Tuesday, September 10, 2013

மனைவியை மகிழ்ச்சிக் கடலுள் தள்ளுவது எப்படி?

தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்கமைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொருவரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற்கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு காரணி ஏதுவாக அமைந்து கொள்கின்றது. எம்மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை ஆண்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கியமான செயலாகும். இனி நாம் இப் பதிவினூடாக "திருமணமான ஆண்களுக்கும், திருமணம் ஆகப் போகும் ஆண்களுக்கும்"மிகவும் பயன்மிக்க சில விடயங்களை ஆராய்ந்து பார்ப்போமா?
பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனோ அல்லது திருட்டுத் தனமாகவோ திருமணம் இடம் பெற்றாலும் பெண்ணைப் பூப் போல மென்மையாக கண் கலங்காது பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். பெண்ணை மனதளவிலும், உடலளவிலும் திருப்திப்படுத்துவது தாம்பத்தியம் மட்டும் தான் எனப் பலரது மனங்களில் கருத்துக்கள் இருக்கும் இக் காலத்தில் எம் அன்பான பேச்சின் மூலமாகவும், எம் ஒவ்வோர் செயல்கள் மூலமாகவும், மனைவியின் மன உணர்வினைப் புரிந்து கொண்டு நாம் நடந்து கொள்ளும் முறைகள் மூலமாகவும் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தலாம் என மணமான பெரியவர்கள் பலர் சொல்கின்றார்கள். நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இவன் என்ன புதுசா சொல்லுறான் என்று? உங்களில் பலருக்கு ஒரு டவுட் தோன்றலாம்.
நம்ம நாடுகளில் பொண்டாட்டியை அன்பாக கூப்பிடுவதற்குப் பல முறைகள் இருந்தும் நாம் எல்லோரும் கண்டு கொள்ளாதிருப்பதும்; வெறுமனே ஒரே மாதிரியான ரிதத்தில் (ப்ளோவில்) பெண்ணின் மனம் சலிப்படையும் வண்ணம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சொல்லினால் அவளை அழைப்பதும் பெண்ணுக்கு எரிச்சலூட்டும் விடயங்களாக இருக்கும். கூப்பிடுவதிலுமா? பெண்களுக்குப் பிரச்சினை என்று நீங்கள் நினைக்கலாம். அடப் போங்க! பெண்கள்; நாம் ஒவ்வோர் தடவையும் அழைக்கும் போதும் தம் உணர்வுகளை வெளிக் காட்டுவதில்லையே! எப்படி இவர்களை அழைப்பதனை வைத்து நாம் அவர்களின் மன உணர்வினை அறிந்து கொள்ளலாம் என்று ஆண்களில் பலருக்கு ஐயங்கள் இருக்கும். எம் நாடுகளில் பொதுவாகப் பெண்டாட்டியை கூப்பிடுவதற்கு "என்னங்க" என்ற ஓர் வார்த்தையினைத் தான் பயன்படுத்துவோம்.

தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் "என்னங்க" எனும் வார்த்தையினைக் கேட்டுப் பலரது மனைவிமார்களின் காதுகள் புளித்துப் போயிருக்கும். இந்த என்னங்க எனும் வார்த்தைக்கு நிகராக ஈழத்தில் மிகவும் பிரபலம் பெற்றிருக்கும் வார்த்தை தான் "இஞ்சாருங்கோ!"இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ என்று செல்லம் பொழிந்து மனைவி கணவனை கூட்டத்தின் மத்தியில் மெதுவாக இடுப்பில் சுரண்டி/ கிள்ளி அழைக்கும் போது அவன் கொஞ்சம் வெறுப்போடு கூடிய பார்வையினை வீசி, 
"என்ன வேணும் உமக்கு?" எனக் கேட்டால் சந்தோசத்தின் உச்சத்தில் கணவனை அழைத்த மனைவியின் மனநிலையோ காற்றுப் போன பலூனின் நிலைக்கு ஒப்பானதாக மாறி விடும். இவ்வாறு அன்பாக மனைவி அழைக்கும் போது, ஒரு பொது இடம் என்றாலும் "என்னடா செல்லம்? / "சொல்லடா செல்லம்!" என்று அழைத்தால் அவள் உள்ளத்தில் பல பட்டாம் பூச்சிகள் பறப்பதனை பார்வை மூலம் கண்டு கொள்ளலாம் என்று கலியாணம் ஆன கணவன்மார் சொல்லுகின்றார்கள்.
நம் நாடுகளில் பொதுவாக "இஞ்சாருங்கோ", "மாமா", "அத்தான்", "செல்லம்", "படவா", "ராஸ்கல்", "குட்டி", "ஹனி (Honey)" "ஓய், / ஏய்"; "அப்பா", "மச்சான்", "மச்சினன்", எனப் பல சொற்களைப் பெண்கள் கையாண்டு தம் ஆசை நாயகன் மீதுள்ள அன்பினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். "ஏலேய் மாமா! என்ன பண்ணிக்கிட்டிருக்கிறாய்?" என்றும், 
"என்னோட ஆசை அத்தானில்லே! உன்னை நினைச்சாலே உள்ளம் குளிருதடா!" எனவும், 
"என்னோட செல்லமெல்லே! என் மாம்பழமெல்லே! என் ஹனியெல்லே! என் செல்லக் குட்டியெல்லே!"எனவும் தம் அன்பினைப் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஈழத்திலும், இந்தியாவிலும் கணவன் மனைவியருக்கிடையிலான நெருக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் நடை முறையில் இருக்கும் பொதுவான சொல் தான்; "என்னங்க!" மற்றும் "இஞ்சாருங்கோ!"
ஆனால் இன்று வாழும் இளைய தலை முறையினர் மத்தியில் பிரபல்யமான வார்த்தைகள் தான் செல்லம், ஹனி, அத்தான், மாம்பழம், கண்ணே! கனியே! மச்சானே எனும் வார்த்தைகளாகும். ஆண்களிடம் உள்ள ஒரு இழிவான குணம் என்ன தெரியுமா? பொது இடங்களில் வைத்து மனைவியைப் பேசினால் தாம் ஏதோ வீரப் புருஷர்கள் என ஊரில் உள்ளோர் நம்புவார்கள் என நினைத்து தம் வீர தீரத்தைப் பொது இடங்களில் காட்ட முனைவது. பல பேர் குழுமி நின்று பார்க்கும் ஒரு கோவில் திருவிழாவில் "ஏலேய் மாமா! எனக்கு அந்த வைரக் கல்லுப் பதிச்ச தோடு வாங்கித் தாறியா?" என்று கேட்டால்! ஆண் மகனோ தன் சேர்ட் காலரைக் கொஞ்சம் இழுத்து விட்டு, "எடியேய் பஞ்ச வர்ணம்! உனக்குச் சொன்னாப் புரியாது! கொஞ்சம் பொத்திட்டு இருக்கிறியா? நீ திருவிழாப் பார்க்க வந்தனியா? இல்லே பாக்கட் மணிக்கு வேட்டு வைக்க வந்தனியா?" என்று திட்டுவார்கள்!

எம் தமிழர்களில் எத்தனை ஆண்கள் தம் வெட்கத்தையும், கௌரவத்தையும் விட்டுப் பொது இடங்களில் மனைவியினை அன்பான வார்த்தைகளால் அழைத்திருப்பார்கள்? ஆராய்ச்சி நடத்தினாலும் குறைந்தளவானோர் என்பது தானே முடிவாக கிடைக்கும். பெண்களின் உள்ளம் குளிரும் வண்ணம் உங்களை அவர்கள் என்னங்க என்று அழைக்கும் போது, சொல்லடா செல்லம்! என்னடா குட்டி? என்னடா என் மாம்பழம் என்று எத்தனை ஆண்கள் பொது இடங்களில் அழைத்திருப்பார்கள்? பொண்டாட்டியை எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் திண்டாட வைக்கும் வகையில் எத்தனை ஆண்கள் மனசை விட்டு தம் உணர்வுகளைக் கொட்டியிருப்பார்கள்?இது நாள் வரைக்கும் உங்கள் துணையினை இப்படியெல்லாம் அழைக்கவில்லையா? கவலையை விடுங்கள்! இதோ பல வழிகளைச் சொல்லித் தருகின்றேன்! இன்றே ஆரம்பியுங்கள்! 
கண்ணே! கரும்பே! கனியே! தேனே! மானே என்று நீங்கள் விரும்பும் வகையில் அழைக்கலாம். இல்லையே என்னடா செல்லம் நீ என்னைக் கூப்பிட்டியா என்றும் அழைக்கலாம். இல்லையே உங்களை மாமா என்று பொது இடத்தில் துணைவி கூப்பிடும் போது டார்லிங் என்றோ இல்லை செல்லம் என்றோ நீங்கள் பதிலுக்கு அழைத்து மகிழலாம் அல்லவா? அத்தான் என்று உங்களை அன்பாக அழைக்கும் துணைவியை நீங்கள் மச்சாள் என்று பதிலுக்கு அழைத்துப் பாருங்கள்!அவள் முகம் ஆயிரம் வாற்ஸ் பிரகாசமுடைய மின் விளக்கு வெளிச்சத்திற்கு ஒப்பானதாக மாறிவிடுவதனைக் காணுவீர்கள். "கட்டிலறையிலும், வீட்டினுள்ளும் தான் நாம இப்படிக் கூப்பிடுவோம். பொது இடங்களில் பெண்ணைப் பெயர் சொல்லி அழைப்பது தானே ஆண்மைக்கு அழகு" என நினைப்போர் இன்று முதல் உங்களைக் கொஞ்சம் சேஞ் பண்ணிக்கலாம் அல்லவா?
என் செல்லமே! என் மாம்பழமே! என் மரகதமே! என் ஆசைக் கிளியே! கிளிக் குஞ்சே! ஹனியே! என கொஞ்சம் வித்தியாசமாக உங்கள் மன விருப்பத்திற்கு அமைவாக அழைத்து உங்கள் இல்லாளின் மனம் மகிழும் வண்ணம் நீங்கள் நடந்து கொள்ளலாம் அல்லவா? கமலஹாசன் நடித்த தெனாலி படப் பாடலில் மிகவும் அழகாக பெண்டாட்டியை "இஞ்சாருங்கோ! இஞ்சாருங்கோ! என அழைத்து ஓர் பாடல் பாடியிருப்பார்கள். ஆர்வமுள்ளோர் யூடியூப்பில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் தம் வெட்கத்தை விட்டு ஆண்களைச் செல்லம் பொழிந்து கூப்பிடுவதில் அக்கறை செலுத்துகிறார்களாம். ஆண்கள் தான் பெண்களின் மனதினைப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்புவது போன்று கூப்பிடுவது இல்லை என எம் தமிழ்ப் பெண்கள் பலர் குறைபட்டுக் கொள்கின்றார்கள். பெண்டாட்டியை மட்டும் அல்ல காதலியோடும் நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திச் செல்லம் பொழிந்து மகிழலாம். 
சொல் விளக்கம்: கூப்பிடுதல்: அழைத்தல்.
பிற் சேர்க்கை: இந்த வார்த்தையெல்லாம் உனக்கு எப்படியடா தெரியும் என்று தானே கேட்கிறீங்க. அடப் போங்கப்பா. ரோட்டில போகும் போது கணவன் மனைவி பேசுவதனை தமிழனோட காது கேட்காமலா விட்டிருக்கும்? தமிழன் எங்கு போனாலும் விபரம் அறிவதிலும் ஒட்டுக் கேட்பதிலும் கில்லாடி தானே! ஹி....ஹி....


உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.



0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails