Wednesday, February 23, 2011

அமைதியைக் குழப்பும் ஆலயங்கள்

’கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஔவையாரின் முது மொழி. ‘’ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள் விளங்குகின்றன.


ஆனால் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்களினால் அதிகாலை வேளையில் ஏற்படுத்தப்படும் அதீத ஒலிகளால் அதிகாலை அமைதிக்குப் பங்கம் ஏற்படுகின்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. ஊரில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வோர் ஆலயங்கள் இருக்கும். அதிவும் இந்த நான்கு திசைகளிலும் உள்ள கோயில்களுக்குள் எந்தக் கோயில் எழுப்பும் ஒலியின் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதில் போட்டி இருக்கும்.

திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச நாட்கள் என்றால் போதும், அதி காலை நான்கு மணிக்கே ஒலி பெருக்கியில் பாடல் போடத் தொடங்கிவிடுவார்கள். வடக்குப் பக்கம் இருக்கிற அம்மன் கோயிலிலை இருந்து ‘பிள்ளையார் சுழி போட்டு நல்லதை தொடங்கி விடு..’ என்று தொடங்க, திடீரெனத் தூக்கம் கலைந்து எழும்பும் தெற்குத் திசைக்காரர், உவன் எங்களை விடப் பாட்டுப் போடவோ? என்ற பாணியில் ‘உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்..’ என்று பாட்டுப் போடத் தொடங்குவார்.

என்னது, வடக்கிலையும் தெற்கிலையும் அதிகாலையிலே அதுவும் நாலு மணிக்கே பாட்டுப் போடத் தொடங்கி விட்டாங்களா என்ற கோபத்தில் இதர கிழக்கு, மேற்குத் திசைக் கோயில்கள் ஆளுக்கொரு பக்திப் பாட்டைப் போட்டு காலை ஏழு மணி வரை வானொலிகளில் இறையோசை ஒலிபரப்பாகுவது போல நடுவிலை உள்ள மக்களின்ரை காதைக் கிழித்து விடுவார்கள்.

இந்த வேதனையினை அனுபவிக்காத பதிவர்கள் கொஞ்சம் கற்பனையில் ஊகித்துப் பாருங்கள். நான்கு திசைகளினாலும் மிகுந்த சத்தமாக பாட்டுப் போடும் போது நடுவில் இருக்கும் மக்களின் நிலை என்னவாகும்? அதிகாலையிலே தூக்கம் கலைந்து விடும். அமைதியான சூழலில் தமது பாடங்களைப் படிக்கலாம் என எழும்பும் மாணவர்களின் மனனம் செய்யும் செயற்பாடுகள் பாதிப்படையும். ஏனைய வீட்டு விடயங்களில் மனதை ஒன்றிக்க முடியாதவாறு எரிச்சல் தான் வரும்.

இப்போதெல்லாம் ஊரிலை இருக்கும் சிறிய கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஆளுக்கொரு ஒலி பெருக்கிகள் வைத்து ஆரோகண, அவரோகண, உச்சஸ்தாயியில் பாடல் போட்டு பாடாய்படுத்துறார்கள் தோழர்களே. தாங்க முடியவில்லை. நாங்களாகவே தூக்கம் கலைந்து எழுந்திருக்க வேண்டிய தேவை இருக்காது. அதிகாலை ஆனால் போதும், இந்த ஆலய ஸ்பீக்கர்களே எங்களைத் துயில் எழுப்பி விடும். இவை தான் இப்போது வட கிழக்கு மக்களின் அலாரம்.

1999ம் ஆண்டில் குடாநாட்டில் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் நடை முறைக்குக் கொண்டு வந்த போது ஆரம்பிக்கப்பட்டு எல்லா ஆலயங்களுக்கும் சடுதியாகத் தொற்றிய தொற்று நோய் தான் இந்த ஒலி பெருக்கியில் பாட்டுப் போட்டு அமைதியைக் குழப்பும் வேலை. அப்போது இந்துக் கலாசார அமைச்சராகவும், தன்னகத்தே ’வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார, இந்து கலாச்சார, இந்தி விவகார, சமுர்த்தி, சமூக சேவைகள் என ஒரு தொகை அமைச்சுப் பெயர்களை வைத்திருந்த முன்னாள் ஒரு அமைச்சர் தான் ஊரிலை உள்ள சிறிய கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஒலி பெருக்கிகளை வழங்கிய கொடையாளி. இவரால் வழங்கப்பட்ட ஒலி பெருக்கிகள் எழுப்பும் அவல ஒலிகளை மன்னிக்கவும் பக்திப் பாடல்களை கேட்டுக் கேட்டே காதெல்லாம் கிழிகிறது என்பது உண்மை.

அதுவும் இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் இவரின் இந்த நற்செயலைப் பாராட்டி பத்திரிகைகளில் சிறிய கோயில்கள் முதல், பெரிய கோயில்கள் வரை ஒலி பெருக்கி வழங்கியதற்காக நன்றி கூறுகிறோம் எனும் தலைப்பில் விளம்பரம் வேறை. காது கிழியிற கிழிவிற்கு இதெல்லாம் தேவையா என்று அப்போது புலம்பியதுண்டு. பத்திரிகைகளில் இவற்றைச் சுட்டிக் காட்டினால் வீட்டிற்கு வாகனம் வரும் என்பதால்- (எனக்கு சிறப்புக் கட்டுரையாளர் விருது வழங்குவதற்காக ஆட்டோ அனுப்புவார்கள்) ஒதுங்கியே இருந்ததுண்டு.

ஆனால் நாலு திசையாலும் போட்டு நொங்கு நொங்கு என்று காலையிலை நொங்கி விடுவார்கள் இந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர். அதுவும் வடிவேல் பாணியில் சொல்வதென்றால் ஒருத்தன் மட்டுமா அடிக்கிறான், ஒரு கூட்டமா எல்லே சேர்ந்து காதைக் கிழிக்கிறாங்கள் பாவிப் பய புள்ளகள்.

ஆலயங்களில் இறைவன் புகழ் பாடும் பாடல்களைப் போடுவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்களை ஏன் அதிக சத்தமாகப் போட்டு காலை வேளை அமைதியை/ தூக்கத்தைக் குழப்ப வேண்டும். இக் கருத்துப் பற்றி உங்கள் ஒவ்வோருவருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கும். அவற்றை அறிய ஆவல்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்னொரு விடயம், ஆலயங்களிலை நீ முந்தி நான் முந்தி என முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய் சாமி தூக்கும் இளைஞர்கள். ஊரிலை கோயில் திருவிழாவிற்கு தோரணம் கட்ட வாடா மச்சான் என்றால் ஓடி ஒளிக்கும் இளைஞர்கள், மச்சான் பின்னேரம் சிரமதானம் இருக்கு, வெளி வீதி துப்பரவாக்க வேணும் என்று கூறியதும் போனையும் ஓப் பண்ணி வைத்து விட்டு ஓடி ஒளிக்கும் இளைஞர்கள் சாமி தூக்க, சாமிக்கு குடை கொடி ஆலவட்டம் பிடிக்க என்றால் போட்டி போட்டுக் கொண்டு ஓடோடி வருவார்கள். அதிவும் சும்மா இல்லை, வேட்டியைக் கட்டி நெஞ்சு தெரிய மேலங்கியும் இல்லாமல், பவுணோ பித்தளையோ என்று தெரியாத அளவிற்கு(உரசிப் பார்த்தால் தானே உண்மை தெரியும்) மொத்தச் செயின் ஒன்றைத் தொங்க விட்ட படி சாமி தூக்க வரும் இந்த அன்பர்களின் உள்ளமே பக்திப் பரவசத்தில் இருக்காது. சாமியைக் கைகளும்,தோள்களும் தாங்க, இவர்களின் கண் பார்வையோ அருகே பக்த வெள்ளத்தில் இருக்கும் பெண்களின் மேல் தான் இருக்கும். அட அட என்ன ஒரு பக்திப் பரவசம்.


இந்த மாதிரி இளைஞர்களின் செயற்பாடுகள் ஆலயத்திற்கும் அதன் பக்திச் செயற்பாடுகளுக்கும் நன்மையளிக்கின்றனவா? பதில் சொல்ல வேண்டியது வாசக உள்ளங்களே.

ஆலயங்களில் ஐயர்மார் படுத்தும் பாடிருக்கே, ஒரு சில கோயில்களில் ஐயர் தான் பெண்களுக்கும் நெற்றியில் பொட்டு வைத்து விடுவார். நெற்றியில் பொட்டு வைக்கும் சந்தர்ப்பத்தில் காலால் உரசி அடிவாங்கிய ஐயர்களும் உண்டு. இந்த மாதிரிச் செயற்பாடுகளிற்கெல்லாம் ஆலயங்கள் வடிகால்களா அமைகின்றனவா?

அண்மையில் அத்தியடியில் உரையாடி விட்டு நண்பர்களுடன் பூங்கனிச் சோலைப் பக்கம் போனேன். அங்கே இரு காதலன் காதலி உரையாடிக் கொண்டிருந்தார்கள். காதலி காதலனைப் பார்த்துச் சொல்லுறா.
காதலி‘இருளப் போகுதடா, இனி இங்கே நிற்பது Safety இல்லைடா செல்லம்.
காதலன்: இப்போ கோயிலிலை ஆட்கள் இருக்க மாட்டாங்கள். நாங்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்குப் போவோம்:))

4 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சூப்பர் நிருபன்! சூப்பரா எழுதியிருக்கீங்க! ஒரு காலத்தில் கோயில்கள் எதுக்காக தோற்றம் பெற்றனவோ, அவையெல்லாம் இப்போது மறைந்திவிட்டன! எல்லாமே வியாபாரம் என்றாகிவிட்டது!!



நீங்கள் கடைசியில் சொல்லியிருக்கும் ட்வீட்ஸ் ம் அருமை!!

Unknown said...
Best Blogger Tips

ம்ம் நல்ல ஆக்கம்..வாழ்த்துக்கள்

Jana said...
Best Blogger Tips

உறங்கும் குழந்தைகளை திடுக்கிடவைத்து எழுப்புதல், இதயநோயாளிகளை இறைபுகழ்பாடியே அனுப்பிவைத்தல், படிக்கும் மாணவர்களை சித்தர்கள் ஆக்குதல் என்பனவற்றைத்தான் இப்போ கோவில்கள் செய்கின்றனபோல!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails