Wednesday, September 4, 2013

அண்டி அண்டி கூத்தடிக்கும் அடுத்தாத்து பொம்பிளைங்கள்!

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் உணர்வுகள் வித்தியாசமானவை. மனம் ஒரு குரங்கு என்று நாம் வர்ணிப்பதற்கு அமைவாக எம் மனதில் பல்வேறு மாற்றங்கள் மரத்திற்கு மரம் மந்தி மாறி மாறித் தாவுவதனைப் போன்று தாவிக் கொண்டிருக்கும். ஒவ்வொர் மனிதனுக்கும் உள்ளே ஆத்திரம், சுய நலம் கலந்த மிருக உணர்வுகள் குடி கொண்டிருந்தாலும் சில வேளை அவ் உணர்வுகள் வாழ் நாள் பூராகவும் வெளித் தெரியாது அம் மனிதனை ஒரு நல்ல மனிதன் என்ற அடை மொழியோடு சுடு காட்டில் புதைத்து விடும். சில மனிதர்களது விரும்பத்தகாத உணர்வுகள் வெளித் தெரிவதன் ஊடாக பிறரது பார்வையில் அம் மனிதர்கள் மனித உருவில் உள்ள மிருகங்கள் எனும் அடை மொழியால் வர்ணிக்கப்படுகின்றார்கள். 
நாம் சிறு வயதில் அடுத்த வீட்டுப் பசங்களுடன் மண் விளையாடி,  பெட்டிக் கடை போட்டு சந்தோசம் கொண்டாடி மகிழத் தொடங்கும் காலத்திலிருந்து நாம் இறக்கும் வரை எம் கூடவே அண்டி விடும் நிகழ்வுகள் தொற்று நோய் போல தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அண்டி விடுதல் என்பது கோள் மூட்டுதல், வத்தி வைத்தல், போட்டுக் குடுத்தல், வம்பில் மாட்டி விடுதல், குறை சொல்லுதல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும். தமக்குப் பிடிக்காத ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லி அந் நபருக்குத் துன்பத்தினை ஏற்படுத்தி அவர் துன்பப்படும் வேளையில் நாம் பார்த்து ரசிப்பதனைத் தான் அண்டி விடுதல், கோள் மூட்டுதல், போட்டுக் குடுத்தல் என அழைப்பார்கள்.
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
சிறு வயதில் ஐந்தாம் கிளாஸ் படிக்கும் பசங்களில் ஒருவன் பக்கத்துக் கதிரையில் உள்ள பையனைக் கிள்ளி விட்டானே என்று ஆதங்கப்படும் மற்றையவன் உடனடியாக டீச்சரிடம் போட்டுக் குடுத்து அடி வாங்கிக் கொடுப்பான். தனக்கு கிள்ளியவன் செல்லமாக மெதுவாக கிள்ளியிருப்பினும் அவனை மாட்டி விட்டு அவன் வதைபடும் போது சந்தோசப்பட்டு மகிழ்வதென்பது ஐந்தாம் கிளாஸ் படிக்கும் சிறுவனின் மனதில் அப்போது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கும். இந்த மாதிரித் தன்னால் பிறருக்குத் துன்பத்தினை வரவைக்க முடியாத சந்தர்ப்பத்தில் பிறரிடம் போட்டுக் கொடுத்துத் துன்பத்தினை வைத்து, அந்தத் துன்பத்தினைப் பார்த்து ரசிப்பதனைத் தான் அண்டி விட்டுக் கூத்துப் பார்த்தல் எனச் சொல்லுவார்கள். 

அண்டி விட்டுக் கூத்துப் பார்ப்போரை இன்னோர் வகையில் நாரதர், சகுனி, சபை குழப்பி, வத்தி வைக்கும் நபர், கோள் மூட்டி எனவும் அழைப்பார்கள். நாரதரின் பணி உங்கள் அனைவருக்கும் தெரியும் அல்லவா. நாரதர் போன்று சமரச முயற்சிகளில் ஈடுபடுவோர், அல்லது இரு தரப்பினருக்கு மத்தியில் நடு நிலையாக நிற்பது போல் வேசம் போடுவோர் இரு தரப்பினரிடமும் சண்டையினை உருவாக்கும் நோக்கில் வத்தி வைப்பதனால் தான் நாரதர் என்று அழைக்கப்படுகின்றார்கள். சபை குழப்பிகள் என்போர் ஒரு நல்ல விடயம் இடம் பெறப் போகும் தருணம் பார்த்து ஏதாவது ஒரு வழியினைக் கையாண்டு சபையினைக் குழப்புகின்ற காரணத்தினால் சபை குழப்பிகள் என அழைக்கப்படுகின்றார்கள்.
சகுனி எனும் பாத்திரம் மகாபாரதக் கதைகளில் வகித்த பங்கு உங்கள் அனைவருக்கும் தெரியும் அல்லவா? சகுனி எனச் சொல்லப்படுவோர்; கல் நெஞ்சக்காரராக உள் மனதில் இரக்கமற்று இருப்பதோடு, சூது வாதில் வல்லவர்களாகவும்,சூழ்ச்சி முறையில் பிறரைக் குழி பறித்து வீழ்த்துவோராகவும் இருப்பார்கள்.நாரதர் போன்றோர் தந்திரம் மிக்கவர்களாகவும், நகைச்சுவைப் பேச்சினூடாக கலகம் விளைவிப்பதிலும் வல்லவர்களாக எம் சமூகத்தில் இருப்பார்கள். ஊரில் வேலை வெட்டியற்று இருப்போர், பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமற்று இருப்போர் தான் தம் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கும் நோக்கில் அண்டி விட்டுக் கூத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அண்டி விடுவதிலும், கூத்துப் பார்ப்பதிலும் பெண்களின் நிலையினை நான் சொல்லாமலே நீங்கள் இப்போது புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். இல்லத்தரசிகளும், அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களும் பொது இடங்களில் அல்லது சந்தைக்குப் போகும் போது, கோவிலுக்குப் போகையில் சந்தித்துக் கொள்ளும் போது வத்தி வைக்கும் முயற்சிகளில் மிகவும் திறமையாக ஈடுபடுவார்களாம். சந்தைக்குப் போகும் வழியில் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை இன்னோர் இல்லத்தரசி கண்டாலே போதும் "ஏன்டி பவளக்கொடி! உன்னோட ஆத்துக்குப் பக்கத்தில இருக்கிற கோமளவல்லியைப் பார்த்தியா? புது ஜரிகை போட்ட சாறி! கை நிறைய வளையல் எனப் பல விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து அழகு பார்க்கிறாள்! நீயும் தான் இருக்கியே?" இப்படித் தீயினைப் பற்ற வைத்து விடுவார்கள்.
இப்படிக் கேட்டாலே போதும்! பவளக்கொடியின் மனதில் அடுத்த வீட்டுப் பெண் மீது பொறாமை குடி கொண்டு விடும். கணவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் அன்பாக: "என்னங்க! நம்ம பக்கத்து ஆத்துப் பவளக் கொடிக்கு அவளோட புருசன் வித விதமான ஆடைகளை வாங்கிக் கொடுத்திருக்கானாம். நீங்களும் தான் இருக்கீங்களே! எனக்கும் வாங்கித் தரலாமில்லே?" என்று அன்பாக கேட்டுப் பார்ப்பார்கள்! கணவன் பணக் கஷ்டம், பொருளாதாரப் பிரச்சினை என்று கூறினாலே போதும். அப்புறம் என்னாகும்? புரிந்துணர்வற்ற மனைவி வீட்டில் பத்திரகாளியாகிடுவார்! இதனை விடப் பெண்கள் கூடும் இடங்களில் குசு குசு வள வள என்று பேசிக் கொண்டிருபார்கள்.

குசு குசுத்துப் பேசுவதனை ரகசியம் பேசுவதென்று நாம் அழைத்தாலும்;இன்னொருவரைப் பற்றி இன்னொருவரிடம் வத்தி வைப்பதனைத் தான் இந்தக் குசு குசுப் பேச்சினூடாகவும் பெண்களும் ஆண்களும் செய்து கொண்டிருப்பார்கள். அண்டி விடுதல், வத்தி வைத்தல் எனும் சொற்களுக்கான இலக்கணச் சொல் புறங் கூறலாகும். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசக் கூடாது என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் தனது பாப்பா பாடலில் அழகுறச் சொல்லியிருக்கிறார். சில இடங்களில் அண்டி விட்டுக் கூத்துப் பார்க்கும் நபர்களுக்கு இந்த மாதிரி நிகழ்வுகளால் வரும் விளைவுகள் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாகத் தான் இருக்கும்! 
அதே போன்று குடும்பத்தின் ஒற்றுமையினைச் சீர் குலைத்தல், நண்பர்களின் நட்பினைச் சீரழித்தல், பிரதேசங்களின் ஒற்றுமையினைச் சீர் குலைத்தல், இரு நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையினைச் சீரழித்தல் ஆகியவையும் இந்த அண்டி விட்டுக் கூத்துப் பார்க்கும் கோள் மூட்டிகளில் செயற்பாடுகளேயாகும்.இருவர் சண்டை பிடிப்பதனை ஒருவர் வேடிக்கையாக நோக்குவார் என்றால் நம் சமூகத்தில் கோள் மூட்டிகளுக்குப் பஞ்சமில்லை என்று தானே அர்த்தம்! எது எப்படியோ; "ஒற்றுமை நீங்கி வேற்றுமை தோன்ற வேண்டும், கலகம் பிறக்க வேண்டும்!" என நினைத்துச் சமூகத்தில் நாரதர்கள் ஏவல் / அண்டி விடும் செயல்கள் செய்யத் தொடங்கினால் அச் செயல்கள் அவர்கள் பார்வையில் வேடிக்கை விநோத நிகழ்வுகள் போலத் தான் இருக்குமாம்.
ஒட்டுக் கேட்டு ஒருவரைப் பற்றி அறிந்து இன்னொருவரிடம் கோள் மூட்டுவோர் ஒரு வகையினர். இதே போல ஒருவரிடம் போட்டு வாங்கி (Give and take) இன்னொருவருக்கு அவரைப் பற்றிய தகவல்களை வத்தி வைப்போர் இன்னொரு விதம், பசுவுக்குத் தெரியாமலே பாலைக் கறக்கிற ஜாதி போன்று பழகி விட்டு பாம்பாக கொத்து ஆப்பு வைப்போர் பல விதம் என எம் சமூகத்தில் Gossip People என ஆங்கிலத்தில் சிறப்பிக்கப்படும் ஒட்டுக் கேட்போர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். எப்போதுமே அடுத்தவனைப் பற்றிப் பேசிச் சுய இன்பம் காண்வதென்பது தமிழனின் பரம்பரை அலகுகளோடு ஒட்டிப் பிறந்த குணம் என்பதால் இன்றைய நவீன உலகிலும் இந்த வத்தி வைக்கும் பழக்க வழக்கம் தமிழனை விட்டு இல்லாது ஒழிந்திடுமா?

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails