Saturday, August 24, 2013

ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்?
"ஓ...அது வந்தண்ணை, இன்னைக்கும் வழமையான நேரத்திற்கு தான் எழும்பினேன். திடீரென என்ர அம்மாவின் நினைப்பு(நெனைப்பு) வந்திட்டுது. அதான் அவா இப்ப, நான் இல்லாமல் பிள்ளைப் பாசத்தில துடிச்சுப் போயிருப்பா என்ற நினைப்பில தூங்கி விட்டேன்".

"அது சரி செந்தோழன், போராளிகள் என்றால் இப்படியான கவலை இருக்கத் தான் செய்யும். ஆனாலும் உங்கடை அம்மாவைப் பற்றி நீங்க கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், எங்கடை மண்ணில வாழுற எத்தனையோ அம்மாக்களை யார் நெனைச்சுப் பார்க்கிறது?
கெதியா(வேகமாக) வெளிக்கிட்டு வாரும். பயிற்சிக்கு என்ன?
நீர் இப்பவே பத்து நிமிசம் லேட். நான் போறேன்.
எனச் சொல்லி செந்தோழனின் நினைவுகளைக் கலைத்து அவனை ட்ரெயினிங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கத்திலிருந்த மாஸ்டர் புரட்சிக்கு, விடை கொடுத்தவனாய் கையில் பற்பொடியினை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினான் செந்தோழன்.
மாஸ்டர் சொல்லுவதும் சரி தான்."நான் ஒருவன் என்ரை அம்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், மாற்றான் பிடியில் உள்ள மண்ணில் நாளாந்தம் தம் இன்பங்களைத் தொலைத்து வாழ்கிற பல அம்மாக்களுக்கு எப்போது விடிவு கிடைப்பது? எனச் சிந்தனை கொண்டவனாய் செந்தோழன் தன் காலைக் கடன்களை முடித்துப் பயிற்சிக்குத் தயாரானான்.

தாயக விடுதலைப் போரில் மாவீரர்களான தனது பிள்ளைகள் மலரவன், எழில்நிலா ஆகிய இருவரை இழந்த துயரம் ஒரு புறத்திலும், தன் கணவனைப் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கண் முன்னே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுந் துயரம் மறு புறத்திலும் மனதின் நிம்மதி அலைகளைத் துண்டாடிக் கொண்டிருக்க;
தன் மகனாகிய நிஷாந்தன் தனக்கு ஆறுதலாக இறுதிக் காலம் வரை இருப்பான் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்த கனகம்மாவின் நினைப்பில் மண் தூவி விட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவன் தான் செந்தோழன்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதுங்கித் திரிந்த புலிகள் அணியினரை மோப்பம் பிடித்து, அவர்களுக்குத் தொல்லை கொடுத்து "அண்ணே, நானும் இயக்கத்திற்கு வரட்டே" எனும் நச்சரிப்புக் கொடுத்துக் கொண்டிருந்த நிஷாந்தனை "நீங்கள் இப்ப சின்னப் பிள்ளை தானே" உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லை. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கோ" என்று போலிச் சாட்டுச் சொல்லி புலிகள் சமாளித்து வந்தார்கள்.

ஏற்கனவே இரண்டு குடும்ப உறுப்பினர்களைப் போராட்டத்திற்காக காணிக்கையாக்கிய கனகம்மா- பொன்னையா குடும்பத்திலிருந்து மேலும் ஒருவனைப் போராட்டத்திற்குச் சேர்த்துக் கொள்ளுவது அழகில்லை என்று நிஷாந்தனைப் புறக்கணித்து வந்தார்கள் புலிகள்.

நிஷாந்தனின் தந்தையார் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாய் இராணுவத்திற்கு விசுவாசமானவர்களால் வழங்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் முதலாய்;
"என் அப்பாவைப் போல இவங்கள் எத்தனை பேரைச் சுடுவாங்க(ள்)? இனிமேலும் என்னை மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் பொறுத்துப் போகலாமோ?"
 நான் எப்படியாச்சும் போராட்டத்தில் இணைய வேண்டும் எனும் தீராத ஆவல் கொண்டு காத்திருந்த நிஷாந்தனுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாய் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதல் அமைந்து கொள்கிறது.
08.03.1999 அன்றும் வழமை போலவே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்காகவும், புலனாய்வுத் தகவல் சேகரிப்பிற்காகவும் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் அணியோடு ரகசியமான சந்திப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் நிஷாந்தன். திடீரென யாரோ கொடுத்த தகவலைத் தொடர்ந்து, வேகமாக அவ் இடத்தைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் மறைந்திருக்கும் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
புலிகளும் பதில் தாக்குதல் தொடுத்து, இராணுவத்தினரை நிலை குலையச் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் தமது பின் பலத்திற்காக (BACKUP) மேலும் ஒரு இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.  இந் நேரத்தில் துப்பாக்கி ரவை ஒன்று நிஷாந்தனின் கையினைப் பதம் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து பதில் தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்தால் தாம் அனைவரும் இங்கேயே மாட்டிக் கொள்ள வேண்டும் எனும் நினைப்பில் பின் வாசல் வழியே தப்பிச் செல்லத் தீர்மானித்து காயம்பட்ட நிஷாந்தனை தோளில் சுமந்து செல்ல முடிவெடுத்தார்கள் புலிகள்.

ஆனால் நிஷாந்தனோ, "என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாம்.
உங்களாலை என்னைப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியுமென்றால் மட்டும் என்னைக் தூக்கிக் கொண்டு போங்க. இல்லையென்றால் இங்கேயே விட்டு விட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லியது அங்கே இருந்தோருக்கு அதிர்ச்சியினை உருவாக்கியது.

"என்ன யோசிக்கிறீங்க? இது யோசிப்பதற்கான நேரமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சால் நிலமை மோசமாகிடும். என்னை உங்களோடு இணைத்துக் கொள்வதாகச் சத்தியம் பண்ணுங்கோ. நான் கண்டிப்பா உங்களோடு வரச் சம்மதம் தாரேன்" என்று கூறி முடித்தான் நிஷாந்தன்.

நிலமை மோசமாவதை உணர்ந்த புலிகளின் ஊடுருவித் தாக்கும் அணித் தலைவர் புயலரசன், "ஓக்கே நீங்களும் இன்று முதல் எங்களோட தான் இருப்பீங்க" என வாக்குக் கொடுத்து நிஷாந்தனையும் போரட்டத்தில் இணைப்பதாக முடிவு செய்தார்கள் புலிகள்.
கையில் துளைத்த துப்பாக்கி ரவையின் காயத்திற்கு தமக்கு விசுவாசமான மருத்துவர் மூலம் மருந்திட்டுக் காயமாற்றிய பின் ரகசிய கடல் வழிப் பயணம் முடித்து, வன்னிப் பகுதியில் உள்ள புலிகளின் பாசறைக்குள் நுழைந்த நிஷாந்தன் செந்தோழனாகப் பெயர் மாற்றம் பெற்றுப் புலியானான்.

தன் மகனைக் காணவில்லையே எனும் ஆதங்கத்தோடு தனி மரமாய் இருந்த கனகம்மாவிற்கு போராளி ஒருவன் செந்தோழன் கைப் பட எழுதிய கடிதத்தினை ரகசியமாக வந்து கொடுத்து விட்டுச் சென்றான்.
"அன்புள்ள அம்மா, நான் அண்ணன் நிழலில் இங்கே பத்திரமாக இருக்கிறேன்.
என்னைப் பற்றி நீ கவலைப் படாதே. என்னைக் காணவில்லை என்று மட்டும் நீ ஒரு மனுவினைப் போலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் திணைக்களத்திலும் கொடு. இல்லையேல் இராணுவத்தினர் வீட்டுச் சோதனைக்காக வரும் சமயத்தில் என்னை எங்கே எனக் கேட்டுத் தொல்லை செய்வார்கள். ஆதலால் உனதும், எங்கள் உறவினர்களின் நலன் கருதியும் இக் காரியத்தை உடனடியாகச் செய் அம்மா” எனத் தன் மடலினை முடித்திருந்தான் செந்தோழனாகிய நிஷாந்தன்.
நாட்கள் நகர்ந்தன. செந்தோழனின் வேண்டுகோளுக்கு அமைவாக மனித உரிமைகள் திணைக்களத்தில் தன் மகனைக் காணவில்லை என்று மனுக் கொடுத்த பின் தான் தனிமையில் வாழ்வது மனக் கவலையினை அதிகரிக்கிறது எனும் உண்மையினை அனுபவமாய் உணர்ந்த கனகம்மா, தனக்கு ஆதரவாய் யாருமே இல்லை எனும் தவிப்போடு, அயல் வீட்டில் வாழ்ந்த தவராசா குடும்பத்தாரோடு போய் ஒட்டிக் கொண்டாள்.

என் மகனுக்கு ஏதும் ஆகக் கூடாது எனும் பிரார்த்தனையினைத் தவறாது மேற்கொண்டவளாய், தவராசாவின் பிள்ளைகளுக்கு பாடஞ் சொல்லிக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு, தான் வாங்கி உண்ணும் உணவிற்கான கைம்மாறினையும் தீர்த்துக் கொண்டிருந்தா(ள்) கனகம்மா. தவராசாவின் சுட்டிப் பிள்ளைகளான நித்யா, வல்லவன் ஆகிய இருவரும் அடிக்கடி கேட்கும் கேள்வியான "ஆச்சி நிஷாந்தன் மாமா எங்கே? அவர் எப்போ வருவார்?
என்ற கேள்விகளுக்கு "அவர் வெளிநாடு போய் விட்டார்" இன்னும் கொஞ்சக் காலத்தில எங்கடை நாட்டுப் பிரச்சினை எல்லாம் தீர்ந்த பின்னர் கண்டிப்பா வந்திடுவார் என்று மழுப்பல் பதில் சொல்லிச் சமாளித்து வந்தா கனகம்மா.
என் மகன் போராட்டத்தில் இணைந்து விட்டான் என்பதனை இந்தச் சிறு வாண்டுகளிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும்? ஒரு வேளை வாய் தவறி ஆமிக்காரங்க(ள்) வீடு செக் பண்ண வரும் சமயத்தில்(டைம்மில) இந்தச் சுட்டிகள் ரெண்டும் வாய் தவறி உளறி விட்டால் "வயசான எனக்கு ஏதும் ஆனாலும் பரவாயில்ல. இன்னும் கொஞ்ச நாளில கட்டையில போற கிழடு தானே நான்” ஆனால் என்னையை வைத்துப் பார்க்கிற(பராமரிக்கும்) குற்றத்திற்காக இந்த அப்பாவிக் குடும்பத்திற்கும் அவையளின்ர பிள்ளைகளுக்கும் ஏதும் ஆகிவிட்டால் யார் பதில் சொல்லுவது எனும் காரணத்தினால் "தன் மகன் பற்றிய ரகசியத்தை தன் மௌனங்களுக்குள் புதைத்து விடுகிறாள் கனகம்மா.

தவராசாவும், அவர் மனைவி கோமதியும் காலையில் வேலைக்காகச் சென்று விட, வீட்டில் தன் தனிமையினைப் போக்குவதற்கு உதவியாக, சுட்டிகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்த கனகம்மாவினைப் பார்ப்பதற்காக இரு இளைஞர்கள் வருகிறார்கள்.
"அம்மா எப்படி இருக்கிறீங்க? நலம் தானே?
என்ற போராளிகளின் அன்பு மொழி கேட்டு, அவர்களைக் கட்டி அணைத்து அழ வேண்டும் போலிருந்தது கனகம்மாவிற்கு.

“தம்பியவை என் மகன் நிஷாந்தனைக் கண்டனீங்களே? (பார்த்தீங்களா)? எப்படி இருக்கிறான் அவன்? எனும் ஒரு தாயின் மகன் பற்றிய எதிர்பார்பினுள் ஒரு வீரச் சாவுச் செய்தியினைச் சொல்லுவது என்பது மிகவும் இயலாத காரியமாகி விட, பொய் வேசம் போட மனமில்லாத போராளிகள் இருவரும்;
"அம்மா இப்போ நான் உங்களுக்குச் சொல்லப் போவது அதிர்ச்சியாக இருக்கலாம்; ஆனாலும் மனித வாழ்வென்றால் இது சகஜம் தானே. அதே போலப் போராளிகள் வாழ்விலும் இது சகஜம் அம்மா.

"உங்கட மகன் நிஷாந்தன்...சாவகச்சேரியில இடம் பெற்ற வழி மறிப்புத் தாக்குதலில் ரெண்டு கிழமைக்கு முன்னாடி(2வாரத்திற்கு முன்னாடி) வீரச்சாவடைந்திட்டார். அவரின் வித்துடலை வன்னிக்குக் கொண்டு போய், விசுவமடு துயிலும் இல்லத்தில நாங்கள் விதைச்சிருக்கிறோம்.
வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் வருவது இயல்பு தானே அம்மா. யோசிக்காம(ல்) இருங்கோ. நாங்கள் இங்கே கன (அதிக) நேரம் நிற்க முடியாது.
ஆமி வந்தால் பிரச்சினைப் போயிடும். நாங்கள் போயிட்டு வாரோம்’(போய் வருகிறோம்) என்று சொல்லி விட்டுப் புறப்பட்ட போராளிகளைப் பார்த்தபடி விறைத்துப் போய் நின்ற கனகம்மாவின் கைகளைப் பிடித்து உலுப்பி, நித்யாவும், வல்லவனும் சுய நினைவிற்குக் கொண்டு வந்தார்கள்.
"ஏன் ஆச்சி ஒரு மாதிரி இருக்கிறீங்க?" எனும் சிறு வாண்டுகளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் கண்களில் நீர் முட்டியவாறு, அழக் கூடத் திராணியற்று மனமெனும் இரும்புக் கோட்டையினுள் தன் கவலையினைப் பதுக்கி வைக்க முடிவு செய்த கனகம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியல்லை.

தனக்குள் யோசித்தா. என்ர மகன் இறக்கவில்லை. அவன் வாழ்கிறான்.
தம்பி (பிரபாகரன்) சொன்ன மாதிரி ‘விதையாகும் ஒவ்வொருவரும் மறு நாள் விருட்சமாக முளைக்கிறார்கள்'  என்பது தானே உண்மை.
என்ர மகன் இன்னும் இறக்கவில்லை. அவன் இப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். நான் அழக் கூடாது. அழவே கூடாது!
எனத் தன்னைத் தேற்றியவாறு கண்ணிலிருந்து கீழே விழுவதற்குத் தயாராகவிருந்த ஒரு துளி கண்ணீரைக் கையால் துடைத்தா கனக்கம்மா.

எங்கே பிள்ளையள் நித்யாவும், வல்லவனும் போட்டீங்கள்?
ஓடி வாங்கோ நான் கதை சொல்லப் போறேன். என்றவாறு தன் மனதைச் சிறு வாண்டுகள் பக்கம் திசை திருப்பினா கனகம்மா!

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails