Wednesday, April 3, 2013

மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய எழுத்தாளர்!


பதிவிற்குள் நுழைய முன்: இப் பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. ஆனாலும் இப் பதிவின் மையக் கருவானது, பதிவுலகில் உள்ள யாரோ ஒருவரின் வாழ்க்கையோடு பொருந்திப் போனால்...அதற்குக் கம்பனி பொறுப்பேற்காது.
சாய்மனைக் கட்டிலில் காலுக்கு மேல் கால் போட்டு, நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு, ஜஸ்போ கிஸ்போ பீடியினைச் சுவைபட இழுத்துப் புகை விட்டுக் கொண்டிருந்தார் ஜெம்புலிங்கம். 
‘’என்னங்க? நான் கூப்புடுறது காதிலை கேட்கலையோ? இப்பூடி எம்புட்டு நாளைக்குத் தான், ஒரு வேலையும் இல்லாமல், சோம்பேறி மாதிரி வூட்டிற்குள் உட்கார்ந்திருந்து, எழுத்தாளாரகப் போறேன்...........எழுத்தாளராகப் போறேன்; ப்ளாக்கராகப் போறேன், ப்ளாக்கராகப் போறேன் என்று ஒன்னுக்கு எண்ணூற்றி எட்டுத் தரம் வாய் ஓயாமல் சொல்லுவீங்க? எனக் கணவன் மீதுள்ள கோபத்தினை பொறி கக்கும் வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினாள் ஜலசலட்சுமி.
’என்ன புள்ள பேசுறாய்’? எழுத்தாளராகிறதென்றால் சும்மாவோ? கொஞ்ச நேரம் பேசாமல் இரும் பார்ப்போம். இன்றைய தினசரிப் பத்திரிக்கை எதிலையாச்சும், கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு ஏதாச்சும் வந்திருக்கா? அப்பிடி ஏதாச்சும் வந்திருந்தாலாவது, நான் போட்டிக்கு எழுதிப் பரிசு வாங்கி, ஒரு பேமஸ் எழுத்தாளரா மாறிடலாமில்லே’
எனத் தன் மனைவியாகிய ஜலசலட்சுமியிடம் எதிர்ப் பேச்சுப் பேசிக் கொண்டு, பத்திரிகையைப் புரட்டிய, ஜெம்புலிங்கத்திற்கு ‘இணையத்தில் கலக்கும் இளைஞர்கள்’ என்ற பகுதி கண்களில் தட்டுப்பட்டது.

’இங்க பாரடி புள்ளே! இணையத்திலை ப்ளாக் என்று ஒன்று இருக்காமில்லே.அதிலை நம்ம தமிழ் மொழியிலையும் எழுதலாம்னு சொல்லுறாங்க. தமிழின் டாப் ருவண்டி ப்ளாக்கரைப் பற்றி ஒரு சிறப்பு அலசலையெல்லே நம்ம ’அருகே உரசு’ பத்திரிகைக்காரங்க போட்டிருக்காங்க’என இணையத்தில் உள்ள ப்ளாக் பற்றிய அருமை பெருமைகளை விலாவாரியாகத் தன் மனைவிக்கு ஒப்புவித்துக் கொண்டிருந்த ஜெம்புலிங்கத்தின் மனத்திரையில் ’’தானும் ஒரு ப்ளாக்கராகினால்’’ என்ன என்கின்ற எண்ணம் ஓடத் தொடங்கியது.

‘இனிமேவெயிட் பண்ணக் கூடாது’ எனும் உணர்வு கொண்டவராக, இப்பவே எப்படியாச்சும் கூகுள் அம்மம்மாவின் உதவியினைப் பெற்று; ஒரு ப்ளாக்கினைத் திறந்து, நானும் ஒரு பிரபல பதிவராகி, அலெக்ஸா ட்ரேங்கில் முன்னுக்கு வந்து, அட்சென்ஸ் மூலமாக விளம்பரம் சம்பாதிப்போம் எனத் தன் மனதில் கற்பனைக் கோட்டையினைக் கட்டியவாறு ஒரு ப்ளாக்கினை உருவாக்கினார் ஜெம்புலிங்கம்.

‘தான் ஒரு வித்தியாசமான பெயரோடு, ப்ளாக்வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் ‘விளிம்போ-லம்போ எனப் பெயர் வைத்துத் தன் கன்னிப் பதிவினை வலையேற்றும் நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் ஜெம்புலிங்கம். நாட்கள் நகர்ந்தன.விளிம்போ-லம்போவில் முப்பது பதிவுகளுக்கு மேற் பதிவிட்டும், பாலோயர் அதிகரிக்கவும் இல்லை, நாளாந்தம் பதிவுகளைப் படிப்போர் தொகை அதிகரிக்கவும் இல்லை,எனும் நிலையினை உணர்ந்து மிகுந்த மன வேதனையடைந்தார் ஜெம்புலிங்கம்.

ஸப்பா....இந்த ரேஞ்சிலை போய்க் கொண்டிருந்தால் தான் எப்போது பிரபலமாகுவது? பத்திரிகையில் தன் ப்ளாக் பற்றிய அறிமுகம் எப்போது வருவது? என மனமுடைந்திருந்த ஜெம்புலிங்கத்தினைத் தோள் கொடுத்துத் தாங்கும் வகையில் மனைவி ஜலசலட்சுமி அருமையான ஒரு ஐடியாவினைக் கொடுத்தார்.

‘ஏங்க...எம்புட்டு நாளைக்குத் தான் நீங்களும் ஒண்டியா ப்ளாக் எழுதி உங்களோடை உணர்வுகளை மாத்திரம் பகிர்ந்து கொள்ளுவீங்க?
பேசாமல் என்னையைப் பற்றியும் ஏதாச்சும் எழுதிப் பாருங்களேன்,
நமக்குத் தான் அதிஷ்டரேகை உச்சியில் இருந்தால், நீங்களும் பேமஸ் ஆகிடுவீங்க. நமக்கும் அட்சென்ஸ் மூலமா வருமானமும் கிடைச்சிடுமில்லே;
என்று ஐடியா கொடுத்தாள் ஜெம்புவின் மனைவி ஜலசலட்சுமி.

ஜலசலட்சுமியின் ஐடியாவினைத் தன் மனதிலிருத்தி, தீர்க்கமான யோசினையில் இறங்கினார் ஜெம்புலிங்கம். மறு நாள், தன் வாழ்வில் வசந்தம் உதயமாகப் போகிறது எனும் மகிழ்ச்சியில், ப்ளாக்கினை ஓப்பின் பண்ணி ‘திணவெடுக்கும் என் மனைவியினை அடக்க தீரர்கள்தேவை’ என ஒரு கலக்கலான பதிவினை எழுதி வலையேற்றினார். பதிவினை வலையேற்றி அரை மணி நேரமும் ஆகவில்லை.வருகையாளர்களின் தொகை நூற்றுக் கணக்கில்- நிமிடத்திற்கு எனும் விகிதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.கூடியது. பின்னூட்டங்கள் வழமைக்கு மாறாக, நூற்றுக்கு மேல் வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆபாசமான பின்னூட்டங்கள் வரவே, தன் மறு மொழிப் பெட்டியினை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெம்புலிங்கம்.

தன் மனைவியினைப் பற்றி எழுதிய தலைப்பினால், இம்புட்டுப் பேர் வாறாங்களே எனும் உணர்வோடு பேஜ் வியூவினைச் செக் பண்ணிய ஜெம்புவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும், மொத்தமாகப் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்- திணவெடுக்கும் மனைவி பற்றிய பதிவினைப் படித்திருக்கிறார்கள் எனும் நிலையறிந்து அகமகிழ்ந்தார். 
தன் அருகே நின்ற மனைவியினை இறுக்கி அணைத்து முத்தமிட்டு மகிழ்வோம் எனும் நோக்கில் தயாரான ஜெம்புவின் உணர்ச்சிகளில் உப்பு நீரை ஊற்றும் நோக்கோடு அலைபேசி மணி ஒலிக்கும் சத்தம் காதில் கேட்டது, 


‘நாங்கள் XYZPQR பத்திரிகையில் இருந்து பேசுறோமுங்க. உங்க மனைவி விற்பனைக்கிருக்காங்களா?
இல்லே இலவசமா என்று கேட்டது தான் தாமதம்............முகத்தில் யாரோ அசிட் ஊற்றியது போன்ற எரிவினை உணர்ந்தவராய், 
’வையடா நாயே போனை..என அலைபேசி இணைப்பினைத் துண்டித்தார் ஜெம்பு. 
தொடர்ச்சியாகப் பல்வேறு இலக்கங்களிருந்து ஓயாமல் தன் அலைபேசிக்கு வந்து கொண்டிருந்த அழைப்புக்களால் கடுப்படைந்த ஜெம்பு, தன் தொலைபேசியினைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இனிமேல் இந்த ப்ளாக்கும் வேணாம், ஒன்றும் வேணாம் எனும் தீர்க்கமான முடிவினை எடுத்துத் தன் விளிம்போ- லம்போவிற்கு மூடுவிழா வைத்தார்.

எழுத்தாளராகும் ஆசையினை, எதிர்பாராது நிகழ்ந்த சம்பவத்தோடு கைவிட்ட ஜெம்பு, மனைவிக்கு இன்று முதல் நல்ல கணவனாக இருக்க வேண்டும் என உறுதியெடுத்தார். ஜலசலட்சுமிக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதற்காய், ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றார் ஜெம்பு. போகும் வழியில், 
’’ஏன் அண்ணே,   நீங்க தானே திணவெடுக்கும் மனைவியை அடக்க ஆள் தேவை’என்று பதிவெழுதினீங்க; என்று யாரோ கிண்டலுடன் பின்னாலிருந்து அழைப்பது போன்றிருந்தது. 
திரும்பிப் பார்த்தார். யாரையுமே காணவில்லை.

’ஏண்டீ...லட்சு, யாரோ நம்மளைக் கூப்பிடுற மாதிரியிருக்கே. உனக்குக் கேட்டுதாடி?
’’போங்க அத்தான் நீங்க இன்னமும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்களே?
இனிமேலாச்சும் இந்தக் கருமாந்திரம் புடிச்ச நினைப்பை மறந்து தொலையுங்க. 
எனச் செல்லமாக ஒரு ஏச்சுக் கொடுத்து விட்டு;ஜெம்புவின் கையோடு கை கோர்த்துக் கொண்டு ஷொப்பிங் மாலுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.

2 Comments:

VOICE OF INDIAN said...
Best Blogger Tips

வாழ்த்துகள்..!!

Unknown said...
Best Blogger Tips

நல்ல குட்டு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails