Thursday, November 10, 2011

கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஓரங் கட்டுவது எப்படி!

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா? 
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!
எங்களின் தமிழ் மன்னர்கள், மூதாதையர்கள் தங்களின் வளமான நாட்டில் ஆட்சி செலுத்திய காலத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவிய பல அண்டை நாடுகளுக்குத் தம் திறை சேரியிலிருந்து பணத்தினைப் பெற்று உதவி செய்திருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜய நகர நாயக்கர்கள் காலத்தில் இலங்கை, கம்போடியா, சீனா, தாய்லாந்து, எனப் பல நாடுகளுக்குத் தம்மாலான உதவிகளை எம் மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆட்சியில் உள்ளோரின் வசமிருக்கும் எம் தமிழகத்தின் திறைசேரியினைப் பரிசோதித்துப் பார்த்தால் பல கோடிக் கணக்கான பணம் மாயமாக இருக்கும். மக்களிடம் ஓட்டுப் பெற்று மக்களிடம் வரி வாங்கி மக்களின் அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்படுகின்ற பணம் அரசியல்வாதிகளின் இரகசியச் செயற் நடவடிக்கைகளால் சூறையாடப்பட்டு அவர் தம் சுய நலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இன்றும் நாளையும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் வரும் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் பண பலத்தால் தம் கரங்களை வலுப்படுத்தி மக்கள் பணத்தினைச் சூறையாடி வெளித் தெரியாத பல இரகசிய ஊழல்கள் செய்து தம் பிள்ளைகளையும், தம் வம்சத்தினையும் மாத்திரம் வாழ வைக்கின்ற அதி உன்னதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது நாம் அனைவரும் அறியாத ஒன்றல்ல! அப்படியானால் இந்த அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளித்த மக்களின் நிலமை என்பது சந்தேகமேயில்லை கேள்விக் குறிதான்! ஓட்டளித்த மக்கள் அதே நாற்றம் வீசும் தெருக்களிலும், தூசுகள் வந்து மூக்கை அடைத்து தொற்று நோயினை உருவாக்கும் சுகந்தமற்ற காற்றினையும், போதிய வசதிகள் இல்லாத போக்குவரத்தினையும், ஏன் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய வளங்களையும் தான் தம் தேவைகளுக்காக தமிழகத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

எங்கு பார்த்தாலும், சிபாரிசுகளும், ஊழல்களும் எம் பின்னே மலிந்திருந்து எம் சந்ததியின் வாழ்வினை சூறையாடிச் செல்கின்றது. கலைஞரையும், ஜெயாவையும் நாம் நம்பி எத்தனை நாளைக்குத் தான் அடிமைகளாக வாழ முடியும்? ஒரு எளிய உதாரணம் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பதாக உலக வங்கியிடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபாக்களை நிதியாகப் பெற்ற இந்தியாவின் குஜராத் மாநிலம் இன்று உலக வங்கிக்கே இந்தத் தொகையினைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு அளவுள்ள பெரிய தொகையினை உதவி செய்யுமளவிற்கு வளர்ச்சியடைந்து சிறப்பான நிலையில் இருக்கின்றது. ஆனால் எம் தாய்த் தமிழகத்தின் நிலமை என்ன? கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உலகின் மிகத் தலை சிறந்த அபிவிருத்தியடைந்த - பொருளாதாரத்தில் செழிப்புற்று விளங்கும் மாநிலங்கள் வரிசையில் குஜராத் மாநிலமும் முதல் பத்து இடங்களைப் பெற்ற உலகளாவிய மாநிலங்கள் பட்டியலினுள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் பதவியேற்று குறுகிய காலப் பகுதியானாலும் எம் தமிழகத்தில் ஏதாவது முன்னேற்றம் நடந்ததா? கலைஞரின் பெயர் எங்கெங்கே மணக்கின்றதோ, அங்கெல்லாம் தேடித் தேடி தன் கைங்கரியத்தினைக் காட்டிக் கௌரவத்தினை நிலை நாட்ட முயற்சி செய்திருக்கிறார். இதனால் என்ன பயன்? எம் முன்னே வாழ்ந்த தமிழ் மன்னர்கள் செய்த பணிகளுக்கும், இன்று ஆட்சியில் உள்ளோர்கள் செய்கின்ற பணிகளுக்கும் எவ்வளவு வேறுபாடு? ஏன் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் இடம் பெறும் அபிவிருத்தி அல்லது முன்னேற்றப் பாதையினை நோக்கிய செயற்பாடுகள் மந்த கதியில் தானே இடம் பெறுகின்றன. அரசியலுக்கு வருகின்ற அனைவருமே நாளடைவில் மிகப் பெரும் செல்வந்தர்களாக அனைத்துத் துறைகளையும் விலை கொடுத்து வாங்குகின்றளவிற்கு வளர்ந்து விடுகின்றார்கள். ஏன் எமது தமிழ் சினிமா கூட இன்று உதய நிதி மாறன், அழகிரி எனப் பல அரசியல் ஜாம்பவான்களின் கையில் அகப்பட்டுத் தானே தன் நகர்வினை மேற் கொள்கின்றது.

இவர்கள் அனைவரும் பிறக்கும் போது செல்வத்துடனா பிறந்தார்கள்? இல்லையே! இன்னோர் விடயம் ஆசியாவின் முதல் பத்துப் பணக்காரர்கள் வரிசையில் கலைஞர், ஜெயா, உதயநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் பெயர்களும் வந்து கொள்கின்றன. அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் நிலமை? அதே தெருப் புழுதியினைச் சுவாசித்து செத்தொழிவது தானே? காலங் காலமாக இப்படியான அரசியல்வாதிகள் ஆட்சி பீடமேறி தம் வாழ்வை மட்டும் செழிப்படையச் செய்து விட்டு மக்கள் பணமெங்கே என வினா எழுப்பும் போது திறைசேரியில் பல திருட்டுக் கணக்குகளை உருவாக்கி அனைத்தையும் பேலன்ஸ் பண்ணி விட்டுச் செல்கின்றார்கள். ஆனால் மக்களாகிய எமது நிலமை? சரி எம்மைப் பற்றித் தான் கவலை கொள்வதனை விடுவோம்? எம் சந்ததியின் நிலமை? எம் பிள்ளைகள் எம் வம்சங்கள் என அனைவருமே இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்ந்து செத்தோழிவது தானா எம் அனைவரினதும் நோக்கம்?

"அம்மா ஜெயலலிதா மடிக் கணினி கொடுக்கிறா, இதனால் பிள்ளைகளின் கம்பியூட்டர் அறிவு வளர்கிறது” என்று யாராவது சொன்னால் அதனை விட முட்டாள்த்தனமான சிந்தனை உலகத்தில் கிடையாது. நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? எம் சந்ததியின் வளமான எதிர்காலம் பற்றி? எம் நாட்டின் எம் தமிழக மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திருக்கிறோமா? கட்சிக்கு விசுவாசமாக இருப்பதும், கருத்துச் சுதந்திரம் இருந்தும் தமிழகத்தில் மௌனமாக இருந்து மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு தூங்குவதையும் அன்றாடம் வேலைக்குப் போய் உழைத்து இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்வதனையும் தவிர நாம் எம் வாழ்வில் ஏதாவது பயன்மிக்க சிந்தனைகளை நினைத்திருப்போமா? இல்லையே! ஏன் எம்மால் முடியாது?
இன்று தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என்ன தெரியுமா? கருத்துச் சுதந்திரம் - பேச்சுச் சுதந்திரம்! ஒருவன் வன்முறையினைத் தூண்டும் வகையில் பேசினால் அவனைக் கைது செய்து காவலில் அடைக்க இந்தியாவில் சட்டம் உண்டு. (இதற்கு உதாரணமாக கடந்த வருடம் சீமான் அவர்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை குறிப்பிடலாம்) ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தமது தலை விதியை அல்லது தம்மை ஆள்பவரைப் பற்றிய தெரிவிற்குப் பரிபூரண சுந்தந்திரம் உண்டல்லவா? 

இன்று பல ஆயிரம் பதிவர்கள் இருக்கின்றோம். எம் வலைப் பூக்கள் ஊடாக தமிழகத்தின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? எம்மையெல்லாம் ஆளுகின்ற அரசியல்வாதி எத்தகைய நோக்கில் செயற்பட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாதா? எம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாதா?வெறுமனே மொக்கை போடுவதற்கும் கும்மி அடிப்பதற்கும் தான் வலைப் பூ எனும் ஊடக ஆயுதம் இருக்கிறது எனும் கருத்தினைத் தூரத் தள்ளி எறிந்து விட்டு எம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையினைத் தூண்டும் வகையில் எம் வலைப் பூக்களை மாற்ற முடியாதா?

எம் தமிழக மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் நன்கு படித்த கல்வியறிவில் உயர்ந்த அதே நேரம் தொலை நோக்குப் பார்வையுடைய ஊழல் செய்யாத அரசியல்வாதி உருவாக வேண்டும்! இன்றைய காலத்தில் ஆட்சியில் இருப்போரைப் பற்றி நாம் எழுதி அவர்களை மாற்ற வேண்டும் என நினைத்தால் ஒரு வேளை எம் வீடுகளுக்கு ஆட்டோ வரும் என உங்கள் மனங்களில் அச்சம் நிகழலாம்! ஆனால் நாளைய எம் சந்ததிகளின் மனங்களில் ஒரு நல் வாழ்வினையும், தாய் மண்ணின் மீதான வளர்ச்சியினையும் நோக்கிய சிந்தனைகள் உருவாகும் வண்ணம் எம்மால் வலைப் பூக்கள்,சஞ்சிகைகள், ஊடகங்கள் ஊடாகப் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? எத்தனை காலம் தான் ஊழல் நிறைந்த பயனற்ற ஆட்சியின் கீழ் வாழ்ந்து தமிழக மக்களின் எதிர்காலத்தைத் தொலைப்பது? நாம் நினைத்தால் எம்மை ஆள்வதற்குப் புதிய ஒருவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா! 

சினிமாவில் நடித்தோரும், சிறப்புரையாற்றி காலத்தினைக் கவிதை பாடி - கடிதம் எழுதி வீணடிப்போரையும் அரசியல்வாதியாக்கி மகிழ்வதனை விடுத்து எமக்கான மாற்றுத் தேவை வேண்டும் என இளைஞர்கள் அனைவரும் தமிழகம் தழுவிய ரீதியில் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? நாங்கள் தான் எம் வளமான நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவில்லை என்றாலும், எம் சந்திகளாவது தம் எதிர்காலத்தில் நலமோடு நல்வாழ்வு வாழ, தமிழகத்தில் அபிவிருத்திப் புரட்சியின் கீழ் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேற உதவி செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! உங்கள் சிறகுகளை இன்றே விரியுங்கள்! 

இன்றைய விவாத மேடையினூடாக ஒரு விவகாரமான விடயத்தினைக் கையிலெடுத்திருக்கிறேன். அது தான் கலைஞரையும் ஜெயலலிதாவையும், அவர்களின் வாரிசுகளையும் காலாதி காலமாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதை விடுத்து, எம்மால் முடிந்த வரை நாட்டின் நலனுக்காய் பாடுபடும் நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட முடியாதா? இன்று இல்லையென்றாலும், எம் வருங்காலச் சந்ததிகள் வாழ்வானது சிறப்படையும் வண்ணம் இந்தக் கொடூர சூறையாடும் ஆட்சியினை அகற்றி நல்லாட்சி மலரும் வண்ணம் நாம் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் உங்கள் நாற்று வலையின் விவாத மேடை மீண்டும் உங்களுக்காய் திறந்திருக்கிறது! உங்கள் காத்திரமான கருத்துக்களை முன் வைப்பதோடு, எம் தமிழகத்தில் கருத்துப் புரட்சி செய்யும் வண்ணம் எம் வலைப் பூக்களையும் நாம் பயன்படுத்தலாம் அல்லவா?
எண்ணம் - எழுத்து: செல்வராஜா நிரூபன்! 
தயவு செய்து இப் பதிவினை அனுமதியின்றி யாரும் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளங்களில் வெளியிட வேண்டாம்! 
தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான படங்களைத் தன் கை வண்ணத்தால் கணினி வரை கலை மூலமாக அழகுற வடிவமைத்தவர் சகோதரன் "நிகழ்வுகள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "கந்தசாமி" அவர்கள்! அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

77 Comments:

Unknown said...
Best Blogger Tips

நிரூபன்,
வணக்கம்.
இந்தக் கட்டுரை உண்மையைப் படம் பிடிக்கிறதாய் இருக்கிறது. migavum துணிச்சலோடும், நேர்மையாகவும் எழுதியிருக்கிறீர்.

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

நல்ல பதிவு நண்பா!

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ! அருமையானதொரு பதிவு போட்டிருக்கிறாய்! வாழ்த்துக்கள் முதலில்!

இந்த விஷயத்தில் நிறையக் கருத்துக்கள் சொல்ல எனக்கு விருப்பம்! சொல்லுவதற்கான உரிமை இருக்கிறதா? என்றுதான் தெரியவில்லை! ஆனால், நாம் இந்தியாவையோ, தமிழகத்தையோ, எந்தக் காலத்திலாவது வேறு நாடு என்றோ, வேறு மாநிலம் என்றோ கருதியிருக்கிறோமா? ஒரு போதுமே இல்லை!

தமிழகம் என்பது , ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வாழ்வோடும் கலந்துவிட்ட ஒரு தேசம்!

நமது பாடசாலை புத்தங்கங்களில், குறிப்பாக சமயம், தமிழ் புத்தகங்களில், இலங்கையைப் பற்றிப் படித்ததை விட, தமிழகத்தைப் பர்றிப் படித்ததுதான் அதிகம்!

மேலும் நாம் உடுத்தும் உடைகளில் இருந்து, படிக்கும் புத்தகங்கள், சஞ்சிகைகள் வரை எல்லாமே தமிழகத்தில் இருந்து வந்ததுதான்!

முணுமுணுக்கும் பாடல், படபடக்கும் பட்டாசு, சரசரக்கும் காஞ்சிபுரம் பட்டு என எல்லாமே தமிழகம் தான்!

விஜயையா? அஜித்தா? என்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் சண்டை போடுகிறார்கள்!

எங்கோ, வன்னிக்குள், கருவேலங்கண்டலில், ஒரு காட்டுப்ப்பாதை ஓரத்தில் இருக்கும் ஒரு தேனீர் சாலையில் இருக்கும் இரண்டு பழசுகள் எதைப்பற்றி விவாதிப்பார்கள் தெரியுமா?

எம் ஜி ஆர் - சிவாஜி படங்கள் பற்றியதாகவே அவர்களின் பேச்சு இருக்கும்!

பாடகி சித்ராவின் மகள் இறந்த போது, எனது சகோதரி நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்தார்! ( லண்டனில்!)

யாராவது ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி தப்பாக சொன்னால் நான் செம டென்சன் ஆகிடுவேன்! அந்தளவுக்கு அவர் மீது வெறியாக இருக்கிறேன்!

எனவே, தமிழகம் பற்றி மாற்றுக் கருத்துக்கள் சொல்வதற்கோ அல்லது, அங்குள்ள குறைபாடுகள் குறித்து கருத்துரை சொல்வதற்கோ எமக்கு உரிமை இருக்கு என்றே நினைக்கிறேன்!

அந்த நம்பிக்கையில் சில கருத்துக்களை முன் வைக்கிறேன்!

K said...
Best Blogger Tips

ஈழத்தமிழர்களாகிய நீங்கள், இலங்கையைப் பற்றி மட்டும் பேச வேண்டியதுதானே! என்று சொல்வோருக்கு! -

இலங்கையைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஒண்ணுமே கிடையாது! அங்கு அபிவிருத்தி நடக்க வேண்டும் என்றோ, அது ஐரோப்பா போல வளர வேண்டும் என்றோ நான் கனவு காண்பது கிடையாது!

அங்கே எல்லாமே முடிந்து விட்டது! எமது அண்ணன் ஒரு அழகான ஐரோப்பாவை வன்னிக்குள் ஸ்தாபித்தார்!

லஞ்சம் வாங்காத காவல்துறை! ஊழல் செய்யாத அரச அதிகாரிகள், நேர்மை தவறாத பிரதேச தலைவர்கள், நீதி வழுவாத நீதிமன்றங்கள்!, அனைத்து மக்களையும் சமநிலைப்படுத்திய பொருளாதாரக் கட்டமைப்பு! எமது பாரம்பரியங்களைப் பேணும் கலை வடிவங்கள்! என முழுக்க முழுக்க ஐரோப்பிய சாயலில் ஒரு அழகிய குட்டி இராச்சியத்தை அண்ணன் வன்னியில் நிறுவினார்!

ஈழம் மட்டும் கிடைத்திருந்தால், அண்ணன் உலகமே வியக்கும் ஒரு அழகிய தேசத்தை அங்கு உருவாக்கியிருப்பார்! புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களில் உள்ள சர்வதேச சாயலை எம்மில் பலர் கண்டுகொள்வதே இல்லை! வன்னியின் விளிம்பிலே சண்டைகள் தொடங்கிவிட்ட நிலையிலும் அண்ணன் கிளிநொச்சியில், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மியூசியம் ஒன்றைக் கிளிநொச்சியில் கட்டிக்கொண்டிருந்தார் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்?

ஆக, அணுவணுவாக ரசித்து வாழும் ஒரு அழகிய தேசத்தை அண்ணன் உருவாக்கினார்! ஆனால், துரோகம் எம்மைத் தோற்கடித்துவிட்டது!

அந்த அழகிய தேசம் சிதைந்துவிட்டது! எமது கனவெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது! இப்போது நாம் யாருடைய கையிலே சிக்குண்டு இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்!

அவர்களும் லஞ்சம், ஊழல், ஏமாற்று, சுத்துமாத்து என எல்லா நாதாரித்தனமான வேலைகளையும் செய்கிறார்கள்! ஆகவே, இலங்கை ஒரு அழகிய தேசமாக உருவெடுக்கும் என்றோ, சிலர் சொல்வது போல குட்டி சிங்கப் பூராக மாறும் என்றோ நான் நம்பவில்லை!

மேலும் நான் ஒரு இலங்கையன் என்பதை மறந்து ரொம்ப நாளச்சு! எமது தேசியம் சிதைந்துவிட்டது! ஒரு அழகிய நாடு பற்றிய எமது கனவும், கற்பனையும், கருத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்டது!

எமது அண்ணனைத் தவிர வேறு எந்தக் கொம்பனாலும் எம்மைத் திருப்திப் படுத்தவோ, ஆளவோ முடியாது!

எனவே தான், இலங்கையை மறந்துவிட்டு, ஐரோப்பாவில், எம்மை நிறுவிக்கொண்டோம்! இன்னமும் மிச்சமாக ஈழத்தில் இருக்கும் எம் சொந்தங்களுக்கும் வெளிநாடுகள் பற்றிய கனவினை ஊட்டி, அவர்களையும் புலம்பெயர வைத்துவிடலாமோ? எனவும் எண்ணுவதுண்டு!

நிற்க, தமிழகம் மீது, எமக்கு ஈர்ப்பு வருவதற்கான பின்னணி இவைதான்! ஆகவே, தமிழகம் பற்றிக் கருத்துரைப்பதற்கு எமக்கு உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்!

SURYAJEEVA said...
Best Blogger Tips

தோழர், இந்த பதிவை மிக முக்கியமான பதிவர்கள் தான் வெளியிட வேண்டும்... அந்த வகையில் நீங்கள் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி... மேலும், இங்கு ஒவ்வொரு வலை பதிவர்களும் தங்களை தனி தலைவனாக, ஒரு சராசரி எழுத்தாளன் போல் பாவித்து கொள்ளும் மன நிலையில் உள்ளனர்... சினிமா, காதல் கவிதைகள், போன்ற முக்கிய பிரச்சினைகளின் திசை திருப்பும் பதிவுகளுக்கு பின்னூட்டம் என்றுமே இடுவதில்லை என்ற முடிவில் நான் இருக்கிறேன்... கும்மிகள் அவசியம் என்று கருதுபவர்கள் நாட்டு நடப்பையும் நையாண்டியாய் சொல்லி விட்டு செல்லலாம்... ஆனால் இங்கு சமூக அவலங்களை துவைக்கும் நபர்கள் குறைவு, இருந்தாலும் கும்மி பதிவு எழுதும் பதிவர்களும் நாட்டு நடப்புகளை அனாயசமாக சொல்லி விட்டு சென்று விடுகின்றனர்...
அது மட்டுமன்றி புதிதாக இயற்றப் பட்டுள்ள என்ன என்ன செய்யும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்... நாம் விழிப்பதற்கு முன் அரசு விழிப்புடன் தான் திரிகிறது என்பதற்கு உதாரணம் தான் ஒரு நாளைக்கு நூறு குறுஞ்செய்தி என்று ஆகி இப்பொழுது இருநூறு குறுஞ்செய்தி ஆகியிருக்கிறது...
குறுஞ்செய்திகள் சக்தி வாய்ந்த ஊடகமாகி பல நாட்கள் ஆகின்றது, ஆனால் முறையாக யாரும் பயன்படுத்துவதில்லை...
கடைசியில்
விவாதம் செய்பவர்கள்
தன் பக்கம் தவறு என்றால் திருத்திக் கொள்ளும் பாங்கு இங்கு எவருக்கும் இல்லை... ஏனெனில் தான் தவறு செய்ய மாட்டோம் என்ற திடகாத்திர நம்பிக்கை... இது எனக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை... இப்பொழுது தான் ஒரு பெரிய விவாதத்தில் கலந்து கொண்டு உள்ளேன்... நான் எங்கே தவறு செய்கிறேன் என்று அவரிடமே கேட்டு உள்ளேன்... இன்னும் எனக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் என் நிலை என்ன என்பதே எனக்கு தெரியவில்லை...
நான் எப்பொழுதும் கூறுவது போல், எது சரி எது தவறு என்று ஆராயாமல் யார் சரி என்று வாதாடுவதனால் பல விவாதங்கள் பார்வையாளர்களுக்கு புரியவைப்பதை விட, வாதி பிரதிவாதிகளுக்கு புரிய வைப்பதில்லை...
விவாதம் கலை கட்டும் பொழுது கலந்து கொள்கிறேன்
அது வரை
விடை பெறுகிறேன்

SURYAJEEVA said...
Best Blogger Tips

தமிழகம் குறித்து கருத்து கூற அனைத்து மனிதர்களுக்கும் உரிமை உண்டு, ஆனால் இது தமிழ் சார்ந்த பதிவு என்பதால் தமிழ் தெரிந்தவர்கள் யாவரும் பங்கேற்கலாம்...

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, நாம் வாழும் ஐரோப்பா போல, நமது தமிழகமும் மாற வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்காத நாளே இல்லை!

என்னது ஐரோப்பா மாதிரியா? அப்படியானால் நன்கு தொடை தெரியும்படி பெண்கள் கட்டையாக காற்சட்டை அணிய வேண்டுமா? ஆண்களை அடிக்கடி மாற்ற வேண்டுமா? என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்!

ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பற்றி எமது ஊடகங்கள் இப்படியான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்! ஐரோப்பாவின் இன்னொரு முகத்தை எம்மக்களுக்கு படம்பிடித்துக் காட்டாமல் எமது ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன!

இதற்கெல்லாம் பலமான அரசியல் பின்ன்ணி உண்டு! ஒருவேளை ஐரோப்பிய மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எமது மக்கள் அறிந்துகொண்டால், நாமும் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டுவிடுவோம் அல்லவா?

எனவே, எப்போதுமே ஐரோப்பா பற்றிய கெட்ட சிந்தனைகளையே எமது ஊடகங்கள் எமது மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன! முதலில் ஊடகங்களில் இருப்பவர்கள் + ஊடகங்களை நடத்துபவர்கள் மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக வேண்டும்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!நீங்கள் நினைப்பது போல் பதிவர்கள் எவரும் எண்ணமாட்டார்கள்!இது ஒரு சிறப்பான முயற்சி என்று பாராட்டி விவாதிக்கவும் முன் வருவார்கள் என்பது என் அபிப்பிராயம்.ஒரு புதிய அத்தியாயம் எழுதுவதற்கு உங்கள் விவாத மேடை உதவுமென நம்புகிறேன். நம்மிடமே வாங்கி நமக்கே இலவசம் கொடுக்கும் துணிச்சல் தமிழகத் தலைமைகளுக்கு மட்டுமே உண்டு!பழிவாங்குவதையே முதற் கடனாக கொண்டு செயற்படும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை தூர வீச கிளர்ந்தெழட்டும் தானைத் தமிழகம்!

K said...
Best Blogger Tips

மச்சி, இந்தப் பிரச்சனைக்கு நமது கவிஞர் வைரமுத்து எப்போதோ தீர்வு சொல்லிவிட்டார்! அதாவது, ஒரு டி வி சீரியலின் டைட்டில் பாடலில் வைரமுத்து “ ஆசைப்படு பெண்ணே ஆசைப்படு!” என்று குறிப்பிட்டுள்ளார்!

மேலும் இன்னொரு பாடலில் ( சங்கர் மஹாதேவன் பாடியது) “ பறங்கி மலையில் ஏறணுமா? இமயமலைக்கு ஆசைப்படு” என்று எழுதியிருக்கிறார்!

ஆகவே, நாட்டில் மாற்றங்கள் நிகழ வேண்டுமானால், முதலில் தமிழ மக்கள் ஆசைப்பட வேண்டும்!

எப்படி எப்படி எல்லாம் ஆசைப்பட வேண்டும் தெரியுமா? லஞ்சம் இல்லாத நாடு, ஊழல் இல்லாத அரசு, அபிவிருத்தி நோக்கிய பயணம் என பல ஆயிரம் விஷயங்களில் தமிழகம் ஆசைப்பட வேண்டும் !

அதேவேளையில் மீடியாக்களும் மக்களுக்கு ஆசையை ஊட்ட வேண்டும்! ஆசை எதிர்பார்ப்பாக உருமாறும்! எதிர்பார்ப்புக்கள், நாட்டை மாற்றும்!

பாருங்கள்! லண்டனில் தேம்ஸ் நதியிலும், பாரிஸில் சென் நதியிலும் நாள் தோறும் லட்சம் பேர் பயணம் போகிறார்கள்! உல்லாசமாக பொழுதைக் கழிக்கிறார்கள்!

எமது கூவம் ஆறுமட்டும் இன்னமும் நாறிக்கொண்டே இருக்கிறது! கூவத்தில் உல்லாசப் பயணம் போக மக்கள் ஆசைப்பட வேண்டும்! கூவம் தேம்ஸ் நதியாக உருமாற வேண்டும்!

இதற்கெல்லாம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது! ஊழல் செய்யும் ஒவ்வொரு அதிகாரியினதும் வீட்டில், இதற்கான பணம் இருக்கிறது!

தமிழகத்தை நிச்சயமாக லண்டன் போலவோ, பாரிஸ் போலவோ அழகாக்கலாம்! அந்த நம்பிக்கையை, ஆசையை ஊடகங்கள் தான் மக்களுக்கு ஊட்ட வேண்டும்!

ஆனால், தமிழகத்தின் முன்ணணி ஊடகங்கள் மக்களுக்கு ஊட்டியிருப்பது என்ன?

சொல்கிறேன் கேளுங்கள்!

K said...
Best Blogger Tips

மச்சி, முதலில் சினிமா என்ற சாக்கடைக்குள் இருந்து மக்களை மீட்கவேண்டும்! நடிகைகளின் படங்களை முன்னட்டையில் போடும் பத்திரிகைகள், இனிமேல் இரவு நேர பாரிஸின் அழகை முன்னட்டையில் போடட்டும்! “ இதுபோல தமிழகம் மாறுவது எப்போது?” என்று கேள்வி எழட்டும்!

மக்கள் மத்தியில் அபிவிருத்தி பற்றிய ஆசைகள் தீப்பொறியாக பரவ வேண்டும்! “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?” என்று ஒவ்வொருவரும் வினா எழுப்ப வேண்டும்!

அபிவிருத்தியும், சுபிட்சமான வாழ்வும் வெள்ளைக்காரனுக்கு மட்டும்தான் உரித்தானதா? என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்! முதலில் தமிழகத்தில் இருந்து சாமியார்களை விரட்டியடிக்க வேண்டும்!

மூட நம்பிக்கைகளை பரப்புவோரைக் கழுவில் ஏற்ற வேண்டும்! மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும்! அமெரிக்காவில் சாலைகள் போல, அகலமான நெடுஞ்சாலைகள் தமிழகத்தில் வர வேண்டும்!

ஐரோப்பிய அரசுகள் தங்கள் நாட்டு மக்களை எவ்வளவு உன்னிப்பாக பராமரித்து வருகின்றன என்பதை, தமிழக மக்கள் அறிய வேண்டும்! இங்கு மக்களுக்கும் அரசுக்கும் இருக்கும் அந்நியோன்னியம், தமிழகத்திலும் வர வேண்டும்!

K said...
Best Blogger Tips

இந்தியா, உலகில் 4 வது வல்லரசு என்று சொல்லப்படுகிறது! அதன் ஒரு பகுதியாக உள்ள தமிழகத்தில், “ ஒரு வல்லரசு நாட்டில் வாழ்கிறோம்” என்ற உணர்வோடு எத்தனை பேர் இருக்கிறீர்கள்?

ஏனைய வல்லரசு நாடுகளில் வாழும் மக்களின் மனோதிடம், நம்பிக்கை, தைரியம், சுதந்திரம்..... இதெல்லாம் தமிழக மக்களிடம் இருக்கிறதா? இருக்க வேண்டும் !

நாம் வல்லரசு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற தினவு வேண்டும்! பாரதி கத்திக் கத்தி சொன்னான், பாரதிதாசன் ஓங்கிக் குரல் கொடுத்தான்... எத்தனை பேர் செவிமடுத்தோம்?

எமது ஆட்சியாளர்கள் இன்னமும் எம்மை ஏய்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! நிரூ சொல்வது போல, ஐயாவோ, அம்மாவோ எமக்குப் பொருத்தமானவர்களே இல்லை!

எமக்கு இன்னொரு தீப்பொறி வேண்டும்!

யார் அவர்?

K said...
Best Blogger Tips

முதலில் தமிழகத்தில் காவல்துறை சீரமைக்கப்பட வேண்டும்! காவல்துறை நவீனமாக்கப்பட்டு, இலஞ்ச ஊழல் ஒழிப்பை காவல்துறையிடமிருந்து தொடங்க வேண்டும்!

இலண்டன் போலீஸ் போல, அமெரிக்கப் போலீஸ் போல, தமிழகப் போலீசும் சக்தி மிக்கதாக மாற வேண்டும்!

மேலும் நாங்கள் இங்கு ஐரோப்பாவில், அகதிகளாக வாழ்கிறோம்! ஒவ்வொருமாதமும் இந்த நாட்டு அரசாங்கம் எமக்கு தரும் பணத்தின் தொகை உங்களை வியக்க வைக்கும்!

ஒரு ஃபிரெஞ்சுக் குடிமகனுக்கு இருக்கும் சகல உரிமைகளும் எமக்கும் இருக்கின்றன! எங்கள் மீதே, இவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்றால், தங்கள் மக்கள் மீது, இந்த அரசுகள் எவ்வளவு அக்கறை செலுத்துவார்கள்?

இதனை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்!

நிவாஸ் said...
Best Blogger Tips

உறவுகள் நிரூபன் மற்றும் ஐடியாமணி,

தமிழ் நாட்டில் இருக்கும் உண்மைத் தமிழ் மக்கள் யாரும் என்றுமே ஈழத்தமிழ்ரை பிரத்துப் பார்ப்பதில்லை, அதில் சில வந்தேறிக் கும்பலையும், தமிழன் மீதும் அவன் திறமை வீரம் சிறப்பு ஆகியவற்றால் பொறமை கொண்ட சில வக்கத்தவர்களையும் தவிர.

இறுதிகட்டப் போரில் நடந்த காட்ச்சிகளை (வெட்டப் பட்ட) கண்டு, கையலகதவர்களாய் கண்ணீர் வடித்து, வாய்ப்பு வந்தால் மீண்டும் களமாடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் உண்மைத்தமிழர்கள் உண்டு.

அங்கே இருந்து கஷ்ட்டப் படும் தமிழர்க்கும் சரி, தமிழ் நாட்டில் அரசியல் வாதிகளிடம் ஏமாந்திருக்கும் தமிழர்களும் சரி, தமிழ் நாட்டில் இன்னும் முகாம்களிலும் இருக்கும் தாயகம் திரும்பியோரும் சரி, வெளிநாடுகளில் ஏக்கத்தோடு வாழும் புலம்பெயர் தமிழரும் சரி மகிழ்ச்சியுறும் நாள் தொலைவில் இல்லை. மீண்டும் வருவோம் தலைநிமிர்வோம் நாம்.

நீங்கள் பதித்திர்க்கும் இந்தப் பதிவு என் மனதில் தோன்றி பல வருடங்கள் ஆகிறது. நீங்கள் சொல்வதுபோல் தனலமற்ற ஒரு தலைவன் கிடக்கப் போவது உறுதி. இந்த பன்றிக் கூடங்களை விரட்டியடிக்கப்பட்டு அரசியல் மீண்டும் சுத்தமாக்கப் படும்.

மக்களிடம் இப்பொழுது விழிப்புணர்வு அதிகம் காண முடிகிறது. சில தட்டுக்கெட்ட ஜென்மங்களால் தான் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

K said...
Best Blogger Tips

மேலும் கருத்துச் சொல்வதில் எனக்கு இன்னொரு பயமும் இருக்கிறது, பொதுவாக கருத்துச் சொல்பவர்களை நாம் மதிப்பதில்லை! அதனைப் பொறுமையாகக் கேட்பதும் இல்லை!

“ எலே, பேச ஆரம்பிச்சுட்டன்லே, ஓடுலே” என்று ஓடுபவர்கள் பலர் இருக்கிறார்கள்! நீளமாக பின்னூட்டம் போடுவதை கேவலமாக நினைப்பவர்களும், கிண்டலடிப்பவர்களும் பலர் இருக்கிறார்கள்!

ஆகவே, நம்மில் எத்தனை பேர் மாற்றங்களை விரும்புகிறோம் என்பதை நாம் முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்!

என்னிடம் பல நூறு ஐடியாக்களும், திட்டங்களும் உள்ளன! ஆனால் எனக்கு கருத்துச் சொல்ல தயக்கமாக உள்ளது!

அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! மேலே ஒரு சில விஷயங்களை மட்டுமே சொல்லியுள்ளேன்!

ஏனைய பிரபல பதிவர்களுக்கு வழிவிடுகிறேன்! அவர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்!

தமிழகம் - ஐரோப்பாவாக மாறவேண்டிய காலம் வந்துவிட்டது!

சிங்கப்பூ, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் இவையும் ஆசிய நாடுகள் தானே!

நாம் என்ன இவர்களுக்குச் சளைத்தவர்களா?

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பா! //இது அவமரியாதையான சொல்.சிரிப்பார் என திருத்திவிடவும்.

K said...
Best Blogger Tips

@நிவாஸ்

நீங்கள் பதித்திர்க்கும் இந்தப் பதிவு என் மனதில் தோன்றி பல வருடங்கள் ஆகிறது. நீங்கள் சொல்வதுபோல் தனலமற்ற ஒரு தலைவன் கிடக்கப் போவது உறுதி. இந்த பன்றிக் கூடங்களை விரட்டியடிக்கப்பட்டு அரசியல் மீண்டும் சுத்தமாக்கப் படும்.

மக்களிடம் இப்பொழுது விழிப்புணர்வு அதிகம் காண முடிகிறது. சில தட்டுக்கெட்ட ஜென்மங்களால் தான் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.//////

நிவாஸ், ஒரு நாடு பற்றிய கனவு, ஒரு அழகிய தேசத்தை நிர்மாணிக்கும் எண்ணம் இவையெல்லாம் எமக்கு நிறையவே இருக்கிறது! ஆனால் ஆண்டு பார்க்க நாடுதான் இல்லை!

ஆனால் உங்கள் கையில் ஒரு அழகிய தேசமும் எட்டுக்கோடி மக்களும் இருக்கிறீர்கள்! தேசியம், கலை, பண்பாடு, மொழி எல்லாமே இருக்கிறது!

ஆனால், ஒரு சில குறைபாடுகளால், நாடு கொஞ்சம் பின்னடைந்து உள்ளது! எனவே, தமிழகத்தை செம்மைப்படுத்தும் பணியில் நாமும் உங்களுடன் கைகோர்ப்போம்! எமது ஆசைகளும், ஏக்கங்களும் உங்கள் மூலமாக நிறைவேறட்டும்!

காத்திருக்கிறோம்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

உங்கள் கருத்துக்களை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பரிவுடன் பரிசீலிப்பார் என்று எண்ணுகிறேன்!!

K said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பா! //இது அவமரியாதையான சொல்.சிரிப்பார் என திருத்திவிடவும்./////

நிரூ, நண்பர் சொல்வது போல இதனை மாற்றிவிடு!

“ சிரிப்பா” என்பது ஈழத்து பேச்சு வழக்கில், ஒரு குற்றமான சொல் இல்லை! அது மரியாதையான சொல் தான்!

ஆனால், இப்படியான முக்கியமான பதிவுகள் எழுதும் போது, ஒரு பிரதேசத்தின் கலோக்கியல் சொல்லை எழுதுவது தவறுதான்! ” சிரிப்பார்” என்றே மாற்றிவிடவும்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

தொடர்ந்து இது போன்ற காத்திரமான பதிவுகளை எழுதவும்.இதனால் புதிய தலைவன் உருவாகுவான்..விஜயகாந்த் போல அவரும் 10 சதவீத வாக்கு வங்கியுடன் முழி பிதுங்கி விட்டத்தை வெறிப்பார்.தமிழ்க மக்கள் பணம் வாங்கிவிட்டு ஓட்டு போடும் காலத்தில் சுயநலம் மக்களிடம் பெருகிவிட்ட காலத்தில் பிரியாணி,பிராந்தி பாட்டில் கிடச்சா போதும்...எல்லா பயலும் திருடன்தான்..என தெளிவாக இருக்கிறார்கள்.கருணாநிதி சாராயக்கடை முதன்முதலில் திறந்ததே தமிழன் சிந்திக்ககூடாது என்பதற்காகதான்.இப்போது வீதிக்கொரு டாஸ்மாக் உருவாகி,குடும்பத்துக்கு ஒரு குடிகாரன் உருவாகி,பிராந்தி குடிப்பது காபி குடிப்பது போல.. ஃபேசன் ஆகி, பெண்கள் அருந்தும் பீர் சக்கை போடு போடும் இக்காலகட்டத்தில்,தமிழன் நரம்பு செத்து விட்டது.அப்புறம் எங்கிருந்து உணர்ச்சி வரும்.இனி தமிழன் எப்போதும் ரோசப்பட மாட்டான்.

K said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

தொடர்ந்து இது போன்ற காத்திரமான பதிவுகளை எழுதவும்.இதனால் புதிய தலைவன் உருவாகுவான்..விஜயகாந்த் போல அவரும் 10 சதவீத வாக்கு வங்கியுடன் முழி பிதுங்கி விட்டத்தை வெறிப்பார்.தமிழ்க மக்கள் பணம் வாங்கிவிட்டு ஓட்டு போடும் காலத்தில் சுயநலம் மக்களிடம் பெருகிவிட்ட காலத்தில் பிரியாணி,பிராந்தி பாட்டில் கிடச்சா போதும்...எல்லா பயலும் திருடன்தான்..என தெளிவாக இருக்கிறார்கள்.கருணாநிதி சாராயக்கடை முதன்முதலில் திறந்ததே தமிழன் சிந்திக்ககூடாது என்பதற்காகதான்.இப்போது வீதிக்கொரு டாஸ்மாக் உருவாகி,குடும்பத்துக்கு ஒரு குடிகாரன் உருவாகி,பிராந்தி குடிப்பது காபி குடிப்பது போல.. ஃபேசன் ஆகி, பெண்கள் அருந்தும் பீர் சக்கை போடு போடும் இக்காலகட்டத்தில்,தமிழன் நரம்பு செத்து விட்டது.அப்புறம் எங்கிருந்து உணர்ச்சி வரும்.இனி தமிழன் எப்போதும் ரோசப்பட மாட்டான்.////////

படிக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கு! இந்த நிலை மாற வேண்டும்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

கலைஞரையும், ஜெயாவையும் நாம் நம்பி எத்தனை நாளைக்குத் தான் அடிமைகளாக வாழ முடியும்? //
நம்பித்தான் ஆக வேண்டும்.இருவரிடமும் 25 சதவீத நிலையான ஓட்டு வங்கி இருக்கிறது.இதை மாற்ற இயலது.குறையவும் இல்லை.தி.மு.க வுக்கு மட்டும் இப்போது குறைந்தது போல தெரிகிறது.அதுவும் நிலையில்லை.எனவே இருவரும் மாறி மாறி ஆட்சி செய்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.சரியான தலைவன் வந்தாலும் அவர் இந்த வாக்கு வங்கியை எட்டி பிடிக்க எம்.ஜி.ஆர் போல இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.

நிவாஸ் said...
Best Blogger Tips

@ஐடியாமணி - உண்மைதான் சகோ நிச்சயம் முடியும்,

ஆனால் அதற்க்கு தடையை இருக்கும் சில விடயங்களை ஆராய முற்ப்பட்டால், அதன் ஆணி வேர் எங்கெங்கோ போகிறது.

தமிழகத்து மீடியாக்களை நல வழிப் படுத்த சொன்னீர்கள் அல்லவா? இதோ இங்கே என் பதிவுகளைப் பாருங்கள்,

http://thanganivas.blogspot.com/

இப்படி ஒரு உண்மை பதிவுக்கு வந்த அனானிமஸ் எத்தனை எத்தனை வசைச் சொற்கள் தான் எத்தனை, இருப்பினும் பல பின்னூட்டங்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணமாகவே இருந்தது.

இதுபோன்ற கோடரிக் காம்புகளையும், புல்லுருவிகளையும் முதலில் அடையாளம் கண்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அடிப்படியான தகவல் தொடர்பு, கல்வி போன்ற முக்கியமான விடயங்கள் அவர்களின் கையில் வெகு நாளைக்கு முன்பு சிக்கி அவ்வப்போது உண்மைகளை திரிக்கவும், வரலாற்றை மறைத்து விழிப்புணர்ச்சியை குறைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோல் ஒன்று இரண்டல்ல பல விடயங்களில் பல துறைகளில் இந்த புல்லுருவிகள் ஊடுருவி படர்ந்து இருக்கிறது. உண்மைத் தமிழ் மக்களை அடித்தட்டு மக்களாய் வைத்து அவர்கள் அனைவரும் குதிரையேறி ஊர்வலம் செல்கிறார்கள். அவர்களை அடையலாம் கண்டு முகத்திரையை கிழித்தலே போதும். தமிழ் நாட்டிற்க்கு பாதி விடிவுகாலம் பிறந்துவிடும்

K said...
Best Blogger Tips

@நிவாஸ்

இதுபோல் ஒன்று இரண்டல்ல பல விடயங்களில் பல துறைகளில் இந்த புல்லுருவிகள் ஊடுருவி படர்ந்து இருக்கிறது. உண்மைத் தமிழ் மக்களை அடித்தட்டு மக்களாய் வைத்து அவர்கள் அனைவரும் குதிரையேறி ஊர்வலம் செல்கிறார்கள். அவர்களை அடையலாம் கண்டு முகத்திரையை கிழித்தலே போதும். தமிழ் நாட்டிற்க்கு பாதி விடிவுகாலம் பிறந்துவிடும் ///////

நிவாஸ், மிக்க நன்றி, உங்களின் அந்தப் பதிவையும் பார்த்தேன்! என்ன செய்ய?

வெளிநாட்டில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் பொத்தாம் பொதுவான கருத்துக்களையே முன்வைக்க முடியும்!

தமிழகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகள் எவை என்பதை உங்களைப் போன்றவர்கள் தான் வெளிக்கொணர வேண்டும்!

குறிப்பாக தமிழகத்தின் சாதீயம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை! ஆனால் அபிவிருத்திக்கு அது ஒரு தடை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்!

K said...
Best Blogger Tips

மச்சி, நிரூ, பதிவைப் போட்டுவிட்டு, நீ எங்கே போய்விட்டாய்?

தமிழகம் எப்படி உருவாக வேண்டும் என்று நான் ஒரு கற்பனை வைத்திருக்கிறேன்! அதனை ஒரு வீடிவாக உங்களுக்கு காண்பிக்க முடியும்!

மச்சி, உனது ஃபேஸ்புக் மெஸ்ஸேஜ்க்கு அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன்!

அதனை, இந்தப் பதிவிலே இணைத்தால், பொருத்தமாக இருக்கும்!

Unknown said...
Best Blogger Tips

நல்ல நடுநிலையோடு எழுதப்பட்ட
பதிவு
இன்று அனைவரி்ன் எதிர் பார்பும் இதுவே!

புலவர் சா இராமாநுசம்

நிவாஸ் said...
Best Blogger Tips

முற்றிலும் உண்மை சகோ,

சாதியம் இங்கு இன்னொரு முட்டுக் கட்டை என்பது மறுக்கமுடியாத உண்மை, ஆனால் ஆறுதலான விடயம் என்னவென்றால், முப்பது நாற்ப்பது வருடங்களுக்கு முன்பிருந்த அளவிற்கு இப்பொழுது சாதிய வெறி குறைந்துள்ளது.

சட்டக் கல்லூரி பிரச்சனை, மற்றும் காரைக்குடி துப்பாக்கி சூடு என்ற இரண்டுமே வெகு காலத்திற்கு பிறகு நடந்தவை

நிவாஸ் said...
Best Blogger Tips

வாழ்ந்து, வளர்ந்து, ஆண்ட ஒரு இனம் இன்னும் அடிமைப் பட்டுக்கிடப்பதேன்? சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இன்னும் எப்படியெல்லாம் சிதைந்துபோக காத்திருக்கிறாய் தமிழா?

http://thanganivas.blogspot.com/2011/10/blog-post_26.html

Unknown said...
Best Blogger Tips

பெரியவங்க செஞ்ச புண்ணியம்ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி தான் இங்கேயும் அதனால் தான் இன்னும் பெரியார்,அண்ணா, MGR இவங்களை வச்சு தான் அரசியல் நடந்துக்கிட்டு இருக்கு.

பெரியார்,அண்ணா, MGR இவங்களை பற்றி முழுமையாய் தெரியாத தலைமுறை வரும் போது மட்டுமே இது எல்லாம் மாறும். அதுவரை இப்படித்தான்

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

இலவசங்கள் என்கிற மிட்டாய் கிடைக்கிற வரையில் இந்த இரு கட்சிகள் அல்லது வளறு இரு கட்சிகள்தான் ஆட்சி நடத்தும்.

இன்றுள்ள அரசியல்வாதிகள் கார்ல் மார்க்சை விட அரசியல் வித்தைகளில் கை தேர்ந்தவர்கள். நேர்மையானவன் அரசியலுக்கு வரமாட்டான்.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மாப்ள , தலைப்பே வில்லங்கமா இருக்கே/ இரு படிச்சிட்டு வறேன்..

Anonymous said...
Best Blogger Tips

இந்த இரு கூட்டமும் நம் முன்னேற்றத்துக்கு பெரும் இடையூறாய் இருந்து வந்தாலும்...நாம் யாருமே விழித்துருக்காத வேளையில் இத்தனை காலம்
இவர்கள் இருவரும் எவ்வளவு கொள்ளை அடித்தாலும்...கேப்மாரித்தனம் பண்ணினாலும்...தமிழகம் முழுதும் சோடை போகாமல் இன்று இருப்பதில் இவர்களுக்கு சிறு பங்கு இருக்கத்தான் செய்கிறது...

இந்த அஜாருதீன்கள் ஆட்டம் முடியும் தருவாயில் உள்ளது...இனி வரும் கொலிக்களும்...அச்வின்களும்
என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வெறுமனே மொக்கை போடுவதற்கும் கும்மி அடிப்பதற்கும் தான் வலைப் பூ எனும் ஊடக ஆயுதம் இருக்கிறது எனும் கருத்தினைத் தூரத் தள்ளி எறிந்து விட்டு எம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையினைத் தூண்டும் வகையில் எம் வலைப் பூக்களை மாற்ற முடியாதா?/// முடியும் மாப்ள .. பூனைக்கு நீங்க மணி கட்டிடீங்க..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஆனால் நாளைய எம் சந்ததிகளின் மனங்களில் ஒரு நல் வாழ்வினையும், தாய் மண்ணின் மீதான வளர்ச்சியினையும் நோக்கிய சிந்தனைகள் உருவாகும் வண்ணம் எம்மால் வலைப் பூக்கள்,சஞ்சிகைகள், ஊடகங்கள் ஊடாகப் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா/// ஹாட்ஸ்ஆப் ..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

எம்மால் முடிந்த வரை நாட்டின் நலனுக்காய் பாடுபடும் நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட முடியாதா?// இது நடக்காதான்னு எதிர்ப பார்த்திட்டு இருக்கோம்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

settaikkaran said...
Best Blogger Tips

பல கருத்துக்களோடு உடன்பாடிருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிடக்கட்சியின் கை ஓங்கியிருப்பதைத் தவிர்க்க முடியாது என்பதே இப்போதைய நிலை. இந்திய தேசீய அரசியலின் பெரும் கட்சிகளுக்கும் நாடு முழுக்க செல்வாக்கு இல்லை என்பதனால், இந்த நிலை நீடிப்பதே இப்போதைக்கு தமிழகத்துக்கு நல்லது என்பது என் கருத்து.

கும்மாச்சி said...
Best Blogger Tips

நிரூ நல்ல கட்டுரை, உண்மையை உரைத்திருக்கிறீர்கள்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி ஒரு 10 நிமிசம் பொறு வேலையாயிருக்கேன் வாறன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணோளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃ
இன்றும் நாளையும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் வரும் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் பண பலத்தால் தம் கரங்களை வலுப்படுத்தி மக்கள் பணத்தினைச் சூறையாடி வெளித் தெரியாத பல இரகசிய ஊழல்கள்ஃஃஃ

மச்சி இது பலருக்குத் தெரியும் வெளியே சொல்லப் பயம்... அதை அங்கிருந்து சொன்னாயால் நீயம ஒரு ரகசியப் பணக்காரன்...

ஆமினா said...
Best Blogger Tips

தம்பி அருமையான கட்டுரை

பலரும் பேச தயங்கும் விஷயமாக தான் இன்றைய தமிழக அரசியலின் சூழ்நிலை. இவ்வளவு ஏன்? ஊடகங்களின் உண்மை நிலையை கூறிய நீதிபதி கட்ஜூக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும்!


நம் கையில் பலமான ஊடகம் உள்ளது. அதை சாதாரண மொக்கை/சினிமா/அஜித்-விஜய் வேலாயுதம் மங்காதா சண்டை என அடக்காமல் பயனுள்ள விஷயங்களில் செலவிட்டால் விரைவில் இல்லையென்றாலும் படிப்படியாம மாற்றம் உருவாக்க முடியும். உங்களின் இந்த பதிவு பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது போல் ஒவ்வொருவரும் மாற்றம் வேண்டி செயல்பட்டால் ஓட்டு வங்கி என்ன? அவர்களையே ஓரம் கட்டி தள்ளிவிடலாம்.!!!

Unknown said...
Best Blogger Tips

நிவாஸின் பதிவுகளும் எனக்கு பிடித்தமான ஒன்று.எப்போதும் பட்டதை வெளிப்படையாகவே எழுதும் குண்ம் அவருக்கு உண்டு. நிவாஸின் கருத்துகளையே வழிமொழிகிறேன். நிரூபனின் அருமையான இந்த பதிவு,நோக்கத்திற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றியும்.

சிவகுமாரன் said...
Best Blogger Tips

தமிழகத்தைப் பற்றிய தங்களின் அக்கறை , இங்கே இருக்கும் பலருக்கு குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு இல்லையே எனும் பொது ஆதங்கமாக இருக்கிறது.
\\அங்கே எல்லாமே முடிந்து விட்டது!///
என்று சொல்லி தமிழகமாவது முன்னேறட்டும் என்று நினைக்கும் ஐடியாமணியின் கருத்துக்கள் மேலும்
எம்மைக் கலங்கடிக்கின்றன.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நிரூ.எம் மீது உள்ள... ஈழத்தமிழர்களின் அக்கறையை உலகிற்க்கு பறை சாற்றும் வகையில் பதிவும் பின்னூட்டங்களும் அமைந்துள்ளன.
மிக்க மகிழ்ச்சி.

சென்னை கூவத்தை சுத்தப்படுத்தி படகுப்போக்குவரத்து தொடங்க மிக அருமையான திட்டம் என் நண்பர் வைத்துள்ளார்.
ஐரோப்பிய தொழில் நுட்பம் மூலம் இதை சாதிக்க முடியும்.
அம்மாவை அணுக முயற்ச்சி எடுத்து வருகிறோம்.
எங்கள் திட்டத்தின் சிறப்பே இதற்க்காக ஒரு பைசா தமிழக அரசு செலவழிக்க வேண்டியது இல்லை.

உணவு உலகம் said...
Best Blogger Tips

ஆக்கமும் ஊக்கமும் தரும் அருமையான பகிர்வு. நன்றி, நிரூ.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!////

இந்தக்காமெடி முதலில் மாறனும்....எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது....
காரணம் ஏதோ இவங்க ரெண்டு பேரும் தான் ஈழத்தவனின் மீட்பர்கள் போல காட்டிக்கொள்வதால்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@அப்பு
நிரூபன்,
வணக்கம்.
இந்தக் கட்டுரை உண்மையைப் படம் பிடிக்கிறதாய் இருக்கிறது. migavum துணிச்சலோடும், நேர்மையாகவும் எழுதியிருக்கிறீர்.//

நன்றி அண்ணே.

இதில் என்ன துணிச்சல் வேண்டிக் கிடக்கு.
ஏதோ என்னால முடிஞ்சதை எழுதியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரெஞ்சுக்காரன்

நல்ல பதிவு நண்பா!
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வணக்கம் நிரூ! அருமையானதொரு பதிவு போட்டிருக்கிறாய்! வாழ்த்துக்கள் முதலில்!
//

நன்றி மிஸ்டர் பவுடர்.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva
குறுஞ்செய்திகள் சக்தி வாய்ந்த ஊடகமாகி பல நாட்கள் ஆகின்றது, ஆனால் முறையாக யாரும் பயன்படுத்துவதில்லை...
கடைசியில்
விவாதம் செய்பவர்கள்
தன் பக்கம் தவறு என்றால் திருத்திக் கொள்ளும் பாங்கு இங்கு எவருக்கும் இல்லை... ஏனெனில் தான் தவறு செய்ய மாட்டோம் என்ற திடகாத்திர நம்பிக்கை...//

நல்ல கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீங்க நண்பா.

மிக்க நன்றி..
உண்மையில் நாம் தான் எம்மிடம் இருக்கும் பல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி கை நழுவ விடுகின்றோம்.

இந்த நிலை மாற வேண்டும்!

குறுஞ் செய்தி பற்றிய புரிதலின்றி வாழுவோரின் மன நிலை மாற வேண்டும்!

குறுஞ்ச் செய்திகளூடாகவும் பிரச்சாரப் போர் முன்னெடுக்கலாம் என்கின்ற நல் எண்ணங்கள் தோன்ற வேண்டும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FRவணக்கம் நிரூபன்!நீங்கள் நினைப்பது போல் பதிவர்கள் எவரும் எண்ணமாட்டார்கள்!இது ஒரு சிறப்பான முயற்சி என்று பாராட்டி விவாதிக்கவும் முன் வருவார்கள் என்பது என் அபிப்பிராயம்.ஒரு புதிய அத்தியாயம் எழுதுவதற்கு உங்கள் விவாத மேடை உதவுமென நம்புகிறேன். நம்மிடமே வாங்கி நமக்கே இலவசம் கொடுக்கும் துணிச்சல் தமிழகத் தலைமைகளுக்கு மட்டுமே உண்டு!பழிவாங்குவதையே முதற் கடனாக கொண்டு செயற்படும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை தூர வீச கிளர்ந்தெழட்டும் தானைத் தமிழகம்!
//

மிக்க நன்றி ஐயா,

ஏதோ என் மனதில் தோன்றியதை பதிவாக்கியிருக்கிறேன். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஏனைய பதிவர்களின் செயல்!
ம்..பொறுத்திருந்து பார்ப்போம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@நிவாஸ்

தமிழ் நாட்டில் இருக்கும் உண்மைத் தமிழ் மக்கள் யாரும் என்றுமே ஈழத்தமிழ்ரை பிரத்துப் பார்ப்பதில்லை, அதில் சில வந்தேறிக் கும்பலையும், தமிழன் மீதும் அவன் திறமை வீரம் சிறப்பு ஆகியவற்றால் பொறமை கொண்ட சில வக்கத்தவர்களையும் தவிர.
//

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா.

பார்ப்போம், இன்னும் எத்தனை நாட்களில் மாற்றம் வரப் போகிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பா! //இது அவமரியாதையான சொல்.சிரிப்பார் என திருத்திவிடவும்.
//

அண்ணே, ஈழத்தில் ஒரு பெண்ணை அவா என்று அழைப்பது மரியாதையின் நிமித்தமே. நான் அந்த வகையில் தான் எழுதினேன்.
நீங்கள் கூறியதும் மாற்றி விட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

உங்கள் கருத்துக்களை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பரிவுடன் பரிசீலிப்பார் என்று எண்ணுகிறேன்!!
//

அப்படிப் பரிசீலனை செய்து தமிழகம் அபிவிருத்திப் புரட்சியில் செழித்தோங்கினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@josiyam sathishkumar

நம்பித்தான் ஆக வேண்டும்.இருவரிடமும் 25 சதவீத நிலையான ஓட்டு வங்கி இருக்கிறது.இதை மாற்ற இயலது.குறையவும் இல்லை.தி.மு.க வுக்கு மட்டும் இப்போது குறைந்தது போல தெரிகிறது.அதுவும் நிலையில்லை.எனவே இருவரும் மாறி மாறி ஆட்சி செய்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.சரியான தலைவன் வந்தாலும் அவர் இந்த வாக்கு வங்கியை எட்டி பிடிக்க எம்.ஜி.ஆர் போல இருக்க வேண்டும் என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.
//

அப்படியென்றால் திமுக விலோ இல்லை அதிமுக இலோ புதிய ஒரு தலைவரை நாட்டின் நலன் பற்றிய முன்னேற்றத்தினைச் சிந்திக்கும் தலைவரை உருவாக்க முடியாதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, நிரூ, பதிவைப் போட்டுவிட்டு, நீ எங்கே போய்விட்டாய்?

தமிழகம் எப்படி உருவாக வேண்டும் என்று நான் ஒரு கற்பனை வைத்திருக்கிறேன்! அதனை ஒரு வீடிவாக உங்களுக்கு காண்பிக்க முடியும்!

மச்சி, உனது ஃபேஸ்புக் மெஸ்ஸேஜ்க்கு அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன்!

அதனை, இந்தப் பதிவிலே இணைத்தால், பொருத்தமாக இருக்கும்!
//

நான் வேலையில் பிசியாகி விட்டேன் மச்சி,

இப்போது அந்த வீடியோவினை இணைத்திருக்கிறேன்!
நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

நல்ல நடுநிலையோடு எழுதப்பட்ட
பதிவு
இன்று அனைவரி்ன் எதிர் பார்பும் இதுவே!
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

பெரியவங்க செஞ்ச புண்ணியம்ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி தான் இங்கேயும் அதனால் தான் இன்னும் பெரியார்,அண்ணா, MGR இவங்களை வச்சு தான் அரசியல் நடந்துக்கிட்டு இருக்கு.

பெரியார்,அண்ணா, MGR இவங்களை பற்றி முழுமையாய் தெரியாத தலைமுறை வரும் போது மட்டுமே இது எல்லாம் மாறும். அதுவரை இப்படித்தான்
//

நல்ல கருத்துக்கள் நண்பா.
நன்றி,
பொறுத்திருந்து பார்ப்போம், எப்போது இந்த மாற்றம் வரும் என்று?

நிரூபன் said...
Best Blogger Tips

@DrPKandaswamyPhD

இலவசங்கள் என்கிற மிட்டாய் கிடைக்கிற வரையில் இந்த இரு கட்சிகள் அல்லது வளறு இரு கட்சிகள்தான் ஆட்சி நடத்தும்.

இன்றுள்ள அரசியல்வாதிகள் கார்ல் மார்க்சை விட அரசியல் வித்தைகளில் கை தேர்ந்தவர்கள். நேர்மையானவன் அரசியலுக்கு வரமாட்டான்.
//

இப்படி நாம் சொல்லிக் கொண்டு காலத்தை வீணடிப்பதனை விட, அந்த நேர்மையான அரசியல்வாதியினை உருவாக்குவதற்கு நாம் முயலலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள , தலைப்பே வில்லங்கமா இருக்கே/ இரு படிச்சிட்டு வறேன்..
//

என்ன மச்சி, நீயா இந்தப் பின்னூட்டம் போட்டது?

ஆச்சரியமாக இருக்கிறதே

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
தமிழகம் முழுதும் சோடை போகாமல் இன்று இருப்பதில் இவர்களுக்கு சிறு பங்கு இருக்கத்தான் செய்கிறது...//

ஹே...ஹே....

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
முடியும் மாப்ள .. பூனைக்கு நீங்க மணி கட்டிடீங்க../

எல்லோரும் பதிவெழுத தொடங்கலாமில்லே..
ஏன் தாமதம்? இப்படியான சிந்தனையினைத் தூண்டும் பதிவுகளையும் நீங்கள் எழுதலாம் தானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@சேட்டைக்காரன்

பல கருத்துக்களோடு உடன்பாடிருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிடக்கட்சியின் கை ஓங்கியிருப்பதைத் தவிர்க்க முடியாது என்பதே இப்போதைய நிலை. இந்திய தேசீய அரசியலின் பெரும் கட்சிகளுக்கும் நாடு முழுக்க செல்வாக்கு இல்லை என்பதனால், இந்த நிலை நீடிப்பதே இப்போதைக்கு தமிழகத்துக்கு நல்லது என்பது என் கருத்து.
//

அண்ணாச்சி,
நீங்கள் சொல்வதும் சரி தான்,

நாம் ஏன் எமது திராவிடக் கட்சியின் பழமைவாதக் கொள்கையினை மாற்றி அக் கட்சியிலிருந்தே மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒருவரைத் தெரிவு செய்வதற்குப் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது?

நிரூபன் said...
Best Blogger Tips

@கும்மாச்சி

நிரூ நல்ல கட்டுரை, உண்மையை உரைத்திருக்கிறீர்கள்.
//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
மச்சி இது பலருக்குத் தெரியும் வெளியே சொல்லப் பயம்... அதை அங்கிருந்து சொன்னாயால் நீயம ஒரு ரகசியப் பணக்காரன்...//

அட, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்ல வாறீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

நம் கையில் பலமான ஊடகம் உள்ளது. அதை சாதாரண மொக்கை/சினிமா/அஜித்-விஜய் வேலாயுதம் மங்காதா சண்டை என அடக்காமல் பயனுள்ள விஷயங்களில் செலவிட்டால் விரைவில் இல்லையென்றாலும் படிப்படியாம மாற்றம் உருவாக்க முடியும். உங்களின் இந்த பதிவு பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது போல் ஒவ்வொருவரும் மாற்றம் வேண்டி செயல்பட்டால் ஓட்டு வங்கி என்ன? அவர்களையே ஓரம் கட்டி தள்ளிவிடலாம்.!!!
//

நன்றி அக்கா, இந்த மாற்றங்கள் நாம் வாழும் காலத்தில் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ரா.செழியன்.
நிவாஸின் பதிவுகளும் எனக்கு பிடித்தமான ஒன்று.எப்போதும் பட்டதை வெளிப்படையாகவே எழுதும் குண்ம் அவருக்கு உண்டு. நிவாஸின் கருத்துகளையே வழிமொழிகிறேன். நிரூபனின் அருமையான இந்த பதிவு,நோக்கத்திற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றியும்.
//

வாங்கோ செழியன் அண்ணா,.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
வாழ்த்துக்கள் நிரூ.எம் மீது உள்ள... ஈழத்தமிழர்களின் அக்கறையை உலகிற்க்கு பறை சாற்றும் வகையில் பதிவும் பின்னூட்டங்களும் அமைந்துள்ளன.
மிக்க மகிழ்ச்சி.

சென்னை கூவத்தை சுத்தப்படுத்தி படகுப்போக்குவரத்து தொடங்க மிக அருமையான திட்டம் என் நண்பர் வைத்துள்ளார்.
ஐரோப்பிய தொழில் நுட்பம் மூலம் இதை சாதிக்க முடியும்.
அம்மாவை அணுக முயற்ச்சி எடுத்து வருகிறோம்.
எங்கள் திட்டத்தின் சிறப்பே இதற்க்காக ஒரு பைசா தமிழக அரசு செலவழிக்க வேண்டியது இல்லை.//

சபாஷ் அண்ணே, இவ்வாறன நல் உள்ளங்களின் பணி தான் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக அமையும்.

உங்களின் முயற்சிக்கு இச் சிறியேனின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

ஆக்கமும் ஊக்கமும் தரும் அருமையான பகிர்வு. நன்றி, நிரூ.
//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
இந்தக்காமெடி முதலில் மாறனும்....எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது....
காரணம் ஏதோ இவங்க ரெண்டு பேரும் தான் ஈழத்தவனின் மீட்பர்கள் போல காட்டிக்கொள்வதால்.....//

நன்றி ராஜ்!

Anonymous said...
Best Blogger Tips

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

SURYAJEEVA said...
Best Blogger Tips

நல்ல விவாதமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அனைவரும் தன்னம்பிக்கை இல்லாமல் கழன்று கொண்டது போல் இருக்கிறது... தீப்பொறியை பற்ற வைத்து விட்டீர்கள், கவலை பட வேண்டாம் பற்றி எரியும்.. என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!

செய்திகளும் செய்தி வரும் சானல்களும் தான் மாறுகின்றன. ஆனால் நிலைமை??என்று நான்
போட்ட ட்விட் ஒன்று நினைவுக்கு வருகிறது!

நிச்சயம் ஒரு புரட்சி ஏற்படுத்தும் வகையில் வலைதளத்தை பயன்படுத்துவதில் தயக்கமில்லை!

ஆனால் என்ன செய்ய இருப்பவர்களைத்தான் திருந்தச்செய்ய வேண்டும்.புதியவர்கள் என்று யாருமே இல்லையே.திராவிடக்கட்சிகள் தான் தமிழகத்தின் போக்கு என்ற சூழல் நிலவுகிறது.நீ ஐந்து வருஷம் நான் ஐஞ்சு வருஷம் என்ற நிலைமைதான் அதனை முயற்சிகளையும் நீர்த்துப்போககச்செய்கிறது!

Kite said...
Best Blogger Tips

சிறப்பான பதிவு நிரூபன். தமிழக மக்களுக்கு இருவருமே சரியில்லாதவர்கள் என்று தெரியும்.
இதைப் பயன்படுத்தி விஜயகாந்த் பத்து சதவிகிதம் வாக்கு வங்கியை உருவாக்கினார்.

வை.கோ மேல் ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரால் தன் கட்சியைக் கூடக் கட்டுக்கோப்பாக
வைத்திருக்க முடியவில்லை.

விஜயகாந்த் ஐந்து வருடங்களுக்கு முன் அரசியலில் நுழைந்தபோது அவருக்கு இருந்த நல்ல பெயர் இப்போது இல்லை. தன்னுடைய தான்தோன்றிதனமான நடவடிக்கைகளால் பெயரைக் கெடுத்துக் கொண்டார். ஆனால் கலைஞர் அல்லது ஜெ காலத்திற்குப் பிறகு ஒரு வெற்றிடம் உருவாகும்போது விஜயகாந்துக்கு அது பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

மக்கள் புதிதாக ஒருவரிடம் ஏமாறத் தயாராக இல்லை. தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு புதிய தலைவர் தலையெடுக்க வேண்டுமென்றால் அது கலைஞர் அல்லது ஜெ காலத்திற்குப் பிறகுதான் நடக்கும்.

செங்கோவி said...
Best Blogger Tips

தற்போதைய நிலையில் இருகட்சிக்குமே போதிய அளவுக்கு ஓட்டு வங்கி உள்ளது. எனவே இப்போதைக்கு மாற்றுக்கான வழியில்லை என்பதே உண்மை..

SURYAJEEVA said...
Best Blogger Tips

http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_14.html

உங்கள் பதிவு இந்த வலை தளத்தில்,
உங்கள் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை..
உங்கள் தகவுலுக்கு

பா.சுடர்மதி பிரான்சிஸ் said...
Best Blogger Tips

கட்டுரையாளர் அவர்களுக்கு,

கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் மாற்றாக ஒருவரை வைப்பது அவசியமாகவும், தமிழினத்திற்கு அத்தியாவசியமாகவும் உள்ளதை மறுக்க முடியாது.

அதே நேரம் அந்த மாற்று தலைமை யார் என்பது ஒருபுறம் இருக்க, அந்த தலைமையை தேர்ந்தெடுப்பவர்கள் யார் என்பதை பார்க்கும் போது காலம் காலமாய் மூளை சலவை செய்யப்பட்டு கையேந்தி காசு வாங்கி விட்டு ஓட்டு போடுபவர்களும், இலவசங்களை நம்பி ஏமாந்த எளியோர்களும் தான் கண் முன் வருகிறார்கள்.

கலைஞர், ஜெயலலிதாவின் குறுக்கு புத்தி அறிந்த அறிவாளிகள் தமிழகத்தை வழிகாட்டும் தலைவரை தேர்ந்தெடுப்பதுமில்லை, அத்தகைய தலைவர்களை எளியோர்களுக்கு இனம் காட்டுவதுமில்லை. வாய் கிழிய கருத்துகளை நாலு பேர் மத்தியிலோ அல்லது சமூக வலை தளங்களிலோ பதிந்து விட்டு அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள்.

மூளை சலவை செய்யப்பட்ட 10 கோடி பாமரர்களாவது வாழும் தமிழகத்தில் அவர்களை மன மாற்றம் செய்யாமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசியல் சார்பான கட்சிகள் மூலமாகவோ அல்லது பொது நல அமைப்புகள் வாயிலாகவோ இந்த பணி நடைபெற்றால் ஒழிய தமிழகத்தில் மாற்றம் என்பது மாறாததாகவே இருக்கும்.

உறுதியும், தமிழின உணர்வும், சீரிய கொள்கைகளும், தொலை நோக்கு அறிவு நுட்பமும் கொண்ட தலைமை தமிழகத்திற்கு கனவாகவே இருக்குமோ என்ற பயம் எழத்தான் செய்கிறது. எம் மக்களை இயந்திர மனிதர்கள் போல எம் அரசியல் கட்சிகள் ஆட்டி வைக்கிறது. சொன்னால் வெட்கக்கேடு தமிழகத்தில் கோவிலுக்கு போய் கடவுளை பார்க்க கூட காத்திருக்க வேண்டியதில்லை, ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை சாதாரண குடிமகன் தூரத்தில் இருந்து பார்க்க கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல். ஏதேச்சதிகார அந்தஸ்தை மக்கள் பிரதிநிதிகளும், அவர்களுக்கு ஏவல் செய்பவர்களாக காவல் துறையும் இருக்கிறது. இதையும் தாண்டி நீதி துறையை அணுகுவதென்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

இலவசங்களில்லாத தமிழகம் இனி வருமா, வீண் திட்டங்களில்லாத வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தை உயர்வு பெற செய்யுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழாமலில்லை.

எங்களுக்கும் கனவு இருந்தது, வன்னியில் உலகமே மெச்ச நல்லதொரு ஆட்சியை நடத்தி காட்டிய நம் தலைவர் வீரத்தின் விளைநிலம் வேலுப்பிள்ளை பிரபாகரன் போல தமிழகத்திலும் ஒரு தலைவர் வரவேண்டும், தமிழகத்திலும் உலகம் மெச்சும் உன்னத ஆட்சி நடக்க வேண்டும் என்று.

எங்கள் கண்பட்டதோ நாங்கள் கண்டு ரசித்த உன்னத ஆட்சி இப்போது இல்லாத சூழல் அங்கு. இங்கேனும் அது பிறக்காதா, இதன் மூலம் அங்கேயும் மாற்றம் வாராதா என்று கனவு காணும் பல்லாயிரம் பேர் இங்குண்டு.

இக்கனவு நிறைவேற ஏதுமறியா பாமரரை மனமாற்றம் செய்தலே முதற் பணி. முக்கிய பணி. இதனூடாக நல்ல தலைவரை இனம் காட்டுவது உங்களை போன்ற நல்லறிஞர் பணி.

நான் தமிழகத்தை சேர்ந்தவன் இல்லை எனக்கு உரிமையில்லை என்றெல்லாம் பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தில் உள்ள பிற நாட்டவரையும் கேளிர்( உறவினர்) என்று உறவு பாராட்டியவன் தமிழன். பிறநாட்டவரேயே உறவினர் எனும் போது தமிழனாகிய நீங்கள் யார்? உங்களுக்கும், உங்களை போன்ற பிற நாட்டு வாழ் தமிழருக்கும் தமிழகம் செழிக்க நல் அறிவுரைகளை, ஆலோசனைகளை வழங்குவதற்கு முழு உரிமையும் உள்ளது.

எங்களை கனவுகளுக்கு வரி வடிவம் கொடுத்து விட்டீர்கள். அதை செயலாக்கம் செய்யும் காலமும், அதை வழி நடத்துகிற தலைமையும் சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் சிறந்த கட்டுரையை வாழ்த்த விரும்பவில்லை. நல்ல தமிழனாக உங்கள் கடமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். கடமையை செய்த தமிழன் நன்றியை எதிர்பார்க்க மாட்டான் என அறிவேன். ஆக வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து பணிக்கு, உங்கள் சமூக பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன்..

Ebenezer joei said...
Best Blogger Tips

எல்லா இளைஞர் மனதிலும் புரட்சி வெடிக்க வேண்டும் என்று ஆசை இருகாத என்ன... எல்லாருக்கும் ஆசைதான்.. ஆனா யாரவது ஒருதர் முன்நின்சு நடத்த வேண்டும்... அண்ணா ஹாசரே மாதிரி யாரவது ஒருதர் நம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும்... அதுவும் ஒரு இளைஞர் ஆகா இருந்தால் ரொம்ப நன்று.... கண்டிப்பாக எல்லா இளைனர்களும் குரல் கொடுப்பார்கள்... ஏன் நான் குட தான் ... என்னுடைய நண்பர்களும் இதை பத்தி தான் பேசி கொண்டு இருப்பார்கள்... நல்ல ஆட்சி வராத என்று... நானும் என் நண்பர்களும் குமுறிக்கொண்டு இருக்கிறோம்... எப்போடா நம் நாடு நல் வழி வரும் என்று... தமிழ் நாடு மட்டும் அல்ல .. இந்திய தேசத்தையே நாம் மாத்த வேண்டும்... இந்த தலைமுறையில் நாம் அதை செய்ய வேண்டும்.. ஏன் என்றால் இந்த தலைமுரைஇல்ல தான் நெறைய வாலிபர்கள் இருகிறார்கள்.. தமிழ் நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க புரட்சி வெடிக்க வேண்டும் என்பது அணைத்து இளைஞர்களுக்கும் ஆசை தான்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails