Tuesday, August 21, 2012

மொறாயஸ் சினி பதில்களும் சிலிர்ப்பூட்டும் அந்த நாட்களும்!

அதெல்லாம் ஒரு காலம் நண்பர்களே! மின்சார வசதி இருக்காது. குப்பி விளக்குகளும், லாம்புச் சிமிலிகளும் கண்ணசைக்க, அதன் மென்மையான வெளிச்சத்தின் பின்னே குஷ்பூவையும், மீனாவையும் மனம் அசை போட்ட காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பும், தமிழீழ வானொலியும், புலிகளின் குரலும்; இரவினில் தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதமும், இடையிடையே விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பும், வெரித்தாஸ் தமிழோசையும், ஆல் இந்திய ரேடியோவும் எம்மைக் கட்டிப் போட்ட காலம் அது. பத்திரிகைகள் வரிசையில் ஈழநாதமும், உதயனும் மாத்திரம் தினசரிப் பத்திரிகைகளாக விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேளை அது.
கொழும்பில் ஞாயிற்றுக் கிழமை வெளியாகும் வீரகேசரி வார வெளியீட்டின் சிறப்புப் பிரதிகள் ஒவ்வோர் செவ்வாய்க் கிழமையும், மூன்று நாட்களின் பின்னர் வன்னிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் வந்து சேரும். பேப்பரைக் கையில் எடுத்ததும், பேப்பரின் தலைப்புச் செய்தி எதுவாக இருக்கும் என்று பார்ப்பது இளசுகளின் வேலையாக இருக்காது. சடாரென மனம் நடுப் பக்கத்தை நாடும். 2000ம் ஆண்டு வரை, வீரகேசரி வாரப் பதிப்பின் நடுப் பக்கம் மாத்திரம் தான் வர்ணப் பேப்பராக வந்தது என நினைக்கின்றேன். 2000ம் ஆண்டின் பின்னர் தான் வீரகேசரிப் பத்திரிகையின் ஏனைய பக்கங்களும் கலர்ப் பதிப்பாக வருமளவிற்கு தொழில்நுட்ப விருத்தி இலங்கையில் ஏற்பட்டது எனலாம். 

என்ன தான் குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளை வாசிகசாலையில் பெரிசுகள் கண்ணில் படாமல் ஒளித்து வைத்துப் படித்தாலும், யாராச்சும் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தவாறு, நெஞ்சம் பட படக்க, உள்ளம் கிறு கிறுக்க  மொறாயஸ் நடுப் பக்கத்தில் தீட்டியிருக்கும் ஓவியத்தையும், இடுப்புத் தெரியும் நடிகை படத்தையும் தான் அதிகளவான இளைஞர்கள் அக் காலத்தில் வீரகேசரியில் தேடிப் படித்துக் கொண்டிருந்தார்கள். மொறாயஸ் யார் என்று இதுவரை ஆராயவில்லை. ஆனால் முகமறியாத அந்த மனிதர் பலரின் சிறுகதைகளைச் சீர்திருத்தி, நல்ல முறையில் பிரசுரிக்குமளவிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். 

நான் அனுப்பிய படைப்புக்கள் சிலவற்றில், மீள் திருத்தம் செய்து, கொஞ்சம் முயற்சி செய்து அனுப்பினால் நன்றாக இருக்கும் எனும் தொனிப் பொருளில் பதில் அனுப்பி, எம் எழுத்துக்களையெல்லாம் செப்பனிட உதவியவர் இந்த மொறாயஸ் என்றால் மிகையாகாது. மொறாயஸ் எழுதும் கதைகளில் உண்மைக் கதை என்ற தலைப்பில் வரும் கதைகள் பல, அக் கால இளைஞர்களின் கை வேலைக்குத் துணையாக இருந்திருக்கிறது என்றால் சொல்லவா வேண்டும்? எம் ஊரில் டீவி பார்க்கும் வசதியில்லாத காரணத்தினால் மொறயஸின் உண்மைக் கதைகள் தான் பலருக்கும் ஒரு கை பார்க்கும் வகையில் இருந்திருக்கிறது என நண்பர்கள் சிலர் தம் அனுபவங்களைச் சொல்லுகையில் உணர்ந்திருக்கிறேன். 

வீரகேசரியின் நடுப் பக்கத்தினைப் புரட்டினாலே போதும். வாரம் ஒரு நடிகை இடுப்புத் தெரியக் காட்சியளிப்பார். அதனைப் பார்த்த பின்னர் மனம் மோனாலிஸா பதில்களைப் படிக்க நாடும். எந்த மாதிரியான கேள்விகள் என்றாலும் அந்த மாதிரி அர்த்தம் நிறைந்ததாகப் பதில் சொல்லும் வல்லமை  மோனாலிஸாவையே சாரும். நம் ஊர்களில் பல பெண்கள் நடிகர்களுக்கு கடிதம் அனுப்பி, பதில் கடிதம் படித்து மகிழுவதற்கும் மொறயஸ் தான் காரணமாக இருந்திருக்கிறார். எந்த நடிகர், அல்லது எந்தத் திரையுலகப் பிரமுகரின் முகவரி வேண்டுமானாலும், வீரகேசரி சினி கேள்வி பதிலுக்கு அனுப்பினால் போதும்! மறுவாரம் மொறயஸ் பதில்களில் அந்தப் பிரபலத்தின் முகவரி மின்னும்.
நான் அறிய, என் வீட்டிற்கு அருகே இருந்த அக்கா ஒருவர் கூட நடிகர் பிரசாந்திற்கு கடிதம் எழுதி அனுப்பி, அவரிடமிருந்து வாழ்த்து மடல் பெற்றுக் கொஞ்ச நாளாக நமக்கெல்லாம் பந்தா காட்டிக் கொண்டிருந்தார். அதே போல் அஜித், விஜய், போன்ற நடிகர்களும் மொறயஸ் பின்னணியில் பல தமிழ்ப் பெண்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்! மொறயஸின் பணி வீரகேசரியோடு நின்று விடாது மித்திரன் வார மலரிலும் பரிணமித்தது. மித்திரனில் அதிகமாக உண்மைக் கதைகளை வரைந்த பெருமைக்குரியவர் மொறயஸ் தான். வன்னி இடப் பெயர்வு, யுத்த காலத்தின் பின்னர் மொறயஸின் படைப்புக்களைப் பத்திரிகையூடே தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை! 

யாராவது மொறயஸ் பற்றி, பரிபூரணமாக அறிந்திருந்தால் ஓர் விமர்சனம் போடுங்கள்! 
மொறயஸ் பற்றியோ, அல்லது அவரது பத்திரிகைப் பணி பற்றியோ முழுமையாக எழுதுமளவிற்கு அடியேனுக்கு அவரது படைப்புக்களுடனான பரிச்சயம் கிடைக்கவில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் எழுதுங்கள் நண்பர்களே! படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 


6 Comments:

தனிமரம் said...
Best Blogger Tips

வீரகேசரியின் தடத்தில் மொறயாஸ் ஒரு மைக்கல்!ம்ம் சினிகேள்வி மறக்க முடியாது அதுவும் அவரின் கேள்வி பதில் இன்றும் மறக்கமுடியாது!ம்ம்

கவி அழகன் said...
Best Blogger Tips

Namakku theriyathunko

K said...
Best Blogger Tips

மச்சி அருமையான பதிவு டா! ஏ. மொறாயஸ் அவர்களை எனக்கும் மிகவும் பிடிக்கும்! வீரகேசரியில் வரும் சிறுகதைகளுக்கு ஓவியம் வரைபவர் இவரே! இந்தியாவில் ஓவியம் பயின்றார் என்று நினைக்கிறேன்!

அதே போல சினி கேள்வி பதில் பகுதியில் “மோனாலிஸா” என்ற பெயரில் பதிலளிப்பவரும் இவர்தான்! இவரது மகளின் பெயரும் மோனல்ஸா என்றுதான் கேள்விப்பட்டேன்!

மோனலிஸா ஓவியத்தின் மீது கொண்ட தீராத காதலினால் அந்தப் பேரை வைத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட சினிமாக்களுடன் மொறாயஸ் அவர்களுக்கு சம்மந்தம் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம்! மறந்துவிட்டேன்!

எப்படி திரு.தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள், ஈழத்து சினிமா பற்றிய தகவல்களை விரல் நுணியில் வைத்திருக்கிறாரோ, அது போல தென்னிந்திய சினிமா பற்றிய அத்தனை தகவல்களையும் தன் விரல் நுணியில் வைத்திருப்பதோடு, பல சினிமாக் கலைஞர்களுடன் நண்பராகவும் இருக்கிறார்!

இன்னும் நிறைய சொலலாம் இவர் பற்றி!

இப்பதிவினை எழுதியமைக்கு மிக்க நன்றி நிரூபன்!

Admin said...
Best Blogger Tips

அவரின் ஓவியங்கள் அதிகமாக வீரகேசரிக் குடும்ப பத்திரிகையான , மித்திரன் வாரமலரின் பெரும்பாலான பக்கங்களை நிறைத்திருக்கும். அதிலும் அவரது பங்களிப்பு அதிகம்தான்.

பழைய நினைவுகளை புரட்ட உதவியதற்கு நன்றிகள் சகோ!

Unknown said...
Best Blogger Tips

பதிவை வாசிக்கும்போதே யோசித்துக் கொண்டிருந்தேன் சிறுகதைகளுக்கு படம் வரைபவர் மொறாயஸ், சினி கேள்வி பதில் மோனாலிசா என்னடா நிரூபன் மாறி எழுதிவிட்டாரோ என....பின்னூட்டத்தில் மணி சொல்லிட்டார்! :-)
இருவரும் ஒருவரே என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

பின்னூட்டம் ஊடாக கருத்துப் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி,
தவறினைச் சுட்டிக் காட்டிய மணி, மற்றும் ஜீ ஆகிய நட்புக்களுக்கு விசேட நன்றி
தற்போது பதிவில் மோனாலிஸா, மொறாயஸ் பற்றிய திருத்திய கருத்துக்களைச் சேர்த்திருக்கிறேன்.

நன்றி நண்பர்களே

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails