Tuesday, August 7, 2012

MONTE CARLO - விமர்சனம்- அட்டகாசம் புரியும் இளம் சிட்டுக்கள்!

வாழ்க்கையில் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஒரு வித்தியாசமான ஆசை இருக்கும். அதுவும் தம் மனதிற்குப் பிடித்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத் தாம் இறப்பதற்கு முன்பதாகப் போய் விட வேண்டும் என்கின்ற ஆசை பல உள்ளங்களின் அடி மனதில் நீண்ட நாட்களாகியும் நிறைவேறாத கனவாகப் பொதிந்திருக்கும். எம் மனதிற்குப் பிடித்த ஒரு இடத்திற்கு நண்பர்களுடன் ஜாலியாகச் செல்கின்ற போது, அதுவும் எமக்கு ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் ஜாலியாகச் செல்லும் போது கிடைக்கின்ற இன்பங்களும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் அந்தக் கணப் பொழுதில் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லை இல்லை என்றே கூறலாம். 
இந்த இன்பங்களையெல்லாம் விட, நாம் சுற்றுலா செல்லும் போது எம்மைப் போன்ற அதே சாயல் உடைய இன்னொரு நபர் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருக்கும் வேளையில் அந் நபர் என்று எம்மை நினைத்து, அவருக்கு கிடைக்கும் அதிசயிக்கத் தக்க விருந்துபசாரங்கள் எமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?ஆம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளம் வாலிபச் சிட்டுக்கள், தாம் இறக்கை கட்டிப் பறக்க நினைத்துப் பிரான்ஸிற்குச் செல்கின்றார்கள். 

கிரேஸ், மெக், எ(ம்)மா ஆகிய மூவரும் தம்முடன் கூட வந்த சுற்றுலாப் பிரயாணிகளைத் தவற விட்டு விட்டுப் பிரான்ஸில் உள்ள ஓட்டலில் தனித்துத் தவித்திருக்கும் போது அவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அது தான் இம் மூவரில் ஒருவராக உள்ள கிரேஸினைப் போன்ற இன்னோர் பெண்ணைச் சந்திக்க நேர்கிறது.அந்தப் பெண் தான் இத் திரைப்படத்தின் கதை நகர்விற்கும், திருப்பு முனைக்கும் கோடிலியா (Cordelia)  எனும் கதாபாத்திரம் மூலம் வலுச் சேர்த்திருக்கிறார். 

பிரித்தானியாவின் ஸ்கொர்ட் பகுதியினைச் சேர்ந்த பணக்கார இளவரசியான கிரேஸினை ஒத்த சாயலை உடைய கொடிலியா; 
ருமேனிய நாட்டிலுள்ள ஏழை மாணவர்களிற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் பிரான்ஸின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான MONTE CARLO பகுதியில் இடம் பெறும் களியாட்ட - கேளிக்கைகளுடன் கூடிய நிதி சேகரிக்கும் வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராகச் செல்வதற்காக பிரான்ஸின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காத்திருக்கிறார். 

இறுதி நேரத்தில் உள்ளூர் விமான சேவை சதி செய்து விட, அவர் மன விரக்தியினால் அக் ஹோட்டலை விட்டு வெளியேறும் சமயத்தில், சுற்றுலாப் பயணிகளாகத் தம் கூட வந்தோரைத் தவற விட்டு விட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கும், மூன்று இளஞ் சிட்டுக்களுள் ஒருவரான கிரேஸினை கொடிலியா என்று நினைத்து பேசக் கூட சந்தர்ப்பம் கொடுக்க விடாது, அவர் தான் உண்மையான கொடிலியா எனும் நினைப்பில் விமானம் மூலம் MONTE CARLO பகுதிக்கு அனுப்பி விடுகின்றார்கள். 

அதிஷ்டவசமாக கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாலியாகத் தம் பொழுதினை Monte Carlo பகுதியில் இராஜ மரியாதைகளுடன் கழித்துக் கொண்டிருந்தோருக்கு திடீரென அசல் கொடிலியா - வந்து கொள்ள கிலி பிடிக்கத் தொடங்குகின்றது. இதன் பின்னரான விறு விறு நிகழ்வுகளையும், ஆள் மாறாட்டம் செய்யும் சிட்டுக்களின் அட்டகாசத்தினையும் நீங்கள் இத் திரைப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

(2011ம் ஆண்டு)- இந்த வருடத்தின் ஜூலை மாதம் 30ம் திகதி ரிலீஸ் செய்யப்பட்ட இவ் MONTE CARLO திரைப்படத்தினை FOX 2000 Pictures வெளியிட்டிருக்கின்றார்கள். தோமஸ் பெசூச்சா (Thomas Bezucha) அவர்களின் இயக்கத்தில், Kelly Bowe அவர்களின் மூலக் கதை அமைப்பில், John Bezucha, April Blair, Maria Maggenti, ஆகிய மூவரின் வசன அமைப்பில் Headhunters எனும் ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப் படத்திற்கு Michael Giacchino அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். 

Selena Gomez, Leighton Meester, Katie Cassidy, Catherine Tate, Pierre Boulanger, Andie McDowell, Cory Monteith ஆகிய நட்சத்திரங்கள் இப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். செலீனா அவர்கள் இரட்டை வேடத்தில் அழகுச் சிலையாகவும், ஆள் மாறாட்டம் செய்து அசத்தும் குயினாகவும் வலம் வந்திருப்பது இப் படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பினைத் தருகின்றது. 

படத்தினை இயக்குனர் தாமஸ் பெசூச்சா அவர்கள் சிறப்பான முறையில் நகர்த்தியிருப்பதோடு, காதல், இரக்கம், சந்தோசம், ரகளை ஆகிய உணர்வுகளிற்கு ஏற்றாற் போல ஒவ்வோர் பாகங்களாகப் பிரித்துப் படத்தின் ஒவ்வோர் பாகத்திலும் ஒவ்வோர் சிறப்பியல்புகள் வெளிப்படும் வண்ணம் தந்திருக்கிறார். உண்மைக் காதல் எத்தனை தூரம் பிரிந்து சென்றாலும் இலகுவில் அழியாது என்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கே எமாவின் காதலனாக நடித்திருக்கும் Cory Monte;  ”எமா சுற்றுலா சென்ற பின்னர் அவளின் தொடர்பேதும் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கத்தில்" கவலையோடு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து பிரான்ஸிற்கு வந்து பிரான்ஸ் நகர வீதிகளில் தனிமையில் அலைந்து தேடுவதனை உணர்ச்சிப் பெருக்கோடு வெளிப்படுத்தியிருக்கிறார். 

Mec எனும் கதாபாத்திரத்தின் மூலம் மேலைத் தேயர்களுக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் பற்றிக் கொள்ளும் காதலினை Luke Bracey அவர்களுடன் சேர்த்து ஆங்காங்க சிறு சிறு உரசல்களாக காட்டியிருப்பது படத்தில் ரொமான்ரிக் இல்லையே எனும் குறையினைத் தீர்த்திருக்கிறது. கொஞ்சம் ரொனான்ஸ், கொஞ்சம் தேடல், கொஞ்சம் சஸ்பென்ஸ், சிறிது ஆதங்கம், சிறிது நகைச்சுவை எனச் சுவாரஸ்யமாக குடும்பத்தோடு 13+ வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து மகிழும் வண்ணம் இப் படம் அமைந்திருக்கிறது. 

முக்கிய குறிப்பு: பிரான்ஸ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாப் பகுதிகளில் அதிகளவானவற்றை இப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதனால், பிரான்ஸ் நாட்டினைப் பார்க்க முடியவில்லையே எனும் குறையுள்ளோருக்கு காட்சிகள் மூலம் ஒரு இன்பச் சுற்றுலாவினையும் வழங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். 

MONTE CARLO: ஆள் மாறாட்டம் செய்து அசத்தும் இளஞ் சிட்டுக்களின் லீலைகள் அடங்கிய சுவாரஸ்யமான நகர்வு.

$20 மில்லியன் அமெடிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட 109 நிமிடங்கள் கால அளவை கொண்ட இப் படத்தின் ட்ரெயிலரினைப் பார்த்து மகிழ:

1 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

கதையெல்லாம் நல்லாத்தானிருக்கு....ஆனா...செலீனா கோமேஸ் படமா? சீ சீ ... வேணாம் மச்சி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails