Friday, September 20, 2013

THE OPPOSITE - ஓரினச் சேர்க்கையும் புரிதலற்ற தமிழ் சமூகமும்!

சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. 
அண்மைக் காலத்தில் எம் சமூகத்தில் காலாதி காலமாக நிலவி வந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பார்வை மாறுபட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களுள் அல்லது தம்மை ஒத்த பால் இனத்தோடு வாழ விரும்புவோருள் ஒரு மனதாக தமக்குப் பிடித்தமானவரை அல்லது மனதால் ஒரு தலையாக ஒருவரை நினைத்து வாழுவோர் அரிதிலும் அரிது என்றே கூறலாம். THE OPPOSITE எனும் குறும்படம் கொஞ்சம் வித்தியாசமான கதைக் கருவினைத் தன்னத்தே கொண்டு திரைக்கு வந்திருக்கின்றது. பிரான்ஸில் வாழுகின்ற ஈழத்துக் கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் அவதாரம் நிறுவனத்தின் வெளியாடாக வந்திருக்கும் குறும்படம் தான் இந்த THE OPPOSITE.
ஆண் பெண் ஆகிய இரு பாலாருக்கும் தம் எதிர்ப் பாலாரிடத்தே தான் ஆசையும் காதலும் கனவுகளும் தொற்றிக் கொள்ளும் என்பது காலங் காலமாக எம் தமிழ்த் திரைப்படங்களும் இலக்கியங்களும் பேசி நிற்கும் பழமை வாதக் கருப் பொருளாகும். ஆனால் இங்கே ஒரு பெண்ணை விரும்புகின்ற ஆண் மீது, இன்னோர் ஆண் தன் மனதால் காதல் வசப்பட்டுக் கொள்கின்றார். கொஞ்சம் வித்தியாசமாக அதே வேளை கொஞ்சம் புதுமையாகவும் யோசித்திருக்கின்றார் இக் குறும்படத்தின் இயக்குனர் M.சுதன் அவர்கள். 
ஆண் மகனொருவர் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிதலற்றவராக, ஓரினச் சேர்க்கை பற்றி ஏதும் அறியாதவராக இயல்பாகவே தன் ஆசையினை ஒரு பெண் மீது கொண்டிருக்கும் வேளையில்;
மற்றைய ஆண் மகன் பெண்ணை விரும்பும் ஆண் மீது ஒரு தலையாக காதல் வசப்பட்டு, இறுதியில் தன் ஒரு பாற் காதலை வெளியே சொல்லுகின்றார்.
மனதால் ஒரு தலைக் காதலாக உள்ள ஆணின் காதல் ஜெயித்ததா?அல்லது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதற்கான பதிலை நீங்கள் குறும் படத்தினைப் பார்ப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 
எதிரெதிர் எண்ணங்களை உடைய இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் வைத்து இக் குறும்படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் M.சுதன் அவர்கள். M.சுதன், சதாபிரணவன், சபரீனா ஆகியோர் THE OPPOSITE குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜனா அவர்கள் தன்னுடைய அழுத்தமான பின்னணி இசை ஊடாக இப் படத்திற்கு அணியிசை செய்திருக்கிறார். டெசுபன் அவர்கள் ஒளிப்பதிவிலும், எடிற்றிங்கிலும் தன் கை வண்ணத்தை நிரூபித்து இக் குறும்படத் தயாரிப்பிற்கு ஏனைய கலைஞர்களோடு இணைந்து உழைத்திருக்கிறார். வித்தியாசமான கருப் பொருளைக் கொண்ட, உங்கள் மனதைக் கொஞ்சம் கனக்கச் செய்யக் கூடிய கதை நகர்வினைக் கொண்ட இக் குறும்படமானது பல விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறது.

*IASF: (Toronto Tamil Film Festival 2011 )
The Runner up Best Film
Best Actor (Sathapranavan)


*Navalar Short Film Festival: (Paris 2011)
Best Actor (Sathapranavan)

*RWFF (ReelWorld Film Festival): (Toronto 2011)
Official Selection

*Festival of Sankilyan Viruthu: (Paris 2010)
3rd Price
Best Cinematography
Best Editing
Best Story

Best Direction 
ஈழத்துப் புலம் பெயர் சினிமா வரலாற்றில் வித்தியாசமான கருப் பொருளைக் கொண்டதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிப் பேசும் புதுமையான கருவினைக் கொண்டதாகவும் இந்தப் படம் வெளி வந்திருப்பது புதியதொரு திசையினை நோக்கிப் பயணிக்கும் ஈழச் சினிமாவின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.

THE OPPOSITE: ஒரு தலைக் காதலாக மனதினுள் புதைந்திருக்கும் ஓரினச் சேர்கையாளரின் உணர்வினைச் சொல்லும் உன்னத ஒளிச் சித்திரம்!

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails