Monday, February 13, 2012

தமிழரை வருத்தி கொல்லும் பிரிவினைகளும் பிரதேசவாதமும்

பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்: 
எல்லோருக்கும் வணக்கமுங்க,
இப் பதிவினூடாக நாம் படிக்கவிருப்பது; வன்னிப் பகுதியில் வாழும் தமிழர்களிடையே காணப்படும் உட் பூசல்கள் / பிரிவினைகள் பற்றிய அலசலாகும். தமிழர்கள் இன அடிப்படையில் ஒற்றுமையின்றி, வடக்கான் என்றும், கிழக்கான் என்றும், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்றும் தமக்குள் தாமே பிரிவினை பாராட்டி வரும் சூழலில், அந்தப் பிரிவினைகள் பற்றி பேச முன்பதாக தனித் தனியாக தமிழன் வாழும் சூழலில் எவ்வாறு அவன் புறக்கணிக்கப்படுகின்றான் என்பதனை உணர்த்திட ஓர் பதிவினை எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் முதலாவது பாகத்துடன் எம் அழுக்குகளை நாமே தோண்டி மணப்பது அழகல்ல எனக் கூறி அந்தப் பதிவினை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்கள். அப்படியே நிறுத்தி வைத்த பதிவினை மீண்டும் ஆரம்பித்தாச்சு.
இப்போது மீண்டும் தமிழன் என்ற தனித்துவமான இனத்தினுள் பிரிவினைகளைக் கட்டவிழ்த்து விட்டு குளிர் காயும் நோக்கில் சிலர் செயற்படுவதால், தமது சுயத்தை தாமே பரிசோதனை செய்திட உதவும் வண்ணம் ஒவ்வோர் மாவட்டத்தின் அடிப்படையிலும் தமிழன் தனக்குள் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறான் என்பதனை விளக்கிட இப் பதிவினை ஆரம்பத்திலிருந்து பதிவிடத் தொடங்கினேன். கடந்த மாத இறுதியில் ஏலவே பதிவிட்ட பதிவின் ஒரு பாகம் வந்திருந்தது. இப் பதிவிலிருந்து உங்களை நாடி வரவிருப்பவை யாவும் முழுக்க முழுக்க புதிய பதிவுகளும், சம காலத் தகவல்களுமே! வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம். பதிவினைப் படிக்க முன்பதாக, இத் தொடரின் முதல் இரு பாகங்களையும் படிக்க விரும்புவோர், கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.

இலங்கையில் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டிற்கும் ,வவுனியா மாவட்டத்திற்கும் நடுப் பகுயில் அமைந்துள்ள பிரதேசமே வன்னிப் பகுதியாகும்.தேர்தல் அடிப்படையில் வன்னிப் பகுதியினுள் உள்ளடங்கும் அனைத்த மாவட்டங்களையும் வன்னி மாவட்டம் என்று அழைப்பார்கள். இந்த வன்னிப் பகுதியானது மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மற்றும் மணலாறு மாவட்டம் & வவுனியா மாவட்டத்தின் சிறு பகுதியினையும் தன்னக்கத்தே கொண்டு விளங்குகின்றது. இயற்கையில் பசுமைக்கும், நீர்ப்பாசனத்திற்கும், விவசாயத்திற்கும் பெயர் பெற்ற வளம் கொழிக்கும் பூமியாக ஈழத்தில் இந்த வன்னிப் பகுதி விளங்குகின்றது. நெற் பயிர்ச் செய்கையும், விவசாயமும், மீன்பிடியும் இந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஜீவனோபாயத் தொழில்களாக விளங்குகின்றது.

உண்மையில் வன்னி மக்கள் இன ரீதியில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமை மிக்கவர்கள். ஈழப் போராட்டத்தினை இறுதிக் காலத்தில் பேதங்களை மறந்து தம் தோளில் தாங்கியவர்கள். வன்னி மக்கள் ஈழ மக்கள் என்ற பார்வையின் கீழ் ஒற்றுமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப வன்னி மக்களுக்குள் சிறிய சிறிய பிரிவினைகள் இருக்கின்றன. வன்னி மக்கள் எனப்படுவோர் ஆரம்ப காலத்தில் காடுகளால் சுழ்ந்திருந்த வன்னி மாவட்டத்தினை களனியாக்கி,யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விவாசய நோக்கில் சென்று குடியேறியவர்களே. வன்னியில் வாழும் அதிகளவான மக்களின் பூர்வீகம், அல்லது பரம்பரை வம்சா வழியானது யாழ்ப்பாணத்தின் வறண்ட பகுதிகளான மந்துவில், மட்டுவில், சரசாலை, புத்தூர், வேம்பிராய், மற்றும் சாவகச்சேரி மேற்குப் பகுதிகளைச் சார்ந்தே காணப்படும்.

வன்னியில் நீலகண்டபுரம் என்றோர் பகுதி உண்டு. அங்கே பனை தென்னை வளங்களை நம்பி வாழும் மக்கள் அதிகமாக உள்ளதால் ஏனைய பகுதியில் உள்ளோர் அம் மக்களை பைலட், ஏரோப்பிளேன், மரமேறிகள் என அழைத்துக் கிண்டல் செய்வார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைப் பகுதியில் அதிகம் எருமை மாடுகள் உள்ள காரணத்தினால் அங்கே வாழும் மக்களை எருமைப் பால் சாப்பிட்டு, எருமைத் தயிர் உண்டு மந்த புத்தி உள்ளவர்கள் என்று சிறப்பிப்பார்கள் ஏனைய மாவட்டக்காரர்கள். பாடசாலைகளிலும் கூட இப் பகுதி மாணாக்கர்கள் தவறு செய்யும் போது மந்த புத்தி உள்ளவர்கள் என ஆசிரியர்கள் கிண்டல் செய்யும் மனப்பாங்கும் இருக்கிறது.

முல்லைத்தீவு, சிலாவத்தை, செம்மலை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் கடற் தொழிலை நம்பி வாழ்வதால் ஏனைய ஊர்க்காரர் இம் மக்களை வலையிழுப்போர், மீன்பிடிகாரர், கரையார் எனக் கிண்டல் செய்து தம் சுய சொறிதலை அரங்கேற்றுவார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றில் நகைத் தொழிலை மேற்கொள்வோர் அதிகமாக வாழுவதால் அப் பகுதியில் உள்ளோரை; "கோவலனை மாட்டி விட்டது தட்டான் எனும் கதையின் அடிப்படையில்” அம் மக்களுடன் பழகுவது கவனம் எனக் கூறி, "தட்டானைத் தொட்டான் கெட்டான்" எனச் சிலேடையுடன் கலந்து கிண்டல் செய்வார்கள் ஏனைய ஊர் மக்கள். கணுக்கேணிப் பகுதியில் உள்ளோர் கொஞ்சம் வீரப் புருஷர்களாக இருப்பதால் கணுக்கேணிச் சண்டியர்கள் என காணும் இடங்களில் நக்கல் செய்வார்கள் ஏனைய பகுதி மக்கள்.
குழவிசுட்டான்,நெடுங்கேணி,ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, கனகாராயன்குளம்,வெள்ளாங்குளம், வன்னிவிளாங்குளம்,சேமமடு, பம்மைமடு,நட்டாங்கண்டல்,மல்லாவி,துணுக்காய், ஆலங்குளம், தேறாங்கண்டல், பாண்டியன்குளம், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களையும், வவுனியா - முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடையேயான பகுதியினையும் சார்ந்த இடங்கள்;முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,கிளிநொச்சி நகர் போலன்றி, காடும் காடு சார்ந்த பகுதிகளாக இருந்த காரணத்தினால் பல துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்தன. இதனால் கொஞ்சம் நாட்டுப் புழக்கம் (நாட்டு வழப்பம்) அறிந்தவர்களாக ஏனைய பகுதி மக்கள் தம்மை முன்னிறுத்தி மேற்படி ஊர் மக்களைப் பட்டிக்காட்டார் எனச் சொல்லி நையாண்டி சொல்லி மகிழ்வார்கள்.

கல்வியிலும் மேற்படி ஊர்களில் உள்ள மக்கள் பின்தங்கி இருப்பதாகச் சொல்லி படிப்பறிவு குறைந்தவர்கள் என ஏனைய ஊர்க்காரர் தம் சுய சொறிதலை அரங்கேற்றுவார்கள். குமாரபுரத்தில் ஓர் பகுதி, மாமூலையின் சுடலைக்குச் செல்லும் பக்கமாக ஓர் பகுதி மற்றும் பொன்னகர் போன்ற இடங்களில் ஈழத்து மலையக மக்களின் உறவுகள் சிலர் வாழ்ந்து வந்த காரணத்தினால், அங்கே உள்ள மக்களை தோட்டக்காட்டார் என்றும், அந்த ஏரியாவை தோட்டக்காட்டு ஏரியா எனவும் சொல்லி ஏனைய ஊர் மக்கள் புறக்கணிப்பார்கள். சமாதான ஒப்பந்த்த காலத்தில் கிளிநொச்சி நகரமானது புலிகளின் அரசியல் கட்டளைப் பீடமாக மாற்றம் பெற்றதோடு, அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய காரணத்தினால் இங்குள்ள மக்கள் முல்லைத்தீவு, மல்லாவி நகரம், புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதி மக்களைக் கொஞ்சம் தரந் தாழ்த்திப் பேசுவார்கள்.

நீராவிப்பிட்டிப் பகுதியில் இஸ்லாமியர்கள் வாழ்ந்த காரணத்தினால் இங்குள்ள மக்கள் வாழுமிடத்தை காக்கா ஏரியா எனச் சொல்லி அழைப்பார்கள். இவ்வாறு ஊர்களுக்கு ஊர்கள் தம்மைப் பிரித்துப் பேசி வேற்றுமை கண்டு, ஒவ்வோர் தொழிலின் அடிப்படையில் தம் தொழில் சார்ந்து பிரித்துப் பேசிக் கிண்டல் செய்து வாழ்ந்தாலும்,தேசிய அடிப்படையில், தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் வீரஞ் செறிந்த வன்னியர் என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர்களாகவும், பண்டாரவன்னியன் எனும் மாவீரன் பாதம் பட்ட மண்ணின் மைந்தர்களாகவும் விளங்கிறார்கள். இந்த வன்னி மக்கள் சிறு சிறு பிரிவுகளாக தம்மைத் தாமே தாழ்த்திப் பேசிக் கொள்ளும் சம நேரத்தில் இம் மக்களைப் பார்த்து ஏனைய மாவட்ட மக்கள் வன்னியார், பட்டிக்காட்டார், காட்டார், நாட்டு வழப்பம் அறியாத மக்கள், டீசண்ட் இல்லாத ஆட்கள் எனச் சொல்லி தம் சுய சொறிதலை அரங்கேற்றுவார்கள்.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி கற்ற காலப் பகுதியில் பல தடவை ஆசிரியர்கள், மாணவர்களால் வன்னியார், காட்டார், நாட்டு வழப்பம் இல்லாதோர், பட்டிக்காட்டார் என கிண்டல் செய்யப்பட்ட வலியைக் கூட உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் யாழ்ப்பாணத்தார் என்று பிரித்துப் பேசி பிரதேசவாதம் பேசும் பழக்கத்தை கையாண்டதில்லை! இப்படி ஆளாளுக்கு எமக்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்க அவற்றையெல்லாம் மறந்து, எம் உள்ளூர் பிரிவுகளை அகற்றிட வழி ஒன்றினைத் தேடி அறிவதனை மறந்து தமிழன் மட்டக்களப்பான் என்றும், யாழ்ப்பாணத்தான் என்றும் சில ஈனப் பிறவிகளால் பிரித்தாளப்படுகின்றான். தமிழன் தன் இன உணர்வில் தமிழன் என்று ஓர் குடையின் கீழ் அழைக்கப்படுவதனை விரும்பினாலும், சில ஈனப் பிறவிகள் தமிழனைப் பிரிக்க நினைக்கின்றது அல்லது தமிழன் வாழும் சூழல் சார்ந்து தம்மைப் பிரித்துக் காட்ட நினைக்கின்றன.
ஓர் எளிய உதாரணம் கொழும்பில் வாழும் இலங்கையின் வட கிழக்கு தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர் என்றோ அல்லது மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றோ அழைப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். தம்மை நாகரிகம் அடைந்த சந்ததியாக காட்டிக் கொள்ள கொழும்புத் தமிழர்கள் என்று சொல்லுவதனைத் தான் அவர்கள் விரும்புவார்கள்.இது பற்றிய அலசல்களையும், மன்னார், வவுனியா, மட்டக்களப்ப்பு மாவட்ட மக்களிற்கு இடையே நிகழும் பிரிவினைகள், உட்பூசல்களையும் அடுத்தடுத்த பாகங்களில் அலசுவோமா?

13 Comments:

சசிகுமார் said...
Best Blogger Tips

அப்புறமா வந்து படிக்கிறேன் மச்சி....

K said...
Best Blogger Tips

நிரூபன்! நீ நேற்று ஒரு நல்ல பதிவு எழுதினாய்! நாம் எல்லோரும் திரண்டு வந்து ஆதரவு தந்தோம்! இந்தப் பதிவுக்கு இதுவரை எவருமே பின்னூட்டம் இடாதது ஏன் என்று நீ சிந்திப்பாய் என்று நம்புகிறேன்!

எனக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை! :-(

suvanappiriyan said...
Best Blogger Tips

சகோ நிரூபன்!

//ஓர் எளிய உதாரணம் கொழும்பில் வாழும் இலங்கையின் வட கிழக்கு தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர் என்றோ அல்லது மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றோ அழைப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். தம்மை நாகரிகம் அடைந்த சந்ததியாக காட்டிக் கொள்ள கொழும்புத் தமிழர்கள் என்று சொல்லுவதனைத் தான் அவர்கள் விரும்புவார்கள்.//

இது கொழும்புக்கு மட்டும் உரியதல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்த கூத்து நடக்கும். ஒரு முறை ஆந்திர நண்பரிடம் 'நீ எந்த ஊர் என்றேன்?' 'ஹைதரபாத்' என்றார். ஆனால் அவர் உண்மையில் இருப்பது ஹைதரபாத்திலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவு அவரது சொந்த ஊர். :-). பெரும்பாலான ஆந்திரர்கள் தாங்கள் ஹைதரபாத் என்று சொல்லிக் கொள்ளுவதில் ஒரு அதீத பெருமை.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

அப்புறமா வந்து படிக்கிறேன் மச்சி....
//


ஓக்கே! வா மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

நிரூபன்! நீ நேற்று ஒரு நல்ல பதிவு எழுதினாய்! நாம் எல்லோரும் திரண்டு வந்து ஆதரவு தந்தோம்! இந்தப் பதிவுக்கு இதுவரை எவருமே பின்னூட்டம் இடாதது ஏன் என்று நீ சிந்திப்பாய் என்று நம்புகிறேன்!

எனக்கு வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை! :-(
//

போய்யா...போய்யா..
உண்மையைச் சொன்னால் உறைப்பது இயல்பு தானே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இன்னைக்கு சண்டே மச்சி! அதோட பதிவு கொஞ்சம் நீண்டு போச்சு! இருந்தாலும் ஆட்கள் வருவார்கள் இல்லே!

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்
இது கொழும்புக்கு மட்டும் உரியதல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்த கூத்து நடக்கும். ஒரு முறை ஆந்திர நண்பரிடம் 'நீ எந்த ஊர் என்றேன்?' 'ஹைதரபாத்' என்றார். ஆனால் அவர் உண்மையில் இருப்பது ஹைதரபாத்திலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவு அவரது சொந்த ஊர். :-). பெரும்பாலான ஆந்திரர்கள் தாங்கள் ஹைதரபாத் என்று சொல்லிக் கொள்ளுவதில் ஒரு அதீத பெருமை.//

உண்மை தான் சகோதரம்,

எல்லா ஊர்களிலும் இந்த முந்தி வந்த செவியை,
பிந்தி வந்த கொம்பு மறைக்கும் விளையாட்டு இருக்குத் தான்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!இதுவும் காத்திரமான,அதாவது பிரிவினைக்கு வித்திட்ட காரணிகளை அலசும் ஓர் ஆக்கபூர்வமான பகிரல் தான்!எனினும்,உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் குத்தும் வகையில் இருப்பதனால் கருத்திட பின்னடிக்கிறார்கள்!தமிழ் நாட்டுப் பதிவர்களுக்கு இது புதிதாக?!இருக்கக் கூடும்,எம்மவர்கள்?????????

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

ஆனால் இவையெல்லாவற்றையும் இறுதி யுத்தம் மறக்க வைத்தது என்றே கூறலாம்,ஜாதி ஏரியா தெரியாமல் அனைவரும் ஒன்றாக ஒரே கூடாரத்துக்கள் ஒன்றாக சமைத்து சாப்பிட்ட நாட்கள் பிரதேச வாதம் என்ற ஒரு வார்த்தையையே மறகடித்திருந்தது..

ad said...
Best Blogger Tips

@மன்மதகுஞ்சு
வணக்கம்.
உண்மையை சொன்னீர்கள்.இறுதி யுத்த காலத்தில் இந்த பிரிவினைகள் எதுவுமே அவளவாக எடுபட்டிருக்கவில்லை.ஒன்றாக கூடாரமடித்து,ஒன்றாக படுத்துறங்கி வாழ்ந்திருக்கிறார்கள்,வாழ்ந்திருக்கிறோம்.

சாதாரண காலத்தில் ஒவ்வொரு தராதரம் கூறி பலரை ஒதுக்கிவைத்தவர்களுக்கு அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களே இறுதி யுத்தகாலத்தில் ரத்தம் கொடுத்தும், பல இக்கட்டான விடயங்களில் தோள்கொடுத்தும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

ad said...
Best Blogger Tips

பலதரப்பட்ட சமூகங்கள் ஒரு பிரதேசத்தில் வாழும்போது -இனம் இனத்தைச் சேரும்- என்பதுபோல ஒவ்வொரு பகுதிகளுக்குள் ஒவ்வொரு சமூகத்தவர் ஒன்றிணைந்து வாழ முற்படுவதென்பது தானாகவே நடக்குமொன்று.
ஆனால்,அவ்வாறு ஒரே பகுதிக்குள் அவர்கள் ஒன்றிணைவதென்பது அவர்கள்மீது முத்திரைகுத்தப்படுவதை எளிதாக்கிவிடுகிறது.

நகர்ப்புறங்களில் (கொழும்பு,சென்னை) இது குறைகிறது.காரணம் நாட்டின் சகலபாகத்தினரும் அங்கே ஒரே கட்டடத்தில் மேலும் கீழுமாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது குறித்த ஓர் பகுதியினரை மட்டுமென்று குறிப்பிட்டு தரம் பிரிக்க முடியாது.அத்துடன் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைக்கூட யாரென்று தெரியாத நிலை காணாப்படும்.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
எல்லா இடமும் ஒரே சுய சொரிதல்தான்.. ஆனா இப்போ குறிப்பா புலம்பெயர்தோரிடம் இந்த சுய சொரிதல் நான் பார்த்தவரை இல்லை என்றே சொல்லலாம்..!!

abdul said...
Best Blogger Tips

ungal padivai oru varudamaga parkkiren.aanal muthal pinnoottam ithu.vanni makkal meendu vara pirartikkiren

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ.நிரூபன்!நலமா?தமிழகத்திற்கும்,ஈழத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு பிரதேச வாதம் என நினைக்கிறேன்.மாவட்ட வாரியாக வட்டார வழக்காய் தமிழ் மாறுபட்டாலும் அதனை யாரும் பெரிதுபடுத்துவதில்லை.மாறாக அதனை தமிழ் திரைப்படங்கள் நகைச்சுவையாகவோ,சென்டிமென்ட் பேச்சு வழக்காகவோ கொண்டு வருவதால் தமிழகம் என்ற ஒற்றைக் கோட்டுக்குள் தமிழர்கள் வந்து விடுகிறார்கள்.

நேற்று பதிவு போட்டதில் சகோதரர் ஒருவர் முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இலங்கை பிரச்சனைக்கு காரணமே யாழ்பாண மேலாதிக்க திமிர்தான் என்று பிரதேச வாதம் பேச வந்து விட்டார்:)

உங்கள் பதிவு எனக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வட்டார வழக்குர ஈழத்தமிழர் வாழ்வியலின் அங்கம் என்பதை உணர தொடங்குவோம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails