Wednesday, January 11, 2012

பிரபாகரனின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த வன்னி மக்கள்

அன்பிற்கினிய தமிழ் வாசக உள்ளங்களே,
மக்கள் படை மூலம் ஆமிக்கு மரண பயத்தைக் கொடுத்த புலிகள் தொடரின் நிறைவுப் பாகத்தினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த வரலாற்று நினைவு மீட்டலின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இனி முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக....இவ் வேளையில் புலிகள் ஈழப் போராட்ட வரலாற்றில் யாழ் குடா நாட்டினை மையமாக வைத்து ஓர் படையினை உருவாக்க நினைத்தார்கள்.யாழ்பாணக் குடாநாட்டிலிருந்து பயிற்சிக்காக மக்களைத் திரட்டி பளையில் அமைந்திருந்த எரிமலை பயிற்சிப் பாசறையில் போர்ப் பயிற்சினை வழங்கினார்கள் புலிகள். பயிற்சியின் நிறைவில் விடுதலைப் புலிகளின் தேசிய அணியாக இந்த அணி பெயர் மாற்றம் பெற்றதோடு, குடா நாட்டிற்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டு, அவர்களுக்குரிய மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் புலிகள் அமைப்பினரால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
இவ்வாறு புலிகளின் தேசிய இராணுவ அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மக்கள் மூலம் புலிகள் சம நேரத்தில் தமது மக்கள் படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையினையும் யாழ் குடாநாட்டில் முடுக்கி விட்டிருந்தார்கள். இந்த விடயங்களை அறிந்த படைத் தரப்பு பீதியில் உறைந்தது. இனி ஓர் யுத்தம் வரும் போது புலிகள் ஆட்பல ரீதியில் புலிகள் மிகவும் வலுவாக இருப்பார்கள் என கணக்குப் போடத் தொடங்கியது. ஆனால் வெளியில் புலிகளின் ஆட்பலம் குறைவு என்று அடிக்கடி போலி அறிக்கைகளை வெளியிட்டு சிங்கள மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தது. கட்டம் கட்டமாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற மக்கள் படையானது வன்னிப் பகுதியினை நோக்கி இறுதிப் போரானது திசை திருப்பட்ட போது, இராணுவத் தரப்பிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுக்கும் படையாக உருமாற்றம் பெற்றிருந்தது.

இதற்கான காரணம் வன்னி மக்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்று புலிகளிற்குப் பின்னே நிற்கிறார்கள் என இராணுவம் உளவாளிகள் ஊடாக அறிந்து கொண்டமையாகும். இதனால் மக்கள் மீது கடுங் கோபங் கொண்ட இராணுவம் மக்களைப் பழிவாங்கும் நோக்கில் தமது தாக்குதல்களை முடுக்கி விட்டிருந்தது. கண் மூடித்தனமான தாக்குதல்களை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு,கொத்துக் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும், இடைவிடாத ஆட்லறி ஷெல்களையும் (எறிகணைகள்), மக்கள் மீது பொழிந்து தள்ளி; மக்களையும் புலிகளையும் பிரிக்க நினைத்தது இராணுவம். ஆனாலும் மக்களை இலகுவில் புலிகளிடமிருந்து பிரித்து, புலிகளைத் தனிமைப்படுத்த இராணுவத்தரப்பால் முடியவில்லை.

இந் நேரத்தில் இலங்கை அரச படைகள் மிகவும் கோழைத் தனமான செயற்பாட்டினைக் கையிலெடுத்தார்கள். அது தான் மக்களைப் பட்டினிச் சாவினுள் அமிழ்த்திக் கொல்லுவதாகும். வன்னி மக்களுக்கு உதவும் நோக்கிலிருந்த அனைத்துலக (வெளி நாட்டு) தொண்டு நிறுவனங்களை உடனடியாக வன்னிப் பகுதியினை விட்டு வெளியேறுமாறு 2008ம் ஆண்டு அறிவித்தல் விடுத்தி, அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களை வன்னியை விட்டு வெளியேற்றியது ஸ்ரீலங்கா இராணுவம். இதன் பின்னர் மக்களுக்கான உணவு விநியோகத்தினை தடை செய்து மக்களைப் பட்டினி அவலத்தினுள் வைத்து கொல்லும் நடவடிக்கையில் மும்முரமாக இலங்கை இராணுவம் ஈடுபட ஆரம்பித்தது.
மக்களைக் குறுக்கு வழியின் மூலம் தான் இராணுவம் புலிகளிடமிருந்து பிரித்து, தமது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் உள்வாங்கிக் கொண்டது. மக்கள் மீது நேர்மையான முறையில் இலங்கை இராணுவம் நடந்து கொண்டிருப்பின் வன்னி மக்கள் ஊடாக 2008ம் ஆண்டின் இறுதிக் காலத்தில் ஈழத்தில் பெரும் புரட்சி ஒன்று அரங்கேறியிருக்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் 2008ம் ஆண்டின் இறுதிக் காலம் வரை எதிரியை விரட்டி அடிப்பதற்கு மட்டுமல்ல, இராணுவத்தினர் மீதான ஒவ்வோர் தாக்குதல்களிலும் பேரெழுச்சியுடன் செயற்பட்டார்கள். இம் மக்கள் படையானது பிற் காலத்தில் லெப்.கேணல் நிஸ்மியா உள்ளக பாதுகாப்பு மகளிர் அணி, லெப்,கேணல் சங்கர் அணி, லெப்.கேணல் அன்பு அணி, ஆகிய மூன்று அணிகளாக களமுனையில் தம் வீரத்தினையும் நிலை நாட்டியிருந்தது.

மக்கள் படை - பொங்கியெழும் மக்கள் படைக்கான வேறுபாடு!
புலிகள் அமைப்பினர் அரசியல் நடவடிக்கைகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் சமாதான காலத்தில் மேற்கொண்ட வேளையில் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் உள்ள இளைஞர்களைத் திரட்டி தமது துணைக் குழு என்ற பெயரில் இரகசியமாக இவ் அமைப்பினை உருவாக்கியிருந்தார்கள்.ஏலவே புலிகள் வசம் சுயாதீனமாக உரிமை கோரப்படாது சங்கிலியன் படை, எல்லாளன் படை, சீறும் படை, மானங் காக்கும் மறவர் படை, குளக்கோட்டன் படை, பண்டாரவன்னியன் படை எனும் பெயர்களில் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும், துரோகமிழைப்போருக்கும் தண்டனைகள் கொடுப்பதற்கு பல குழுக்கள் இருந்தன.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட, இராணுவத் தரப்பினருக்கு அச்சமூட்டும் வண்ணம் 2005ம் ஆண்டு ஈழத்தில் உதயமாகியது தான் இந்தப் பொங்கியெழும் மக்கள் படை. ஈழத்தில் இன்று வரை புலிகள் அமைப்பினர் தம்முடைய குழுத் தான் இந்தப் பொங்கியெழும் மக்கள் படை என்று சுயாதீனமாக உரிமை கோரவில்லை. இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்கள்,ரிமோட் கான்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்படும் குண்டுகள், கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் ஆழ ஊடுருவி நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அல்லது உள்ளிருந்து தாக்கி அச்சத்தில் உறையச் செய்யும் அதிரடித் தாக்குதல்கள் யாவும் இந்தப் பொங்கியெழும் மக்கள் படையினால் தான் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. புலிகளால் இவ் அமைப்பு பற்றி பல வெளிநாட்டு அமைப்புக்களும்,ஊடகவியலாளர்களும் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வழங்கப்பட்ட பதில் என்ன தெரியுமா? 

"இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த இளைஞர்கள் தான் இராணுவ அராஜகம் பொறுக்க முடியாது பொங்கியெழும் மக்கள் படையாக மாற்றம் பெற்றிருந்தார்கள் எனும் பதிலாகும். பொங்கியெழும் மக்கள் படையணியின் தாக்குதல்கள் ஈழத்தில் 2005-2007ம் ஆண்டு வரை இராணுவத்தினருக்கு மரண அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.இதற்கான காரணம் எங்கே, எப்போது, யார், எந்த வடிவில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நிகழ்த்துவார்கள் என்பதனை அறிய முடியாது இராணுவம் திண்டாடிக் கொண்டிருந்தது. சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்திற்கே அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த பெருமையினை இம் மக்கள் படை பெற்றிருந்தது.
தமிழக மக்கள், புலம் பெயர் மக்கள், இளையோர்கள் மூலம் வெடித்த மக்கள் புரட்சி!
ஈழத்தில் ஆயுத வழியில் மக்கள் புரட்சி இடம் பெற்றுக் கொண்டிருந்த சம நேரத்தில் புலம் பெயர் தேசத்திலும், தாய்த் தமிழகத்திலும்,  2008ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் மக்கள் முன்பு எப்போதும் இல்லாததைப் போன்று பேரெழுச்சி கொண்டார்கள்.புலம்பெயர் தேசத்திலும், தாய்த் தமிழகத்திலும் அற வழியில் ஈழப் போராட்டத்தின் இன்னோர் பரிணாமத்தை அப்போது பேரெழுச்சி கொண்ட மக்கள் உலகிற்கு உணர்த்தினார்கள். ஈழ மக்கள் தாம் பரந்து வாழும் அனைத்து நாடுகளிலும் பேரெழுச்சி கொண்டு ஈழப் போர் தொடர்பான உலக நாடுகளின் கவனயீர்ப்பை வேண்டி பல போராட்டங்களை நிகழ்த்தினார்கள். மக்கள் எழுச்சி மூலம் தமிழக மக்கள் எமக்காகச் செய்த அர்ப்பணிப்புக்களை இலகுவில் ஒரு சில வார்த்தைகளுக்குள் உள்ளடக்கிட முடியாது. இன்று ஈழத்தில் மக்கள் படை இல்லை ஆயினும் புலம் பெயர் தேசத்தில் வாழும் மக்கள் படை இலங்கை அரசிற்கு போர்க் குற்ற வழக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகிய செயற்பாடுகள் ஊடக அச்சத்தினை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

மக்கள் படையின் எழுச்சி பற்றி தீர்க்க தரிசன அடிப்படையில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய, தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும். 
இப் பாடலை நண்பர் வீடு சுரேஸ்குமாரின் விருப்பத் தெரிவாக இங்கே இணைத்திருக்கிறேன். 

5 Comments:

Unknown said...
Best Blogger Tips

நன்றி...நிரூ...மக்கள் படையினைப்பற்றி தெரிந்து கொண்டோம்....பதிவு விறுவிறுப்பாக போகிறது..

Yoga.S. said...
Best Blogger Tips

மீள் வணக்கம் நிரூபன்!இந்தப் பகிர்வு எழுச்சியூட்டும்.தெரிந்திராத பல நடவடிக்கைகளை தாய்த் தமிழக மக்கள் உட்பட அனைத்துலகிலும் வாழும் உறவுகள் அறிந்து கொள்ளும்!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...பாடல் உயிர்கொள்ள வைக்கிறது !

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

பல புதிய தகவல்கள். புரிதலில் புதிய பரிமாணத்தை உருவாக்கக் கூடியவை. இது போன்ற விஷயங்களை அதிகம் எதிர்பார்க்கிறோம் நிரூபன்!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

பாடல் கேட்டேன் சகோ!பிரபாகரன் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை கண்டு பிடிப்பதில் மட்டுமே ஈழம் என்ற சொல்லின் எதிர்காலம் இருக்கிறது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails