Sunday, November 27, 2011

ஐயோ! தமிழீழம் கிடைத்து விட்டதாம் - கி(கெ)ளம்புங்கள்!

ஐயகோ தமிழீழம் கிடைத்து விட்டதாம்
மெய்யாய் இச் சேதி இருக்குமென
நினைக்கையில் மேனியெல்லாம்
நிலை கொள்ள முடியாது
சந்தோசத்தில் நடனமாடி
அலை போல்
ஆர்ப்பரிக்க தொடங்கி விடும்!
காற்றில் கலந்து ஓர்
விடுதலை(ச்) சேதி 
காதுகளை எட்டாதா என
நாம் காத்திருக்கையிலோ
புலிகளே போராடுங்கள்!
வன்னி மக்களே
வீறு கொண்டெழுந்து 
பகையை விரட்டுங்கள்!; என
அவர்கள் ஈழத்தை விட்டு
பல தூரமிருந்தும்
வீராப்பு வசனம்
பேசி வேகம் கூட்டுவார்கள்!

சாகின்ற உறவுகள் அனைத்தும்
என்ன எம் உறவுகளா? - இல்லையே
சாதியிற் குறைந்தோர் என
இன்னோர் சந்ததி
ஆங்கில அழிவுத் தமிழில்
ஆரோகண கீதமிசைக்கும்!
பாயிற் படுத்தும்; 
உறங்க இடமின்றி
மர நிழலின் கீழ்
பகைவர் வீசும்
குண்டுகளிடமிருந்து இறைவா
எமை காப்பாற்று என
எஞ்சிய வன்னி மக்களின்
இதயங்கள் கண்ணீரில்
கரைந்து அழுதது
இரந்து கேட்கும்!

ஐயகோ! தமிழீழம் கிடைத்து விட்டதாம்
மொத்தமாய் விடுதலைக்காய் செத்தவர்
இரண்டு இலட்சம் பேர் என
எஞ்சியுள்ள நாடாளும் 
பிணந் தின்னிப் பிசாசுகள்
கண்ணீர் அறிக்கை விடும்!

தம் கனவுகளை நிறைவேற்றுதற்கான
காலம் இதுவென
கந்தகத்துகள் படிந்த மண்ணில்;
தியாகத்தால் மேன்மையுற்ற
கரிய புலி வீரர் வாழ்ந்த
தேசம் நோக்கிப் புறப்படுவர் 
இன்னும் சிலர்!

கி(கெ)ளம்புங்கள்- இன்னும்
ஏன் தாமதம்?
என்றோர் குரல் கேட்கும்,
புக் பண்ணுங்கள் பிசினஸ் கிளாஸில் 
கிளிநொச்சி செல்வதற்கான
ப்ளைட்டினை என
மற்றுமோர் குரல்
மேலைத் தேசத்து மறு முனையிலிருந்து
ஓங்கி ஒலிக்கும்!
எவர் செத்தாலும் 
நாம் தான் ஈழப் போருக்கான
பங்காளிகள் என
தம் பேரினை 
உலகறியச் செய்து
தம்பட்டம் அடித்திட
நிதி கொடுத்தோர்
வரிசை கட்டுவர்! 

செத்தவர் பிணங்களின் மேல்
செங்குருதி வாசம் 
காயாது மணம் முடியும் முன்னே
மெத்தெனத் தம் பதவி
ஆசைக்காக பல உள்ளூர் - வெளியூர் 
குள்ள நரிகள் ஒன்று கூடி 
மோதத் தொடங்கும்!

மொத்தமாய் தலைவர் 
எமக்குத் தான் எல்லாம்
கொடுத்தார் என
ஈனப் பிறவிகள் தம்
வேஷ நாக்கால்
சந்தமிசைக்கும்!

விடுதலைக்காய் விலை கொடுத்தோர்
விடுதலைத் தீயை சுமந்தோர்
அனைவரையும்
எடு தலை என 
பதவி ஆசை கொண்டோரின்
பரி பாடல்
வன்னிக் காற்றிடையே
மேலைத் தேச
இசை வடிவாம்
POP Track இல் ஒலிக்கும்!
நாமும் வாழ வேண்டும்,
நம் சந்ததிகள் இந்த 
நாட்டை ஆள வேண்டுமென
வால் பிடிகள் கூட்டம்
தக்க நேரத்தில் தம் (சரியான சமயத்தில்) 
வேஷம் கலைக்கும்!

ஆஸ்திரேலியாவில் உள்ள
அவுசன் புதிதாய் பிறந்த
எம் தேசத்தின்
அ(எ)க்கவுண்டன் எனவும்,
ஜேர்மனியில் பிறந்த ஜேர்மனியன்
அரசியல் துறை பொறுப்பாளன் எனவும்
சுவிஸில் பிறந்த சுவிசன்
சுதந்திர தமீழத்தின்
அபிவிருத்தி பொறுப்பாளர் எனவும்
பாரிஸில் பிறந்த பாரீசன் 
முப் படைகளின் தலைவன் 
எனவும் ஒருவருக்கொருவர்
முட்டி மோதி
போட்டி போட்டு
தம் பிள்ளைகளை களமிறக்குவார்
இன்னோர் வகையறா மனிதர்கள்!

நீங்கள் போராடுங்கள்,
வன்னி மக்களே
வரும் பகையின்
கதை முடித்து
விண்ணைத் தொடும்
வீரத்தில் ஈழத்தவர்
உயர்ந்தவர் என்பதை
நிரூபியுங்கள்!

எல்லாம் முடிந்து
எதிரிச் சேனை அழிந்த பின்
வல்ல புலிகள் நிழலில்
வாழும் ஈழ மக்களை விட
நாம் தான் போராட்டம் 
வெல்ல வழி சமைத்தோம் என
வெற்றிக் கொடியோடு
Direct ப்ளைட்டில்
கிளி நொச்சி வர காத்திருந்தோம்!

ஐயகோ! எம் தலையில்
ஒன்பது நாடுகள் சேர்ந்து
மண்ணை அள்ளிப் போட்டல்லவா
நாசம் செய்து விட்டார்கள்;
என்று பல உள்ளங்கள்
இன்று வெம்பியழுகின்றன,
அன்றோர் நாள்
அனைவரும் நாட்டை விட்டு
வெளியேற முன்னர்
நன்றாய் சிந்தித்தால் 
இந்த நிலை வந்திருக்குமா?
ஆய்வு எழுதுவோம்,
புலிகள் சிந்திக்க முன்பதாக
வழி காட்டிகள் நாம் என
படம் போட்டு
போருக்காய் வழி காட்டுவோம்,
நிதியை சேகரித்து
மக்கள் முன் நேர்மையான
பற்றாளர்கள் போல் வேடமிட்டு
எம் பிள்ளைகள் புலத்தில் வாழ
வளத்தை(ப்) பெருக்குவோம்!

வெற்றிச் சேதி எம் காதில் 
வருகையில் வீதியில்
சாக்கிலேட் கொடுத்து
வேங்கைகளை வாழ்த்தி
கொண்டாடி மகிழ்வோம்,
ஒளி வீச்சும், உயிராயுதமும்,
களத்தில் நடந்தது என்னவும்
வீடியோ வடிவில் ஒரு மாதம்
எம் வாசலுக்கு வரவில்லையெனில்
மனதினுள் விம்மி வெடித்து
இணையத் தளங்களில்
தேடிப் பார்ப்போம் - இல்லையேல்
அனைத்துலகப் புலிகளின்
பணியகம் ஊடாக
வன்னிக்கு ஓர் சேதி அனுப்புவோம்!


தோல்விச் சேதி வருகையிலோ
முகத்தில் கவலை தோன்ற
ஈழத்தில் இன்னும் பல
கரும்புலிகள் வெடிக்காதா என
ஏக்கம் கொள்வோம்!
துரோகிகள், எட்டப்பர்கள் என
வாய்க்கு வந்தபடி எம் 
விசுவாசத்தை காட்ட
இணையத்தில் இயாலாமையால்
ஓடியோர் நாம் என்பதனை மறந்து
பிரச்சார(க்) கோஷமிடுவோம்!

ப்ளைட்டில் ஏறி(ப்)
பறக்கத் தொடங்கியவுடன்
உளத்தில் ஈழ
உணர்வில் ஏற்றி கொண்ட 
வீரத் தமிழ் மக்கள் நாம்
என(ச்) சொல்லி மகிழ்வதிலும் பார்க்க
ஈனப் பிறவிகள் என
உங்களை நீங்கள் சொல்லலாமே!

அட எவர் செத்தாலும் என்ன
ஈழத்தில் போருக்காய்
பலம் கொடுத்தோரை விட
பணம் கொடுத்த எம் தியாகம்
தான் மேலென
பட்டி மன்றம் நடத்துவோம்!

ஆளும் தமிழினம் நாம் என
அனைவரும் அறியச் சொல்லி
போரில் அவலப் பட்டு 
வாழும் இனத்தின் முகத்தில்
காறி உமிழ்வோம்- எஞ்சிய
வன்னி மக்கள் அனைவரும்
ஒன்றாய் எழுந்து போராடாத
நிலையால் தான்
இன்றோர் நாடு தமிழனுக்கு 
இல்லையே என
புலத்திலிருந்து
எமக்குள் நாமே 
புலம்பிக் கொள்வோம்!

அட இனியுமேன் தாமதம்?
ஐயகோ! தமிழீழம் கிடைத்து விட்டதாம்!
அனைவரும் கிளம்பி வாருங்களேன்!

இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!

15 Comments:

Mohamed Faaique said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள்.....

ஆகுலன் said...
Best Blogger Tips

கருத்து இட தகுதி] இல்லாதவன்..

SURYAJEEVA said...
Best Blogger Tips

குற்றம் புரிந்த ஒருவனாக தலையை தொங்கப் போடுவதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லை

Anonymous said...
Best Blogger Tips

தீ

Sivakumar said...
Best Blogger Tips

அயல்தேசங்களில் வாழும் தமிழ் ஈழ மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க சதி நடப்பதாக பத்திரிகை செய்தி படித்தேன். சதிகளை புறக்கணித்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
கவி படித்து மனம் கொஞ்சம் கூசத் தான் செய்கிறது...

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

அருமை நிரு

ad said...
Best Blogger Tips

உண்மை.இதைவிட சொல்ல என்ன இருக்கு.புலம்பெயர்ந்தோர் மட்டுமல்ல,இறுதிவரை உடனிருந்தோர் பலருக்கும் இது பொருந்தும்.(எம்மையும் சேர்த்து.)இந்த ஆதங்கத்தைத்தான் பதிவிலே நேற்றே கொட்டிவிட்டேன் நான்.

Prakash said...
Best Blogger Tips

ஈழ தாயின் உண்மை முகம் ......

கருணாநிதி ஆட்சியின் போது, ஊர் ஊராய் ஈழ தமிழர் குறித்தும், மாவீரர் தினத்தை குறித்து பேசவும் உரிமை இருந்தது...ஆனால் இப்போது...அவை அனைத்திற்கும் தடை...அனுமதி மறுப்பு.....

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொம்படித்த சீமான், நெடுமாறன் போன்றவர்களும், ஈழத்தாயின் குபீர் தீடீர் ஆதரவாளர்களும் இப்போதாவது திருந்துவார்களா ???? உண்மையான தமிழின உணர்வு எங்கு உள்ளது, யாரிடம் உள்ளது என்பதை புரிந்து கொள்வார்களா ????..இனம் இனத்தோடுதான் சேரமுடியும்........

" மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் ஏற்பாடு: போலீஸ் தடையால் உணர்வாளர்கள் அதிர்ச்சி

மேலும், அன்னதானம் மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாமை தடை செய்திருப்பது உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=65979

Yoga.S. said...
Best Blogger Tips

பகல் வணக்கம், நிரூபன்!புதுக்கவிதை(வசனகவிதை)புலம்பெயர்ந்தோர் குறித்தது.இன்று இது வெளியானதில் சற்று வருத்தம் தான்.ஒற்றை வார்த்தையில் சொல்வதானால்,"விதி வலியது".வேறு விளக்கம் இப்போதில்லை,தேவையுமில்லை.ஒவ்வொருவர் சிந்தனை வேறுபாடும்!அதில் தலையீடு செய்வது,மனித உரிமை மீறலாகும்!

Yoga.S. said...
Best Blogger Tips

மன்னிக்கவும்!அந்தப் பத்தாவது கருத்து அடியேனுடையது:-யோகா.எஸ்.Fr.-

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நினைத்துப் பார்க்கையில், வேதனையும் கண்ணீரும்தான் மிச்சம்...!!!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

புலம்பெயர் சமூகத்தின் ஒருமுகத்தை உண்மையாக உள்ளபடி பதிவிட்டுள்ளீர்கள். எமது தோல்வியின் பங்காளிகளில் நானும் ஒருவன் என்ற காரணத்தில் வெட்கித்தலைகுனிவதைத் தவிர, போலிக்கு எனை நியாயப்படுத்த வார்த்தைகளைத் தேட முயலவில்லை.

Unknown said...
Best Blogger Tips

தமிழீழம் கிடைக்க தடைகல்லாய் இருப்பது வேறுஒருவரும் இல்லை தமிழர்களே என
பொட்டில் அறைந்தது போல் இருந்தது கவிதை

சுதா SJ said...
Best Blogger Tips

ஆதங்கம் புரிகிறது................. :(ஆனாலும் நிறைய சொல்ல ஆசை... இருந்தும் இந்த புனித நாளில் விவாதங்களை விடுத்து அந்த புனித உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவோமே...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails