Friday, December 2, 2011

பீரங்கி கைப்பற்றல் மூலம் பேரெழுச்சியுற்ற வன்னி மக்களும் புலிகளும்!

ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து புலிகளால் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் மக்கள் மனங்களில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் யாழினை விட்டுப் பின்னகர்ந்த காலத்தில் புலிகள் பூண்டோடு அழிவார்களா என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கையில் தான் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் முல்லைத் தீவு இராணுவ முகா மீதான தாக்குதலுக்குத் திட்டங்கள் தீட்டப்படுகின்றது. இந்தக் தாக்குதல் தொடங்கப்படுவதற்கு இறுதி நேரம் வரை போராளிகளுக்கு எந்த முகாம் மீதான தாக்குதல் இடம் பெறப் போகின்றது எனும் விடயம் புலிகளால் சொல்லப்படாது மிகவும் ரகசியமான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் அபிமான நாற்று வலைப் பதிவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள் எனும் வரலாற்று நினைவு மீட்டற் தொடரின் இரண்டாம் பாகமாகும். இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். வேவுப் புலி வீரர்களினால் (உளவுத் துறை) திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முல்லைத் தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி பீரங்கிகள் மீது புலிகள் படையணிகள் யாரும் தாக்குதல் நடாத்தக் கூடாது எனும் உத்தரவும் அந்தச் சமரில் பங்கு பற்றிய போராளிகளுக்கு சமர் தொடங்குவதற்கு முன்பதாக அல்லது இறுதி நேரத்தில் தலமைப் பீடத்தினால் வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் வழித் தொடர்புகளுக்கு யாழ் வீழ்ச்சியின் பின்னர் இரணைப் பாலைக் கடற் பகுதியினைப் பயன்படுத்தி வந்த புலிகளுக்கு, விநியோகங்கள்,ஆயுதங்களை இறக்குமதி செய்வது என்பது மிகுந்த சிரமமாகவே இருந்தது.

முல்லைத் தீவு இராணுவ முகாமினைக் கைப்பற்றினால், பூகோள அடிப்படையில் கடல் வழித் தொடர்பு முதற் கொண்டு, புலிகளின் அனைத்து வகையான வழங்கல் - விநியோக (Distribution) நடவடிக்கைகளுக்கும் முல்லைத் தீவு சிறப்பிடம் பெறும் என்பதால் புலிகள் அணிகள் 1996ம் ஆண்டு, ஜூலை மாதம் 18ம் திகதியன்று தமது தாக்குதலை முல்லைத் தீவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் ஒன்று எனப் பெயரிடப்பட்ட படை நடவடிக்கையூடாக ஆரம்பிக்கின்றார்கள். இலங்கை இராணுவத்தினர் புலிகளின் பலத்தினை மிகக் குறைவாக எடை போட்டு உளவியல் ரீதியில் புலிகளின் வலு இவ்வாறு தான் இருக்கும் எனக் கணக்குப் போட்டு வைத்திருந்ததற்கு மாறாக குறைந்த ஆளணியுடன் முல்லைத் தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.ஈழ வரலாற்றில் யாழ் வீழ்ச்சியின் பின்னர் புலிகளின் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற அத்தனை சமர்களுக்கும் முன்னுதாரணமாக, புலிகளின் போராட்ட வளர்ச்சிக்கு மூல காரணமாக இந்த முல்லைத் தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் அமைந்து கொள்கின்றது.
"வெள்ளையரை (ஆங்கிலேயர்களை) விரட்டியடித்து தமிழர் தம் வரலாற்றில் பீரங்கிகளைக் கைப்பற்றிய பண்டார வன்னியனுக்குப் பின்னர்;" பண்டார வன்னியன் வில்லாண்டு வீரம் நிலை நாட்டிய அதே மண்ணில் 1996ம் ஆண்டு ஜூலை 18ம் திகதி அதிகாலைப் பொழுதில் புலிகள் இரண்டு ஆட்டிலறிப் பீரங்கிகளைக் கைப்பற்றுகின்றார்கள். தொட்டுப் பார்க்க, கட்டி அணைக்க எனப் போராளிகள் பலராலும் போட்டி போட்டு தம் கைகளால் அந்தப் பீரங்கிகளைத் தடவிப் பார்க்கத் தான் முடிந்ததே தவிர,அப் பீரங்கிகளை இயக்குவது தொடர்பிலும், எவ்வாறு இதனைக் கையாள்வது என்பது தொடர்பிலும் புலிகளுக்குத் தெரியாதிருந்தது.புலிகள் தம் கொரில்லாப் போராட்ட மரபிலிருந்து மரபு வழி இராணுவமாக மாறுவதற்கும் இந்த ஆட்டிலறி கைப்பற்றலும் ஒரு வகையில் மூல காரணியாக இருந்திருக்கிறது. ஈழப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக இந்த ஆட்டிலறிகள் இரண்டையும் கைப்பற்றிய புலிகள் தாம் கைப்பற்றிய ஆயுதங்களை சேகரிப்பதற்கும், தம்மால் கைப்பற்றப்பட்ட முல்லைத் தீவுப் பகுதியில் நிலைகளை அமைப்பதற்கும் பொது மக்களை களமிறக்குகின்றார்கள்.

மக்கள் மனங்களில் அளவில்லா மகிழ்ச்சி. புலிகளால் கைப்பற்ற பட்ட பகுதியில் மக்கள் அலையெனத் திரண்டு வந்து போராளிகளுக்கு உதவிகள் செய்வதிலும், மனதில் ஆனந்தம் பொங்கிட ஆயுதங்களை அள்ளி உழவு இயந்திரங்களில் ஏற்றுவதிலும் முனைப்புடன் செயற்பட்டார்கள்.பலர் கைப்பற்றப்பட்ட ஆட்டிலறிகள் இரண்டையும் காண வேண்டும் என ஆவல் கொண்டார்கள். ஆனால் புலிகள் இராணுவம் விமானம் மூலம் இரவோடு இரவாக முல்லைத் தீவில் தாக்குதல் நடத்தலாம் எனும் காரணத்தினால் இரு ஆட்டிலறிகளையும் கனரக தாக்குதல் வாகனத்தில் கட்டி இழுத்து காட்டில் உள்ள குழைகளால் மறைப்புச் செய்து முல்லைத் தீவு புதுக் குடியிருப்பு வீதியூடாக புதுக் குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தார்கள். மந்துவில் காட்டுப் பகுதியில் உழவு இயந்திரம் பழுதடைந்த காரணத்தினால் நிறுத்தி வைக்கப்படுகையில் அதிகாலை வேளை சந்தைக்குச் சென்ற ஒரு சிலர் அந்த ஆட்டிலறிகள் இரண்டையும் கண்டு விடுகிறார்கள். பின்னர் சொல்ல வேண்டுமா? ஆட்டிலறிகளைக் கண்ட ஒரு சிலர் ஊடாக புதுக் குடியிருப்பு மந்துவில் பகுதில் உள்ள மக்களுக்கும் கதை பரவுகின்றது.

இவ்வளவு காலமும் தம் இருப்பிடங்களை விட்டு இரவோடு இரவாகப் படைத் தரப்பு ஆட்டிலறி ஷெல்களை ஏவி தம்மை விரட்டி அடித்த காட்சிகள் அனைத்தும் தம் கண் முன்னே வந்து போக மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கினார்கள். சிலர் ஆட்டிலறிப் பீரங்கிகள் இரண்டையும் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்கள். இன்னும் சிலரோ தேங்காய்களை மூடையில் கட்டி வந்து சிதறு தேங்காய் அடிக்கத் தொடங்கினார்கள். மாலைகளைக் கட்டி வந்து ஆட்டிலறிப் பீரங்கியின் குழாய்களில் போட்டு தமிழர் தம் வீரம் இனித் நனி சிறக்கப் போகிறதே என மகிழ்ந்து நடமாடினார்கள். ஆட்டிலறிகளை இழுத்து வந்த போராளிகளுக்கு மாலை அணிவித்து சோடா வழங்கி, தின் பண்டங்கள் வழங்கி புதுக் குடியிருப்பு மந்துவில் பகுதி மக்கள் தம் மகிழ்சியினை வெளிப்படுத்தினார்கள். மக்கள் வெள்ளம் அலையெனத் திரண்டு வந்து பீரங்கிகள் இரண்டிற்கும் அண்மையில் தேங்காய் உடைத்து, மாலை அணிவித்துத் தம் சந்தோசத்தினைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில்;ஒரு சிலர் பீரங்கிகளுக்கு அர்ச்சனை செய்யும் நோக்கில் ஐயரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்தார்கள்.
இன்னும் சில நிமிடங்களில் நிலமை மோசமாகப் போகின்றதே என்பதனை உணர்ந்த புலிகள் உடனடியாக ஓர் கனரக வாகனத்தினைக் கொண்டு வந்து ஆட்டிலறிகளை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். ஓர் வெற்றிச் சமரின் பின்னர் புலிகளை வெறுத்து வன்னியில் வாழ்ந்தவர்கள் கூட ஒன்று கூடத் தொடங்கினார்கள். சிலர் புதுக் குடியிருப்பில் ஆட்டிலறிப் பீரங்கிகளை இழுத்துச் சென்ற வாகனம் தரித்து நின்ற இடத்தில் அங்கப் பிரதிஷ்ட்டை கூடச் செய்து தம் ஆனந்த நிலையினை வெளிப்படுத்தினார்கள். வன்னிப் பகுதியில் இனிமேல் புலிகளால் போராட முடியாது, புலிகளின் போராட்ட வலுக் குன்றி விட்டது எனப் பேசிய மக்கள் கூட ஒன்று கூடிப் புலிகளை வாழ்த்தும் நோக்கில் செயற்படத் தொடங்கினார்கள். வன்னி மண் அப்போது பேரெழுச்சி கொள்ளத் தொடங்கியது. 

"நந்திக் கடலோரம் முந்தைத் தமிழ் வீரம் 
வந்து நின்று ஆடியது நேற்று - இன்று
தந்தனத்தோம் தாதை என்று நடமாடி 
இங்கு வந்து வீசுறது காற்று!
கையில் வந்து சேர்ந்தது 
ஆட்லறி அதைக் கொண்டு வந்த
வேங்கையை(ப்) போற்றடி!
ஐயமில்லை என்று சொல்லிக் காட்டடி - இனி
அந்நியரின் பாசறையில் பூட்டடி! 
எனக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடலொன்றை எழுதினார். நிரோஜனின் குரல் அந்தப் பாடலுக்கு அழகு சேர்த்தது. புலிகளின் குரல் வானொலியில் அப்போது காலையும், மாலையும் அந்த வெற்றிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"முல்லை மண் எங்களின் வசமாச்சு
ஈழம் முற்றிலும் வெல்வது திடமாச்சு"
எனக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் மற்றுமோர் பாடலை எழுதினார். மக்கள் மனங்களில் ஈழக் கனவு அப்போது வலுப் பெறத் தொடங்கியது. புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் பிடிப்பார்கள் எனும் நம்பிக்கை மக்கள் மனங்களில் அப்போது வேர் கொள்ளத் தொடங்கியது.

கைப்பற்றப்பட்ட ஆட்டிலறிப் பீரங்கிகளைத் தொட்டுப் பார்த்த தலைவர் வன்னியில் மக்கள் பார்வைக்காக வீதியால் இழுத்துச் சென்று மக்களுக்கு காண்பிக்குமாறு ஓர் சிறப்பு அறிவிப்பினை அப்போது போராளிகளுக்கு வழங்கினார். காட்டிலிருந்து பெற்ற குழைகளால் மறைக்கப்பட்டு வன்னியின் சில பகுதிகளில் பீரங்கிகள் இரண்டும் பொது மக்களின் பார்வைக்காக வலம் வந்தது.இப்போது புலிகள் கைகளிற்கு கிடைத்த புதிய ஆயுதத்தினை இயக்குவது;பராமரிப்பது முதலிய செயல்கள் போராளிகளுக்குப் புதியனவாகவே இருந்தது. அப்போது தான் புலிகள் அமைப்பின் பொறியல்- கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த கேணல் ராஜூ (குயிலன்) அவர்களிடம் ஆட்டிலறிகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெறும் எனும் நோக்கில் ஆட்டிலறிகள் இரண்டையும் கையளித்தார்கள் புலிகள். 
இனி அடுத்த பாகத்தில் புலிகளின் பீரங்கிப் படைப் பிரிவின் உருவாக்கம், புலிகளின் பீரங்கிப் படைப் பிரிவின் வளர்ச்சிக்கு உதவிய கேணல் ராஜூ அவர்களின் பங்களிப்புக்கள், பற்றிப் பார்ப்போமா. 

12 Comments:

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//இது தொடர்பில் அறிய ஆவலா? //
சந்தேகமின்றி.காத்திருக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பல பல புதிய விஷயங்கள் அரிய முடிகிறது நிரூபன்...!!!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!தொடருங்கள்.

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது..... நிறைய வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியா தகவல் என்றே நினைக்குறேன்..... தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்.....

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

""""புலிகள் தம் கொரில்லாப் போராட்ட மரபிலிருந்து மரபு வழி இராணுவமாக மாறுவதற்கும் இந்த ஆட்டிலறி கைப்பற்றலும் ஒரு வகையில் மூல காரணியாக இருந்திருக்கிறது.""""

செய்திகளை நீங்கள் ஆழ அகலமாக தரும் பாங்கு, பாசாங்கு இல்லாத பாராட்டுக்கு தகும், அருமை சகோ

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,தெளிவாகவும் மனதில் படும்படியும் சொல்லப்பட்டுள்ளது.உலகம் அறிய உங்களிடம் நிறைய இருக்கிறது.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நீரூபன்..!
இதெல்லாம் எனக்கு புதிய தகவல்..
 நன்றி

Anonymous said...
Best Blogger Tips

இந்த தொடரில் நிறைய புதிய செய்தி..புதிய கோணத்தில்...
தொடருங்கள் சகோதரம்...DATE திகில் பட TITLE மாதிரி உள்ளதே...

கோகுல் said...
Best Blogger Tips

எழுச்சி சமயங்களில் இது போன்ற பாடல்கள் பரவுவது
நீங்கள் சொல்வது போல பேரெழுச்சியாக மாற்றும்.
நாங்களெல்லாம் அறியாத பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.தொடருங்கள்.

Unknown said...
Best Blogger Tips

வழக்கம் போல் அசத்தல் எழுத்துக்களில்
உலகதமிழனிடம் தலைவரின் புகழைச் கொண்டு சேர்க்கின்றீர்கள்..நன்றிகள் சென்னால் ஈடாகாது...நண்பா

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பதிவு செய்யப்படு,ம் வரலாறு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails