்தாள்!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
அரும்பத விளக்கங்கள்/ சொல் விளக்கங்கள்:

கோப்பிறேசன்/ கோப்பிரேசன்: Corporation - ஈழத்தில் கள்ளுத் தவறணை மற்றும் சாராய பாரினைச் செல்லமாக குறிக்கும் சொல்.
மப்பேறியதும்: போதை ஏறியதும்.
வடிசாலை: கள்ளு வடித்து விநியோகம் செய்யுமிடம்.
அரியதரம்: சீனிப் பணியாரம் அல்லது இனிப்பாக சிவப்பு அரிசி மாவில் செய்யப்படும் பணியாரம்/ பலகாரம்.
டிப்பிளிசன் மாம்பழம்/ மாங்காய்: கிளிச் சொண்டன் மாங்காய்.
பாலப் பழம்: வன்னியில் கிடைக்கும் இனிப்பு நிறைந்த மஞ்சள் நிற சிறிய அளவிலான பழம்.
அக்கராயன் குளக் கட்டு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் அணைக் கட்டு.
குறுக்காலே போதல்:  ஒருவரைக் கடந்து போதல். அல்லது குழப்பம் விளை விக்கும் நோக்கில் குறுக்கே செல்லுதல்.
கச்சேரி: மாவட்டத் திணைக்களம். அல்லது அரசாங்க அலுவலகம். இங்கே கச்சேரி Register Office எனும் பொருளில் வந்துள்ளது.
அந்த மாதிரி அழகி: சும்மா ஜோரான பிகரு அல்லது சூப்பரான அழகி!
கொப்பர்: அப்பா. அப்பன், அல்லது தந்தை.
கொம்மா: அம்மா.
தாளையடி மீன்: ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள தாளையடியில் பிடிக்கப்படும் மீன். சில நேரங்களில் நல்ல சுவையாக இருக்கும். சில வேளை சுவையாக இருக்காது.
அந்த மாதிரிக் கருத்து: இங்கே அந்த மாதிரி என்பது அந்த மாதிரியான அர்த்தத்தில் வந்துள்ளது. ஹி...ஹி..
மொக்கு: மக்கு.

இந்தக் கவிதை முற்று முழுதாக ஈழத்து மொழி வழக்கில் எழுதப்பட்ட ஓர் கவிதை!

மேலும் சில பதிவுகள்:

திரிஷாவின் பெயரில் ஆபாச வைரஸ் படையெடுப்பு - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்
கவர்ச்சி ஆசையால் பல்பு வாங்கிய ஸ்ருதிஹாசன் - படம் இணைப்பு
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails