Thursday, September 5, 2013

பரபரப்பூட்டும் பதிவர்களுக்கான ராசி பலன்கள் + கிசு கிசுக்கள்

வணக்கம் நண்பர்களே,  பதிவுலகில் அன்றாடம் தீயா வேலை செய்யும் நாம் ஒவ்வொருவரும் பதிவர்களுக்கான ராசி பலன்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்வாமி பதிவானந்தா அவர்கள் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் ஸ்வாமிஜி அவர்களின் கணிப்பின் பேரில் பதிவர் ராசி பலன்கள் இதோ உங்களுக்காக. 


மேஷம்
பதிவுலகில் உங்கள் கை ஓங்கி காணப்படும். தொட்ட தெல்லாம் துலங்குவது போல நீங்கள் எழுதும் பதிவுகளும் சூடான இடுகை, வாசகர் பரிந்துரை என எல்லா இடமும் வியாபித்திருக்கும். புதிது புதிதாக ப்ளாக் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் பதிவர்களுள் யார் ஓட்டுக்காகவும், கமெண்டிற்காகவும் உங்களைப் பின் தொடர்கிறார்கள் என்பதனை கண்டறிவீர்கள். உங்கள் வலைப் பூ சந்தோசங்களால் நிறைந்து காணப்படும். 
ரிஷபம்
எதையும் துணிச்சலாகச் சொல்லப் போய் எதிர்ப்புக்களில் மாட்டிக் கொள்வீர்கள். வகை தொகையின்றி அடிக்கடி மைனஸ் ஓட்டுக்களைப் பெறுவீர்கள். ஆனாலும் மனந் தளராது பதிவெழுதிக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஓட்டுக்களால் ஏற்படும் குறையை நிவர்த்தி செய்ய விரும்பின் ஸ்வாமி ஓட்டானந்தாவை  ஆறு திங்கள் வேண்டி வர இக் குறை நிவர்த்தியாகும். 
மிதுனம்
சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கித் தவிப்பீர்கள். பதிவெழுத இன்று எதுவும் சிக்கலையே எனும் நோக்கில் விபரீதமான தலைப்புக்களை வைத்து எழுதிப் பார்ப்பீர்கள். One india, வெப் துனியா, தினமணி என இணையத் தளங்களில் இருந்து காப்பி பேஸ்ட் போஸ்ட் எழுத முயற்சிப்பீர்கள். அதுவும் தேறவில்லை என்றால் பதிவர்களை வம்பிழுத்து பதிவெழுதி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள். உங்களுக்கு ஹிட்டீஸ்வரனின் பார்வை அதிகமாக இருப்பதால் அதனை நீக்குவதே சிறந்த வழியாகும். இதற்குப் பரிகாரமாக சுமாரனா பதிவுகளை எழுதி வர தோஷங்கள் யாவும் நீங்கும். 

கடகம்
கவர்ச்சியான போஸ்ட்டால், கலக்கலான போட்டோக்களால் பலரையும் கவர்வீர்கள். புதிய புதிய சிந்தனைகளை உள்வாங்கி பதிவெழுதுவீர்கள். பதிவுலகில் எல்லோராலும் நட்பு பாராட்டப்படுவீர்கள். அனைத்துப் பதிவர்களையும் அனுசரித்துப் போவீர்கள். 

சிம்மம்
இந்த ராசியினுள் சந்திரன் நீடிப்பதால் மத இறுக்கங்கள் உருவாகும். தர்ம சங்கடமான சூழ் நிலைகளுள் சிக்கித் தவிப்பீர்கள். எப்போது பார்த்தாலும் அழியும் நிலையில் என் மதம் இருக்கிறது. அதனை நான் காப்பாற்றியே ஆகனும் அதற்காகவே பதிவு எழுதி ஹிட் ஏத்துகிறேன் எனப் புலம்புவீர்கள். கூட்டம் சேர்த்து உங்கள் பதிவுகளுக்கு நீங்களே ஓட்டுப் போட்டுக் கொ(ல்)ள்வீர்கள். இது ஒரு வகை மேனியாவாகும். இதனை தீர்க்க விரும்பின் ஸ்வாமி பதிவானந்தாவை வணங்கி வர எல்லாம் குணமாகும். 

கன்னி
பதிவெழுதுவதால் அடிக்கடி அலைச்சலுக்குள்ளாவீர்கள். இரவில் தூங்கப் போய் விட்டு யார் பின்னூட்டம் அனுப்பியிருக்கிறார்கள், யார் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என அடிக்கடி மொபைலில் செக் பண்ணிக் கொள்வதால் வீட்டுக்காரியின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். வீட்டில் கவனம் செலுத்துவதை தவிர்த்து பதிவுலகமே பைத்தியம் என இருப்பதால் வீட்டில் எதிர்ப்புக்கள் உருவாகும். இதற்கு ஒரே பரிகாரம் பதிவு எழுதுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பதேயாகும். 

துலாம்
திட்டமிட்டபடி உங்கள் பதிவுகள் பலராலும் ரசிக்கப்படலையே என்று கவலை கொள்வீர்கள். ஆன்மீகப் பதிவுகளை அடிக்கடி எழுதுவீர்கள். பதிவர்கள் சிலரை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பீர்கள். ரொம்பவும் அப்பாவித்தனமாக இருப்பீர்கள். பதிவு எழுதி விட்டு எப்படா ஆட்கள் வருவார்கள் என யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஓட்டுக்கள் விழவில்லையே என குறைபட்டுக் கொள்வீர்கள். இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய விரும்பின் ஸ்வாமி திரட்டீஸ்வரனைத் தொடர்ந்து வழிபட்டு வரவும். 
விருச்சிகம்
ஹிட் வெறி கொண்டு உறக்கத்திலும் பதிவு பற்றியே சிந்தித்து அரைத் தூக்கத்திலும் பதிவு எழுதுவீர்கள். பேஜ் வியூ அதிகரிக்கலையே என நொந்து கொண்டு அடிக்கடி உங்களுடைய ப்ளாக் பேஜ் வியூவை நீங்களே கூட்ட Refresh / கீபோர்ட்டில் F8 அழுத்திக் கொண்டிருப்பீர்கள். அரசியல், சினிமா என அனைத்து துறைகளிலும் எழுத துடியாய் துடிப்பீர்கள். பதிவு எழுத மேட்டர் சிக்கவில்லை என்றால் உங்கள் மனைவி, பிள்ளைகளைக் கூடத் திட்டிப் பதிவெழுத பின் நிற்க மாட்டீர்கள். 

தனுசு
எப்போதாவது ஓர் நாள் தான் பதிவு எழுதுவீர்கள். மனதுள் மகிழ்ச்சி பொங்கும். ப்ளாக் டிசைனிங், திரட்டிகளில் இணைப்பது எப்படி? அலெக்ஸாவை அதிகரிப்பது எப்படி என பதிவர்களுக்கு உதவும் வகையில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய பதிவர்கள் அறிமுகமாவார்கள். பதிவுலகில் பிரபல பதிவர்களுக்கு தீவிர பின்னூட்ட விசிறியாக செயற்படுவீர்கள். 

மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமல் நீங்களாகவே சிக்கலில் மாட்டிக் கொள்வீங்க. துயரப் பதிவுக்கு கலக்கிட்டீங்க, சூப்பர் என்றும், சந்தோசப் பதிவுக்கு உங்களுடைய துன்பத்தில் நானும் பங்கெடுக்கிறேன் எனக் கூறி பதிவர்களின் தீராத கோபத்திற்கு ஆளாவீர்கள். யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். பதிவர்கள் தீவிரமாகச் சண்டை போடும் பதிவினுள் கூட சிரித்தபடி கலக்கிட்டீங்க எனக் கமெண்ட் போட்டு விட்டுத் திரும்பிடுவீங்க.  உங்களுக்கு பின்னூட்டீஸ்வரனால் குறையுண்டு. அவரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். 
கும்பம்
உற்சாகத்துடன் பதிவெழுதுவீர்கள். உங்கள் குடும்பத்தவரையும் பதிவெழுத ஊக்கப்படுத்துவீர்கள். வியாபார தகவல்களை பதிவாக எழுதுவதை குறிக்கோளாக கொண்டிருப்பீர்கள். பேஸ்புக், ருவிட்டர் என எல்லா இடங்களிலும் உங்கள் பதிவுகளைக் கொண்டு போய் ஷேர் பண்ணுவீங்க. 

மீனம்
உங்களைப் பதிவர் என்று சொல்வதிலும் பார்க்க பின்னூட்டவாதி என்றே சிறப்பிக்கலாம். ஒவ்வோர் பதிவர் ப்ளாக்கிலும் பதிவுக்கு தொடர்பின்றி ஆன்லைனில் ஆட்டயப் போடுவது எப்படி என்று விளக்கம் பகிர்வீர்கள். பிரபல பதிவர்களின் ப்ளாக்கினைச் சுற்றிச் சுற்றி வருவீர்கள். ஒவ்வோர் நாளும் நேரந் தவறாது ஒவ்வோர் பதிவர்களினதும் பதிவுகளைச் சுட்டு உங்கள் ப்ளாக்கில் சொந்தப் பதிவுகள் போல எழுதி வருவீர்கள். 

மொத்தத்தில் இன்றைய நாள் பதிவர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும். 

இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. 

1 Comments:

கோசுபா said...
Best Blogger Tips

///கவர்ச்சியான போஸ்ட்டால், கலக்கலான போட்டோக்களால் பலரையும் கவர்வீர்கள். புதிய புதிய சிந்தனைகளை உள்வாங்கி பதிவெழுதுவீர்கள். பதிவுலகில் எல்லோராலும் நட்பு பாராட்டப்படுவீர்கள். அனைத்துப் பதிவர்களையும் அனுசரித்துப் போவீர்கள்.////

அப்படீயே சரியாக சொல்லிப்புட்டாங்களே!!! பின்னாடி ஆளு விட்டு பார்ப்பாங்களோ???

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails