Sunday, June 2, 2013

ஊர் ரொம்ப மாறிடுச்சு

கந்தகம் கலந்த தெருக்களில் இப்போது
காமினிப் புதல்வர்களின் நடமாட்டம்
விந்தைகள் பல புரிந்தவர் உறங்கும்
வீர நிலத்தின் மீது விமானத் தளத்திற்கான
அடிக்கல் நாட்டு விழா
சொந்தம் எம் பூமி இது என்று
சொல்லிட முடியா அளவிற்கு
வந்தவர் இங்கே திரிகிறார் - கையில் துவக்குடன்;
எம் வரலாற்றை அவரும் மாற்றுறார்
ஊர் ரொம்ப மாறிடுச்சு
போனவர் - வந்தவர் - ஏன் இனியும்
போகப் போறவர் கூட
ஆவலாய்ச் சொல்லுறார்
அதைக் கேட்கையில் நம்மவரும்
இப்போது ஆனந்தம் கொள்கிறார்

செம் புழுதித் தெருக்களில் படிந்த
செங்குருதி மணம் ஓயும் முன்னே
சங்கமித்தை வம்சம் தன்
சுவடு இது என்று சத்யம் மே ஜேயதே சொல்லுது
நம் சுவடு எங்கே என்று நாளைய
சந்ததிக்கும் நாம் சொல்லிட முடியா நிலையில்
நம்மினமோ சிறையுள் நாளும் தவிக்குது

இருப்புக்கள் யாவும் தொலைத்து
இனி இழப்பதற்கில்லை என்றான பின்
வெறுப்புக்குள் வாழ்கிறது ஓர் சந்ததி
வேரறுத்த வரலாற்றை மாற்றிட
பல வீர தீரச் செயல்களைச் செய்கிறது புத்தனின் சந்ததி

முறி கண்டிப் பிள்ளையாரின் கீழிருந்தும்
முந்நூறாண்டு பழமையான புத்தர் சிலை
நாளை முளைக்கலாம் - எங்கள்
கவரேஜ் பிள்ளையாரும்  கண்டாவளையானும்
ஏன் புதூரும், வற்றாப்பளையும், மடு மாதாவும்
புத்தர் சிலையின் கீழ்
புதுமையாய் அமிழ்ந்து போகலாம்

துப்பாக்கிகளின் பிடியில் இப்போது
புது வசந்த கீதம் ஒலிக்கிறது
தப்பென்று சொல்லினாலோ
தவறி வாய் திறந்தாலோ
நாலாம் மாடி தான்
இப்போதைக்கு ஏற்ற இடம் என்று சாசனம்
எழுதப்பட்டாகி விட்டது

ஊர் இப்போது மாறித் தான் போச்சு
கார் இருள் அகற்ற களமாடிய நினைவுகள்
கந்தகம் சுமந்திட்ட கறுப்பு வரலாறுகள் யாவும்
மந்தமாய் மெது மெதுவாய் - எம்
மனங்களை விட்டகலலாச்சு
இனி ஓர் காலத்தில்
பழைய ராசாக்கள் கதை போலவும்
அடி பாட்டு படத்தில் வரும்
பைட் சீன் போலவும்
எம் தாய்மார்கள் தம் பிள்ளைகட்கு
உப கதை சொல்லக் கூடும்!

பாவம் வன்னிச் சனம் என்ற வார்த்தை
பறி போயி இப்போது
மோசம் இந்தச் சனம் என்று உலகம்
தூற்றலாச்சு
வீரம் எழுத நினைத்த வரலாறு கூட
வாழும் வரை தான் போற்றிடுவோம் எனும்
நிலையால் நாளும் நாறிப் போகலாச்சு

நிமிர்ந்து நின்ற வேளையில்
நிறைவாக வழங்கிய கைகள் எல்லாம்
இப்போது ஏதுமில்லை என்றான பின்
தம் பாட்டில் தம் பாட்டை பார்க்கலாச்சு!

இனி என்ன?
கதவில்லா கக்கூசு
காலையில் ஒதுங்கும் பனை வடலி
இவையாவும் சாமப் பேய்கள் உலவும்
சந்நிதியாய் மாறிடலாச்சு

காப்பொட் வீதி - களைப்பாற
கூல் சாதனம்
மாப்பிள் பதித்த பல வீடு
மணிக்கு மணி அப்டேற் காட்டும்
இன்ரநெட்டு
ஆப்பிள் முதல் அனைத்தும் கிடைக்கும்
அதிசய ஊராய் எங்களூர் ஆச்சு

உலைக் களம் பாடியவன்
இப்போதிருந்திருந்தால்
ஊர் பட்ட பாட்டை - பெருங்
கவி நிலையிலே தந்திருப்பான்,
நிலைக்கும் எம் தேசம என
கொண்ட கனவுகளும்
எமை விட்டு நீங்கிப் போகும் நிலையில்
உயிர் பிழைக்கும் நிலையை எண்ணியபடி
எங்கள் தெருக்களும் அழகிறது

சிறிய மனங்களின் பெரிய வெப்பியாரங்கள்
கரிய இருள் கொண்டு அகற்றப்படுகின்றது
ஏ 9 தெருவும், எம்மவர் ஏறி நடந்த
வீதிகளும் இனி
எம் வாய்க்குள் நுழையாத பெயர்
கொண்டு மாற்றப்படும்
போனதோ வரலாறு என்று யாரிடம் சொல்லி
நோகலாம்?

வந்தாரை வாழ வைத்த வன்னி நிலம்
இன்றும்
சூறையாட வந்தோரை
வாழ வைக்கிறது
நிலம் மட்டும் தன் நிலையில் மாறவில்லை
நாம் மட்டும் மாறி விட்டோம்

பனங்காம மண்ணின் மகிமைகள்
தொல் பொருள் ஆய்வில் கிடைக்கா வண்ணம்
பல பருந்துகள் நோட்டமிடுகின்றது - யார்க்கும் தலை
வணங்காதிருந்த வரலாறுகள் வெளித் தெரியா வண்ணம்
இலங்காபுரி வேந்தால் இன்றும் மூடப்படுகின்றது

எங்கள் நிலம் இன்றும் அழுகிறது தேற்றுவாரின்றி
ம்ம்...ஊர் ரொம்பத் தான் மாறிடுச்சு



1 Comments:

Unknown said...
Best Blogger Tips

நலமா நிரூபன்!

வேதனையின் விளிம்பில் நின்று கொண்டு உங்கள் உள்ளம் துடிக்க
உதடுகள் உதிர்த்த சோக வரிகளில் நான் பழைய நிரூபனைப் பார்கிறேன்!மாற்றம் வரும் ஒருநாள்! அது வரை ஆற்றுபடித்திக் கொள்ள வேண்டுகிறன்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails