Sunday, December 11, 2011

அம்மம்மா குழலும் அந்த மாதிரி நினைவுகளும்!

எங்கள் மனதில் ஆழப் பதிந்து விட்ட பால்ய கால நினைவுகள் எப்போதும் சுகம் தரவல்ல அழகிய வண்ணக் கோலங்கள். அந் நினைவுகள் மீட்டிப் பார்க்கையில் நெக்குருக வைத்து மனதில் எல்லை இல்லா இன்பம் தரவல்ல சக்தி படைத்தவை. நண்பர்களைப் பிரிந்திருக்கும் பொழுதுகளில், தனிமையில் நாம் இருக்கும் வேளையில்,முதியவர்களாகியிருக்கும் பொழுதுகளில் எம் பால்ய காலக் குறும்புகளை நினைத்து நமக்குள் நாமே சிரித்துக் கொள்வோம் என அனுபவசாலிகள் கூறுகின்றார்கள். இது நிஜமான ஓர் செயல் தான். எம் சிறிய வயதில் எம்மை அறியாது நாம் செய்யும் ஒவ்வோர் செயலும் பிறருக்கு ரசனையூட்டும் விடயங்களாகத் தான் அமைந்திருக்கின்றன.
சின்னஞ் சிறு வயதில் அம்மா சொல்லத் தொடங்கிய பிறகு எமக்கு விரும்பிய பொருட்களைப் பெறுவதற்காக கத்தத் தொடங்குவோம் (குழறத் தொடங்குதல்). இவ்வாறு கத்திக் கூப்பாடு போட்டு எம் பெற்றோருடன் அடம் பிடிக்கும் போது சில நேரங்களில் விசில் அடிப்போம். இதனைக் கீச்சுடுதல் என்று அழைப்பார்கள். சிறு வயதில் எம் நண்பர்களோடு விளையாடி மகிழும் போது விசிலடித்து ஓடிப் பிடித்து விளையாடுவோம். ஆனால் அந்த விசிலுக்கான முழுமையான அர்த்தத்தினை நாம் பெரியவர்களாகிய பின்னர் தான் உணர்ந்து கொள்ளுவோம். கிராமங்களில் பூவரசம் இலையிலும், தென்னோலையிலும் பீப்பி செய்து ஊதிய நினைவுகள் இன்றும் பலரது மனத் திரையில் வந்து போகும் அல்லவா?

கிராமங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் நிஜ விசில் கருவியினை வாங்கி ஊதி ஓசை எழுப்ப முன்பதாக பூவரசம் இலையினை எடுத்து பீடி அல்லது சுருட்டுப் போன்ற வடிவம் வரும் வகையில் சுருட்டி (குழல் போல) வாயில் வைத்து பீ....பீ....பிப்பீ...என ஓசை வரும் வகையில் ஊதி மகிழ்ந்திருப்பார்கள். இதன் பின்னர் தான் கோவில்த் திருவிழாக்களுக்குச் செல்லும் போது பெற்றோர்கள் விசிலினை வாங்கிக் கொடுப்பார்கள். பெற்றோர்கள் விசில் வாங்கி கொடுக்காவிட்டாலும், கோவில்த் திருவிழாக்களில் விசிலினைக் கண்டாலே சிறுவர்களாக இருப்போரின் மனத் துள்ளல் பற்றி வர்ணிக்க முடியாது. அடம் பிடித்து பெற்றோரிடம் அம்மா "பீப்பி..." வாங்கித் தரச் சொல்லிக் கேட்டு வாங்கி விடுவார்கள். 

பீப்பி எனும் சொல் ஊடாக மழலைகள் விசிலைத் தான் அழைப்பார்கள். ஆனால் பெரியவர்கள் பிப்பீ எனச் சொல்லுவது சிறுநீர் கழித்தலையாகும் (ஊச்சா போதல்). கோவில்த் திருவிழாவில் நாம் ஓர் விசிலை வாங்கினால் ஓயாது வீட்டில் ஊதிக் கொண்டிருக்கும் போது பெற்றோர் "நீ என்ன மகுடி போல வீட்டிலை வைச்சு விசில் ஊதிக் கொண்டிருக்கிறாய்? இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பு வீட்டிற்குள் வந்து விடும்" எனச் சொல்லி விசில் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் ஓசை எழுப்ப முடியாதவாறு பயமுறுத்திவிடுவார்கள். விசில்களில் பல வகை உண்டு. சாதாரண விசில் சிறிய அளவில் இருக்கும். இதனை விட, நாதஸ்வரம் போன்ற வடிவில் நீண்ட குழாயுள்ள விசில், கைக்கு அடக்கமான வளைந்த விசில் எனப் பல வகை விசில்கள் உண்டு. இவற்றையும் சிறுவர்கள் பீப்பி என்றே சொல்லுவார்கள்.

நாதஸ்வரம் போன்று நீண்டிருக்கும் இந்தப் பீப்பியினைத் தான் நம்ம ஊர்களில் அம்மம்மா குழல் என்று சொல்லுவார்கள். ஏன் இந்தக் குழலை அம்மம்மா குழல் என்று சொல்லுகிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். அம்மம்மா குழலை அம்மம்மா அன்போடு ஆலயத்திற்கு அழைத்துச் சென்று வாங்கித் தருவதால் அம்மம்மா குழல் என்று சொல்லுகிறார்களா?அல்லது சிறுவர்களின் பார்வையில் அம்மம்மா குழல் எனப்படுவது; தோற்றத்தில் ஏனைய விசில்களை விட பெரியதாக இருப்பதால் தான் அம்மம்மா குழல் என அழைக்கின்றார்களோ என நான் ஐயம் கொள்வதுண்டு. 
சிறிய வயதில் பீப்பீ ஊதுதலில் ஆரம்பிக்கும் விசிலடிக்கும் பழக்கம் நாம் வளர்ந்து கல்லூரியில் - பள்ளியில் படிக்கையில் பொண்ணுங்கள் எமக்கு முன்னே போகும் போது அவர்களை எம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவும் உதவிக் கொள்கின்றது. சில வேளைகளில் நண்பர்களை எம் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவும் விசிலடிக்கின்றோம். தியேட்டருக்குப் போனால் சொல்லவா வேண்டும்? தமிழர்கள் நாங்கள் ஒரு நடிகரின் தீவிர விசிறி என்பதனை தியேட்டரில் உள்ள ஏனையோருக்குப் புரிய வைக்கும் வகையில் படம் முடியும் வரை ஓயாது விசிலடித்துக் கொண்டிருப்போம். பொது நிகழ்வுகளில், சிலரைப் பாராட்டிக் கை தட்டும் சந்தர்ப்பங்களில், அரசியல் கூட்டங்களில் எம் கையினை வாயினுள் வைத்து இயற்கை முறையில் விசிலடிப்பது தமிழர்களின் மரபு அல்லது பழக்க வழக்கம்! ஹி....ஹி...

இன்று நாம் பெரியவர்களாகினதும் ஒரு அம்மம்மா குழலை வாங்கி வைத்து பீப்பீ ஊதினால் எம்மைப் பார்ப்போர் "கழுதை கலியாணம் கட்டி பொண்டாட்டியோட - - - - - -ஊதி மகிழ வேண்டிய வயதில் விசிலடிச்சுக் கொண்டு திரியுது" என்று ஏசுவார்கள். (இடைவெளியில் என்ன சொல் வரும் என்பது நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும்). மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த விசில் அவன் கூடவே வருகின்ற ஓர் அம்சமாக விளங்குகின்றது. என்ன தான் பத்து காசு செலவு செய்து ஒரு செயற்கை விசில் மெசினை வாங்கி வைத்து ஒலி எழுப்புவதை விட, கையினை நாக்கிற்கு கீழ் வைத்து விசிலடிப்பது போல வருமா? ஹே...ஹே.....  

வீதியில் போகும் போது விசில் சத்தம் கேட்டாலே போதும்! நம்மை போலீஸ் யாராச்சும் பின் தொடருகிறார்களா எனும் அச்சம் தான் வரும்! போலீஸ் அதிகாரிகளும், வீதிக் கண்காணிப்பு பிரிவினரும் தமது கடமையின் நிமித்தம் விசில் அடித்து ஏனையவர்களைச் சரியான பாதையில் பயணிக்க வைக்க உதவி புரிவார்கள். போலீஸிடம் இருப்பது பெரிய விசில். நம்மில் சிலர் போலீஸைப் பார்த்தே நையாண்டி பண்ணி, "உங்க விசிலைக் கொடுங்க சார் ஊதிப் பார்ப்போம் என்று கேட்டிருப்போம்!" ஆனால் போலீஸ் கையில் மாட்டினால் சில வேளை நமக்கே விசில் ஊதிடுவார்கள். அதனைத் தான் "மவனே போலீஸ் கையில் மாட்டினால் சங்கு தான்" என மறைமுகமாகச் சொல்லுகின்றோம். அப்புறம் என்ன நீங்களும் விசில் அடிக்க கிளம்பலாமில்லே! 
தலைப்பு விளக்கம்: அந்த மாதிரி: எனும் சொல்லினை ஈழத்தில் சூப்பரான, அருமையான, பிரமாதமான எனும் பொருள் வரும் வண்ணம் பேசுவார்கள். ஆகவே தான் என் மனதில் பதிந்திருக்கும் அருமையான நினைவுகளை மீட்டும் வண்ணம்;தலைப்பில் அந்த மாதிரி எனும் வார்த்தையினைச் சேர்த்திருக்கிறேன். 

29 Comments:

முத்தரசு said...
Best Blogger Tips

நா தான் நா தான்

முத்தரசு said...
Best Blogger Tips

அந்த மாதிரின்னு ஆரம்பிச்சி இந்த மாதிரியா...????

முத்தரசு said...
Best Blogger Tips

விசிலு நா அடிச்சது கேட்டுச்சா?

நீர் அந்த மாதிரி ஆள் இல்லையா?!

மலரும் நினைவுகள் பகிர்வுக்கு நன்றி

முத்தரசு said...
Best Blogger Tips

அப்புறம் அந்த மாதிரி - லிங்க் படிச்சேன். ஓகோ, இவ்வளவு விசயம் வித்தியாசம் இருக்கா? சர்தான் அப்ப நீர் அந்தமாதிரியான ஆள்தான்

vetha (kovaikkavi) said...
Best Blogger Tips

பூவரசங் குழல் என்று நாம் கூறிய ஞாபகம். வாழ்த்துகள். சிறு கட்டுரையின் கீழ் '' தொலைத்தவை எத்தனையோ'' என்று 3 அங்கம் எழுதியுள்ளேன். விரும்பினால் பார்க்கலாம்.
http://kovaikkavi.wordpress.com/2011/04/09/27/

வேதா. இலங்காதிலகம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

நா தான் நா தான்
//

ஆமா பாஸ்.

நீங்களே தான்! வருக வருக என்று வரவேற்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

வணக்கம்
//

வணக்கம் நண்பா!

கோகுல் said...
Best Blogger Tips

அந்த மாதிரி நினைவுகளை வரவழைத்து விட்டீர்கள்!

கோகுல் said...
Best Blogger Tips

அம்மம்மா!விசிலுக்கு இப்படி ஒரு பதிவா?அவ்வவ்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அந்த மாதிரின்னு தலைப்பை போட்டுட்டு, அந்த கில்மா படத்தையும் போட்டா வேற என்னா நினைப்பாங்களாம், நானும் தெரியாம சிபி நாதாரி பிளாக் வந்துட்டோமோன்னு நினைச்சிட்டேன் ஹி ஹி...

shanmugavel said...
Best Blogger Tips

எனக்கும் விசில் நினைவு வருகிறது.தேருக்குப் போனால் விசில் இல்லாமல் திரும்பமாட்டோம்.

Unknown said...
Best Blogger Tips

வீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........
கேட்டதா நிரூ....அந்த மாதிரின்னு வந்த இந்த மாதிரியா போச்சு எந்த மாதிரின்னு கேட்க்காதே அப்புறம் அந்த மாதிரியா போயிரும்........

சீனுவாசன்.கு said...
Best Blogger Tips

நல்லா ஊதறீரு!விசில சொன்னேன்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்! நல்லாத்தான் பீப்பி ஊதியிருக்கிறியள்!பப்பாசி இலை தண்டில ஓட்டை போட்டு பூவரசம் இலையில பீப்பி செய்து சொருகி ஊதிப் பாக்கயில்லையோ?சூப்பர் சவுண்ட் வரும்!

Yoga.S. said...
Best Blogger Tips

"அடம் பிடித்து" பெற்றோரிடம் அம்மா "பீப்பி..." வாங்கித் தரச் சொல்லிக் கேட்டு வாங்கி விடுவார்கள். ////அது வந்து,அந்தக்காலத்தில அடம்பிடிக்கிறதெண்டு சொல்லுறேல்ல. நாண்டுகொண்டு நிக்கிறது எண்டு சொல்லுவினம்.ஹி!ஹி!ஹி!!!

Unknown said...
Best Blogger Tips

என்னமா ஊதுற நிரூபா?

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
பதிவு எனக்கு கடந்த காலத்தை ஞாபகப்படுத்துகிறது....
வாழ்த்துக்கள்...

சுதா SJ said...
Best Blogger Tips

ஹா ஹா... பாஸ் என் அந்தமாதிரி நினைவுகளையும் கிளறி விட்டுட்டீங்களே... அவ்வவ்

சுதா SJ said...
Best Blogger Tips

ஊரில் இருக்கும் போது சின்ன வயசில் கோயில் திருவிழாக்களுக்கு போனால் முதல் கேட்டு அடம்புடிப்பது உந்த அம்மம்மா குழல் தானே........ எவ்ளோ வேண்டினாலும் அப்போ உதன் மேல் உள்ள மோகம் மட்டும் குறைந்தது இல்லை :)

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

அம்மம்மாக் குழல் -மறக்கமுடியுமா? 2 ஆண்டுகளின் முன் திருச்செந்தூர் கோவில் போயிருந்தேன். வெளியில் ஒரு பூவரச மரம். இலை ஒடித்து ஆனந்தமயமாக அம்மம்மாக் குழல் செய்து ஊதினேன். போற/வாற பேர்வழிகள் நட் கழண்ட கேசு என்று யோசித்திருப்பார்கள்.

Unknown said...
Best Blogger Tips

விசில் அடித்தல்!
ஆகா!மலரும் நினைவுகள்
அருமை!


புலவர் சா இராமாநுசம்

Mathuran said...
Best Blogger Tips

பாஸ் அம்மம்மா குழல் என்பது நீளமான விசிலா இல்லையே?;

விசில் ஓரளவு நீளமாக இருக்கும். ஊதும்போது முன்பகுதி பலூன்போல ஒருமுறை நீண்டு பெரிதாகி பின்னர் சுருங்கும். அதைத்தானே அம்மம்மா குழல் என்போம். இப்போதும் நல்லூர் கடைகளில் வாங்கலாம்

கவி அழகன் said...
Best Blogger Tips

Munkil kulayila Pri pakkam balloon kadi irukkume atha uthiddu vidda sound varum , atuthan ammama kulal

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...ஊர் ஞாபகம்.நான் காப்பும்,மாலையும்,ஐஸ்கிறீமும் கேட்டுத்தான் புரண்டு பிரண்டு அழுதிருக்கிறன் !

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி நாதஸ்வரத்தைக் கூட சின்னனில பீப்பீ ஊதறது என்று தான் சொல்லுவேன்... அதைக் கேட்பதற்காய் கோயில்ல எத்தனை மணித்தியாலம் பக்கத்தில போய் இருந்திருக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
பாஸ் அம்மம்மா குழல் என்பது நீளமான விசிலா இல்லையே?;

விசில் ஓரளவு நீளமாக இருக்கும். ஊதும்போது முன்பகுதி பலூன்போல ஒருமுறை நீண்டு பெரிதாகி பின்னர் சுருங்கும். அதைத்தானே அம்மம்மா குழல் என்போம். இப்போதும் நல்லூர் கடைகளில் வாங்கலாம்//

மன்னிக்க வேண்டும் மது! தங்களின் இக் கருத்தினைப் பார்க்கையில் தான் நினைவிற்கு வந்தது! பதிவிலும் மாற்றி விடுகின்றேன்! ரொம்ப நன்றி!

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

Munkil kulayila Pri pakkam balloon kadi irukkume atha uthiddu vidda sound varum , atuthan ammama kulal
//

நன்றி நண்பா,
பதிவில் மாற்றி விடுகின்றேன்.

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

நிரூ அம்மம்மா குழல் என்பது நீண்ட குழலின் முடிவில் ஒரு பலூனினை இணைத்திருப்பார்கள். நாம் அந்த குழாயினூக ஊதிய காற்று பலூனை பெரிதாக்கிய பின்பு நாம் வாயை குழலில் இருந்து எடுத்தபின் அந்த பலூனில் இருந்து வெளிவரும் காற்று குழாயில் இருக்கும் ஒரு சிறிய நாக்கு போன்ற ஒரு தகட்டால் பிரிக்கப்பட்டு வெளிவரும்போது பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று மிகப்பெரும் சத்தம் தரும்.. நானும் தேடிப்பார்த்தேன் படம் கிடக்கவில்லை,இந்த முறை நல்லூர் திருவிழாவில் ஒன்று வாங்கி வலையில் ஏற்றி வைக்கவேண்டும்..

நிரூபன் said...
Best Blogger Tips

@தங்கராஜா கீர்த்திராஜ்

ரொம்ப நன்றி சகோ,
பல வருடங்களுக்கு முன்னர் ஊதியதால் அம்மம்மா குழல் பற்றிய சரியான நினைப்பு எனக்கு வரவில்லை.ர் உங்களோடு மதுரனும், கவிக் கிழவனும் அம்மம்மா குழல் பற்றி விளக்கம் கொடுத்திருந்தார்கள். இதோ பதிவிலும் மாற்றி விடுகின்றேன்.

மன்னிக்கவும் உறவுகளே!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails